ஏ எஸ் டி பிலிம்ஸ் தயாரிப்பில் , விதார்த், யோகி பாபு, இளவரசு, முத்துக்குமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் நடிப்பில் ,
விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்துக்கு எழுதியவரும், நீண்ட நெடிய அனுபவம் கொண்ட பத்திரிக்கையாளருமான ன டி. அருள் செழியன் எழுதி , முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் .
குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கமே குய்கோ .
மற்ற பாடங்கள் நன்றாக வந்தாலும் கணக்குப் பாடம் சரியாக வராததால் பெயிலாகும் நபர்களுக்கு மத்தியில் மற்ற எந்தப் பாடமும் ஒழுங்காக வராமல் கணக்கில் மட்டும் நூத்துக்கு நூறு வாங்கி, பெயில் ஆகி, அதனாலேயே டுட்டோரியல் காலேஜ் ஒன்றில் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக பணிபுரியும் தங்கராஜின் (விதார்த்) மாமன் சண்முகம் (முத்துக்குமார்) நியாயமான வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதோடு, மரண வீடுகளுக்கான ஃபிரீசர் பாக்ஸ் அனுப்பும் தொழிலும் செய்பவர் .
வட்டி கொடுக்காமல் ஏமாற்றும் நபர் ஒருவன் , தப்பிக்கும் முயற்சியில் விபத்துக்கு ஆளாகி மருத்துவமனைக்குப் போக, கந்து வட்டிக் கொடுமை வழக்கில் சிக்குகிறார்கள். சண்முகமும் தங்கராஜும்.
உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் ஒரு வயதான பாட்டி இறந்துவிட , துபாயில் இருக்கும் அந்தப் பாட்டியின் மகன் மலையப்பன் (யோகிபாபு) எப்போது வருவான் என்று சொல்ல முடியாத நிலையில், பல நாள் வாடகைக்கு அந்த ஊருக்குப் போகிறது ஃபிரீசர் பாக்ஸ்.
ஃபிரீசர் பாக்ஸ் ‘செட் பண்ணிக் கொடுத்து விட்டு வந்து விடு ‘என்று மாமன் அனுப்பி வைக்க, இரவு ஐ பி எல் பார்க்க சென்னை போகும் திட்டத்தில் இருக்கும் தங்கராஜ் ,செலவுக்கு மாமா தரும் பணத்துக்காக , செட் பண்ணிக் கொடுத்து விட்டு உடனே வந்து சென்னை கிளம்பும் அவசரத்தில் ஃபிரீசர் பாக்ஸ் உடன் கிராமத்துக்குப் போகிறான்.
அங்கே சில சூழல்கள், போலீஸ் தேடுவது போன்ற காரணங்களால், ஐ பி எல் லை தியாகம் செய்து , தங்கராஜ் அங்கேயே தங்க வேண்டி வருகிறது.
மலையப்பன் வந்து அடக்கம் முடிந்த பிறகு, தனது அம்மா கடைசியாகக் ‘குடியிருந்த கோயில்’ ஆன அந்த ஃபிரீசர் பாக்ஸ் தனக்கு நிரந்தரமாக வேண்டும் என்கிறான் மலையப்பன்.
காதலியின் (துர்கா) அண்ணன் அவமானப்படுத்தியதால் மலையப்பன் துபாய் போனது.. .. அதனால் அவனது காதல் கோமாவுக்குப் போனது…. கணக்கில் மட்டும் பெயில் ஆகும் மலையப்பனின் அக்கா மகள் (பிரியங்கா) …. மகளை மலையப்பனுக்கு கட்டிக் கொடுக்க விரும்பும் அக்கா.. அதற்குத் துணை போகும் ஒண்ணு விட்ட அக்கா ( வினோதினி வைத்தியநாதன்) என்று …
மரத்தின் தண்டில் இருந்து அழகாகக் கிளைகள் விரிவது போல கிளைக்கதைகள் விரிய, கடைசியில் மொத்த மரமும் கொடுக்கும் கனிக் குவியலே இந்தப் படம் .
இது ஒர் இயக்குனரின் படம் .
எளிய இயல்பான அதே நேரம் வித்தியாசமான கதை , அதில் இருந்து பூத்துக் குலங்கும் வண்ணமயமான திரைக்கதை, காதலியின் இடுப்பு நிமிண்டல் போல – வலிக்க வைக்காமல் – சுகிக்க வைக்கும் வசனங்கள் , மண் மணம் , நிறம், திடம் மாறாத முகங்கள், ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் ஆழமான இயக்கம்…
ஆம் இது டைரக்டர் அருள் செழியன் படம்.
வட்டிக்கு விடுபவனை நல்லவன் என்று சொல்லி கதை பண்ண ஒரு தில் வேண்டும். தோல் இருக்க சுளை முழுங்கும் பெரிய பெரிய ‘ஆவோஜி.. என் கிட்ட கடன் வாங்கி சாவுஜி ‘டைப் பைனான்சியர்களைக் கண்டு கொள்ளாமல் …
இருக்கிற காசில் பாவம் பார்த்து வட்டிக் கடன் கொடுத்து அதை பிழைப்பாகக் கொண்டு வாழும் நபர்களை பிடிக்கும் ஊழல் போலீஸ் (கருணை ராஜா) .. பாதிக்கப்பட்டவர்களை கந்து வட்டி வழக்குப் போடச் சொல்லி ஏற்றி விட்டு காசு புடுங்கும் அவர்களது குணம்…
கணக்குப் பாடத்தை சரியாகச் சொல்லிக் கொடுக்காத காரணத்தால், வாழ்வை இழக்கும் மாணவர்களின் நிலை,
ஒண்ணுக்கும் உருப்படாதவர்கள் அல்லது அயோக்கியர்கள் செத்துப் போனால் கூட அவர்களுக்கு மாவீரர் நாள் கொண்டாடி , வீர வணக்கம் செலுத்தி , காலத்தில் வென்ற நம் போராளிகளை கேவலப்படுத்தும் அயோக்கியத்தனம்
இவற்றை சீரியசாகவும் கிண்டலாகவும் சொல்லும் படம், இன்னொரு பக்கம் பாட்டியின் மரணத்துக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கும் போஸ்டர்கள் , கல்யாணத்தின் போது, மாமா எங்களை ஏமாத்திட்டாரு என்று இளம்பெண்கள் வைக்கும் தட்டிகள்… என்று எளிய மக்களின் ரகளையான ரசனையான கிரியேட்டிவிட்டி சிந்தனையை கொண்டாடவும் செய்கிறது .
அதுதான் இந்தப் படத்தின் பெரிய பலம் .
அட்டாக் பாண்டி மேட்டர், மாத்தி யோசி உத்தியின் ரகளை .
இப்படி படம் முழுக்க பல கல கல லக லக
பொதுப் புத்தியில் பாவம் என்று நினைக்கப்படுபவர்களை விமர்சிக்க ஒரு தைரியம் வேண்டும் . அது அருள் செழியனுக்கு இருக்கிறது என்பதைக் காட்ட , நூறு நாள் வேலைத் திட்ட ஆட்களை அவர் நக்கல் செய்திருப்பது உதாரணம் .
அதே நேரம் யோகிபாவுக்காக வடிவேலுவை கிண்டல் செய்து இருக்கும் சினிமாத்தனமும் உண்டு .
யாரைச் சொல்ல யாரை விட?
விதார்த், யோகி பாபு , இளவரசு, கருணை ராஜா, பிரியங்கா, துர்கா, முத்துக்குமார், மொசக்குட்டி , படத்தில் வரும் அப்பத்தாக்கள், அத்தைகள், மாமாக்கள், மாமன் மகள்கள், பெரிசுகள், சிறுசுகள், பொடிசுகள் , என்று அத்தனை நடிக , நடிகையரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நம்மை தியேட்டரில் இருந்து தூக்கிப் கொண்டு போய் கிராமத்தில் , சாவு வீட்டில், பக்கத்து வீட்டுப் பாட்டி திண்ணையில் போடுகிறது .
அந்தோணிதாசனின் இசை மற்றும் குரல் அருமை . ஏய்… சிவப்பழகி பாடலின் எதிரொலி படம் பார்த்து முடித்த பின்னரும் வீடு வரை கூடவே வருகிறது.
இயக்குனர் அருள் செழியன், கடல் வேந்தன் இருவரின் பாடல் வரிகளிலும் எளிமையும் ஈர்ப்பும் .
வறண்டு கிடக்கும் முதல் பத்து நிமிஷம்…. ‘ஃபிரீசர் பாக்சை மாட்டி விட்டு எல்லாம் யாரும் வர முடியாது; கூடவே ஒரு ஆள் எப்போதும் இருப்பார் ‘என்ற லாஜிக்குக்கு எதிரான காட்சி…
ஒரு நிலையில் சில நிமிடங்களுக்கு துண்டு துண்டாக சிதறும் காட்சிகள் .
இப்படி சில சிறு குறைகள் இல்லாமல் இல்லை.
இன்னும் சிறப்பான படமாக்கல் கூட தேவைப்படும் படம் இது .
ஆனால் ஒரு நல்ல ரசிகன் இந்தப் படத்துக்கு கொட்டிக் கொடுக்க வேண்டிய மானியங்களுக்கு முன்னால் இவை எல்லாம் குறைகளே அல்ல.
குய்கோ என்ற பெயருக்கு குடியிருந்த கோயில் என்று விளக்கம் சொன்னாலும் ஜெய்ஹோ என்ற நல்ல உணர்வை சில மதவாத சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஆழ் எள்ளலும் இந்தப் பெயரில் இருக்கிறது என்பது பிரம்மாதமான விஷயம்.
சும்மா தலைகளை வெட்டி வீழ்த்துவது, கனரக ஆயுதங்கள் கொண்டு மனிதர்களைத் தாக்கி திரை முழுக்க ரத்தம் தெளிப்பது அல்ல சினிமா.
சமூக விரோத சக்திகளின் தலையை வெட்டி வீழ்த்தும் ஆயுதமாக , அயோக்கியத்தனத்தைக் குத்திக் கிழித்து நல்ல விசயங்களை ரசிகனின் சிந்தனையில் தெளிப்பதுதான் சினிமா என்பதற்கு கம்பீர உதாரணம் குய்கோ
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————-
அருள் செழியன், ராஜேஷ் யாதவ், அந்தோணி தாசன், விதார்த், யோகி பாபு, இளவரசு, கருணை ராஜா ,