ஆமிர்கான் புரடக்ஷன்ஸ் மற்றும் வயாகாம் 18 தயாரிப்பில் ஆமிர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங், நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கி இருக்கும் படம். டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் ராபர்ட் செமிக்ஸ் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபோரஸ்ட் கம்ப் என்ற அமெரிக்கப் படத்தின் ரீமேக் .
கால்கள் பாதிக்கப்பட்டு உடல் பிரச்னைகளும் அதையும் மீறிய மனத் தடைகளும் இருந்து அவற்றை வென்று வாழ்ந்த கள்ளங்கபடு இல்லாத லால் சிங் சத்தா என்ற மனிதனின் வாழ்வே இந்தப் படம்.
அப்பா இல்லாத நிலையில் கிராமத்தில் விவசாயம் செய்யும் அம்மாவால் வளர்க்கப்பட்டு , முட்டாள் என்று எல்லோரும் பரிகசிக்கப்பட்டு எனினும் அம்மாவின் நம்பிக்கையால் வாழ்ந்து , பள்ளியில் ரூபா என்ற சக மாணவிச் சிறுமியின் அன்புக்கு பாத்திரமாகி அவளால் மனத் தடைகள் விலகி முன்னேறுகிறான் லால் . குடும்ப ஏழ்மை காரணமாக எப்படியாவது பணக்காரியாக வேண்டும் என்று எண்ணுகிறாள் ரூபா .
இவர்களின் வளர்ச்சியோடு அந்தந்தக் காலக்கட்ட அரசியல் சமூக நிகழ்வுகளும் ஒரு அங்கமாக படத்தில் வருகிறது.
லால் ( ஆமிர்கான்) தனது குறைகளை வென்று அன்பே முக்கியம் என்று அறிந்து, மிலிட்டரியில் சேர்ந்து சக வீரன் பாலையாவின் ( நாக சைதன்யா) அன்புக்கு பாத்திரமாகி, கார்கில் போரில் பாலையாவை இழந்து. தீவிரவாதி ஒருவனையே காப்பாற்றி பிறகு ரிட்டையர் ஆகி பாலையாவின் ஆசைப்படி ஜட்டி பனியன் தயாரிக்கும் கம்பெனி துவங்கி, அதற்கு தன்னால் காப்பற்றப்பட்ட தீவிரவாதியையே மேனேஜராகப் போட்டு வாழ்வின் அர்த்தங்களை உணர,
ரூபா நடிக்க ஆசைப்பட்டு தீவிரவாதியும் மும்பை பட உலக பைனான்சியருமான ஒருவனுக்கு ஆசை நாயகியாகி கடைசி வரை நடிகையாக முடியாமல் சீரழிந்து லாலிடம் வந்து லால் மூலம் கர்ப்பமாகி, தீவிரவாதி மீது இருந்த கொலை வழக்கில் கைதாகி பின் விடுதலையாகி நோய்க்கு அடிமைப்பட்டு வாழ்வின் அர்த்தங்களை கொடுமைகளால் உணர தொடரும் இந்த பந்தமே லால் சிங் சத்தா .
ஃபாரஸ்ட் கம்பில் பஸ் ஸ்டாண்ட் என்றால் இங்கே ரயில் .. அங்கே வளர்ப்புத் தந்தையால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் நாயகி என்றால் இங்கே சினிமா உலகில் அதே கொடுமைகளுக்கு ஆளாகும் நாயகி .. அதில் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க வரலாற்று நிகழ்வுகள் என்றால் இதில் பொற்கோவில் ராணுவ நடவடிக்கை முதல் தொடரும் இந்திய நிகழ்வுகள் ..
தனித் தன்மையோடு கொஞ்சம் நாடகத் தனமாக நடித்து இருக்கிறார் ஆமிர்கான் . தனது பேச்சை தானே ரசித்து அவ்வப்போது சிரிப்பும் உம் கொட்டலுமாக ரியாக்ட் செய்து கொள்ளும் குணாதிசயம் கவிதை. அவருக்கு தமிழில் பின்னணி குரல் கொடுத்தவர் அசத்தி இருக்கிறார்.
தயாரிப்புத் தரம் மிக சிறப்பு. ஜூனியர் லால் மற்றும் ரூபாவாக வரும் குழந்தைகள் இரண்டு உயிர்க் கவிதைகள்
பிரீதம் சாகரின் இசையில் தமிழில் முத்தமிழ் எழுதி இருக்கும் பாடல் இனிமை . தனுஜ் டிக்குவின் பின்னணி இசையும் அருமை.
சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவு பிரம்மாதம்.
போர்க் காட்சிகளை சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார்கள் .
இந்தப் படத்துக்கு சீக்கியப் பின்னணி தேவையே இல்லை. ஆனால் வலிந்து சீக்கியப் பின்னணி கொடுத்து , அதன் மூலம் இந்திரா காந்தியை கொன்றது சீக்கியர்கள் என்பதற்காக 1985 இல் சீக்கியர்கள் பலர் வேட்டையாடிக் கொல்லப் பட்டது எவ்வளவு பெரிய கொடுமை என்று சொல்கிறார் படத்தின் எழுத்தாளர் அதுல் குல்கர்னி . உண்மைதான் இத்தனைக்கும் அதற்கு எல்லாம் பிறகு மன்மோகன் சிங் என்ற சீக்கியரை அதே காங்கிரஸ் பிரதமராகவே ஆக்கி விட்டது . சீக்கியர்கள் தேசப் பற்றாளர்கள் என்று ஏற்கப்பட்டு விட்டார்கள். இத்தனைக்கும் இந்திரா காந்தியை கொன்றது சீக்கியர்கள் என்பது உலகம் பார்த்த உண்மை .
ஆனால் ராஜீவ் காந்தியை கொன்றது விடுதலைப் புலிகள் என்பது யூகம் மற்றும் சாட்சிகளின்படி அறிவிக்கப்பட்ட விஷயம் . அவ்வளவுதான்.
ஆனால் இன்றைக்கும் காங்கிரஸ் கபோதிகள், பாஜக சங்கி மங்கிகள் எல்லோருக்கும் தமிழினம் மட்டும் எதிரிகள் .
இந்த அயோக்கியத்தனம்தான் படம் பார்க்கும்போது பெரிதாகத் தெரிகிறது .