ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன்சேர்ந்து தயாரிக்க, புதுமுகங்கள் சாய் ராஜ்குமார், ராதிகா, பாவல் நவகீதன், மாஸ்டர் அஜய் ஆகியோர் நடிப்பில் பிரம்மா என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் குற்றம் கடிதல் ஓர் அற்புதமான திரைப்படம் .
கோவாவில் நடந்த உலகப் படவிழா, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் உலகப் பட விழா என்ற பல களங்களில் கம்பீரமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறது குற்றம் கடிதல் திரைப்படம் ..
தேவ ஊழியம் செய்யும் தீவிர மதப்பற்றுக் கொண்ட ஒரு பெண்மணிக்கு மகளாகப் பிறந்து, மென் பொறியாளராக பணியாற்றும் மணிகண்டன் என்ற இந்து இளைஞனை மணந்து கொண்டதால் பெற்ற தாயாலேயே புறக்கணிக்கப்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியையான மெர்லின்… அந்த காதல் மனைவியின் மனச் சூழல் உணர்ந்த அற்புதமான கணவனான அந்த மணிகண்டன்….
விபத்தில் ஒரே மகளை இழந்த நிலையிலும் அந்தப் பள்ளியில் பிரின்சிபாலாக பணியாற்றியபடி குழநதைகளின் முன்னேற்றத்துக்கு உழைக்கும் ஒரு நல்ல மனிதர்…. அங்கே ஆசிரியையாக பணியாற்றும் அவரினும் சிறந்த அவரது மனைவி…. கணவனை இழந்த ஒரு ஆட்டோ ஓட்டும் ஏழைப் பெண்மணி…. அவரது ஒரே மகனான பள்ளி மாணவன்…. அந்த ஏழைப் பெண்மணியின் கோபக்கார அண்ணனான ஒரு ஆட்டோ டிரைவர்….
இவர்களை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை .
பொதுவுடைமை மற்றும் தமிழின உணர்வு இவைகளைக் கொண்டு வாழ்கிற — நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற ஒரு தமிழ் ஆசிரியரின் மகனான இயக்குனர் பிரம்மா…
மக்களுடன் நின்று மக்கள் வழியே மக்களைப் பார்க்கும் கோணத்தில் மிக சிறப்பாக இயக்கி இருக்கும் படம் இது .
தவறு செய்பவரின் குற்றத்தை கடிந்து கொள்ளும்போது சில சமயம் அப்படிக் கடிந்து கொள்வதே குற்றமாகிறது . அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடமையின் அங்கமாகவே அப்படிக் கடிந்து கொண்ட கனிவான உள்ளத்தின் கதி என்ன? என்பதே இந்தப் படம் .
அவார்டுகளை குவிக்கும் அதே நேரம் படம் பார்ப்பவர்களை கொஞ்சமும் சோர்வடைய செய்யாமல் விறுவிறுப்பும் சுருசுறுப்புமாய் திரையில் இருந்து கண்களை விலக்க முடியாமல் கவர்ந்து வைத்துக் கொள்வது இந்தப் படத்தின் பெரும்பலம்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய இயக்குனர் இமயம் பாரதிராஜா ” நான் எனது படங்களில் நிஜமாக சொல்ல விரும்பிய விஷயங்களை எல்லாம் பூடகமாக – இடைப்பட்ட நிலையில் — ஒரு மாதிரி ‘வயா மீடியா’ வாகத்தான் சொல்லி இருக்கிறேன். காரணம் நிழல்கள் படத்துக்கு ஏற்பட்ட தோல்வி! அது மட்டும் வெற்றி பெற்று இருந்தால் என் பாதையே மாறி இருக்கும் .
ஆனால் நான் செய்ய முடியாமல் போனதை இந்தப் படத்தில் பிரம்மா செய்திருக்கிறார் .
நான் பல சாதாரண முகங்களை எல்லாம் நடிக்க வைத்து இருக்கிறேன் . ஆனாலும் மேக்கப் போட்டு சில சினிமா விசயங்களை செய்து விடுவேன் . ஆனால் இந்தப் படத்தில் கேரக்டருக்கு பொருத்தமான முகங்களை எளிய முகங்களை புழுதியில் இருந்து கண்டு பிடித்து கொஞ்சமும் மேக்கப் போடாமல் இயல்பாக அந்தந்தக் கேரக்டர்களில் வாழ விட்டு .. அதில் இந்தப் படத்தின் இயக்குனர் பிரம்மா என்னையும் மிஞ்சி விட்டார் .
இந்தப் படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் ராதிகாவை நான் இந்தியாவின் மிகச் சிறந்த மூன்று நடிகைகளில் ஒருவராக சொல்வேன் . குற்றம் கடிதல் என்ற பெயர் முதற்கொண்டு, எதிலும் சமரசம் ஆகாத முழுமையான படம் இது ” என்று பாராட்டியது, இந்தப் படத்தின் தரம் சொல்லும் பதம்.
செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கப் பட்டிருக்கிறது என்பது முக்கியமான சந்தோஷமான விஷயம்.
ஹாலிவுட் நிறுவனமான R V Weinstein எப்படி விருதுகளுக்கான படங்களை தயாரிப்பதில் உலகப் புகழ் பெற்றதோ, அப்படி ஒரு புகழை என் நிறுவனமும் அடையும் ” என்கிறார் ஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் ,
மிகுந்த நம்பிக்கையோடு நம்பிக்கையோடு !
வாழ்த்துகள் !