லால் சலாம் @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா  தயாரிக்க, ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா நடிப்பில் விஷ்ணு ரங்கசாமியின் கதை வசனத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம். 

மொஹிதீன் பாய் ( ரஜினிகாந்த்) தனது இந்து மத நண்பரின் ( லிவிங்க்ஸ்டன்) மகனையும் தன் மகன் போல் பாவித்து , படிப்பு விசயத்தில் கண்டிக்க, சிறுவயதில் அவனுக்கு  பாய் மேல் வரும் கோபம் உடன் படிக்கும் அவரது மகன் மேல் திரும்புகிறது. நண்பர் இறந்து போக,  வளர்ந்த பிறகும் மொஹிதீன் பாயின் மகனும் ( விக்ராந்த்) , நண்பரின் மகனும் ( விஷ்ணு விஷால் ) அதே வெறுப்பில் இருக்கிறார்கள் . 

ஊருக்குள் எதிர் எதிராகக் கிரிக்கெட் விளையாடும் அணிகளில் ஒன்று இந்துக்கள் அணியாகவும் இன்னொன்று முஸ்லிம்கள் அணியாகவும் இருக்கிறது. 

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவிடம் பயிற்சி பெற்ற, ரஞ்சி டிராபிக்கு ஆடப் போகிற – மொஹிதீன்  பாய்  மகனை ஊருக்குள் வர வைத்து இரண்டு அணிகளையும் மோத வைக்கிறார்கள். இந்துக்கள் அணிக்கும் நண்பரின் மகன் கேப்டன் . முஸ்லிம்கள் அணிக்கு பாயின் மகன் கேப்டன். 

அரசியலில் இரு வேறு கட்சிகளில் இருக்கும் இந்து அரசியல்வாதிகள் இவர்களுக்குள் சண்டையை பெரிதாக்கி குளிர்காய நினைக்கின்றனர் . கிரிக்கெட் போட்டியில் கலவரம் வர , மொஹிதீன் பாயின் மகன் கையில் வெட்டு விழ, ரத்தம் வடியும் கத்தியோடு அதிர்ந்து நிற்கிறான் நண்பரின் மகன் 

மொஹிதீன் பாயின் மகன் கை அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டு,  கிரிக்கெட் கனவு கானலாகிறது .

நண்பரின் மகன் ஜெயிலுக்குப் போகிறான் . பெற்ற தாயே (ஜீவிதா) அவனை வெறுக்கிறாள். ஊரே புறக்கணிக்கிறது 

திருவிழாக் கொண்டாட ஊருக்கு என்று தனியாகத் தேர் இல்லாத நிலையில் பக்கத்து ஊரில் தேர் கடன் வாங்கி திருவிழா கொண்டாட முயல, அந்த ஊர் அரசியல்வாதி , இந்த ஊர்ப் பெரியவரை (தம்பி ராமையா) அடித்து அவமானப்படுத்தி  தேரைத் தர மறுக்க , திருவிழா நின்று போகிறது . 

வருடத்துக்கு ஒருமுறை திருவிழா சமயத்தில்தான் மகனும் மருமகளும் பேரப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவார்கள் என்ற நிலையில் இனி அதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் கோவில் பூசாரி ( செந்தில்) மரணமடைகிறார் 

இந்த நிலையில் பல்வேறு இடங்களுக்குள் போய் கிரிக்கெட் விளையாடி பணம் சேர்த்து தேருக்கு ஏற்பாடு செய்து ஊருக்குள் நண்பரின் மகன் நல்ல பெயரை வாங்க , 

அந்த தேர் உருவாகக் கூடாது என்று அரசியல்வாதி நினைக்க, 

நண்பரின் மகனை கொலை செய்ய மொஹிதீன் பாயின் மகன்,  அப்பாவுக்குத்  தெரியாமல் கிளம்ப , நடந்தது என்ன என்பதே படம். 

மத நல்லிணக்கம் பேசும் படம். அதற்காக லைக்கா புரொடக்ஷன்ஸ், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா மற்றும் படக் குழுவுக்குப் பாராட்டுகள். 

வழக்கத்துக்கு மாறான ரஜினிக்கான முயற்சியில் வழக்கமான ரஜினியே வந்திருக்கிறார் . 

ஏ ஆர் ரகுமான் இசையில் தேர்த் திருவிழா பாடம் அருமை . 

செந்தில் மூலம் சொல்லப்படும் விஷயம் நெகிழ்ச்சி . 

கிரிக்கெட் விசயத்தில் புளூ ஸ்டார் முந்திக் கொண்டது 

நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம். 

இன்னும் சிறப்பான உரையாடல்கள் எழுதி இருக்கலாம் . 

தெலுங்குப்,படம் போல ஓர் உணர்வு வருவதை தவிர்த்திருக்கலாம். 

காட்சிகளை இன்னும் யதார்த்தமாக  உருவாக்கி இருக்கலாம் . 

ஜீவிதா போன்றோரின் தோற்றம் மற்றும் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம் . 

நாடகத்தன்மை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். 

இயக்கம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 

”மகன் ஆடினா அப்பா கிரவுண்டை விட்டுப் போகவே மாட்டார் “என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டு , மிக சிக்கலான சூழலில் அவர் ” ஒரு வேல இருக்கு . கிளம்பறேன் ” என்று கிளம்பிப் போவது போன்ற காட்சியைத் தவிர்த்து விட்டிருக்கலாம் . 

ரஜினியின் கை விரல்கள்,  மணிக்கட்டுக்கு இப்படி மேக் ஓவர் செய்யாமல் ராவாக குளோசப் வைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம். 

ரஜினியே உணவுப் பொருட்களை வீணடிப்பது போல நடிக்க வைக்கப்பட்டிருப்பதை தவிர்த்து இருக்கலாம் . 

கபில்தேவை இப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போலப் பயன்படுத்தாமல் நல்ல ஷாட்களுடன் அறிமுகம் செய்து பயன்படுத்தி இருக்கலாம்.

எனினும் ….

முன்னரே யூகிக்க முடிகிறது என்றாலும் கிளைமாக்ஸ் தரும் மத நல்லிணக்க நெகிழ்ச்சிக்காகவும் , ” எப்படி இருந்தா என்ன ? எங்களுக்கு ரஜினி இருந்தா போதும் ” என்பவர்களும் 

பார்க்க… லாம். லால் ச…..லாம்! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *