ராக்கெட் லாஞ்ச்க்கு அடுத்த படியாக திரைப் படங்களுக்கான ஆடியோ லாஞ்ச் கேள்விப் பட்டு இருக்கிறோம். டிரைலர் லாஞ்ச் , டீசர் லாஞ்ச் கூட கேள்விப்பட்டு இருக்கிறோம்.
எங்காவது ஹீரோ லாஞ்ச் நிகழ்ச்சி நடந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறோமா? அப்படி ஒரு விசயத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தாவி இருக்கிறது ஒரு படக் குழு .
நாசே தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் இங்கிலாந்து நாட்டின் யார்க் செயின்ட் ஜான் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவருமான ராமச்சந்திரனின் புதல்வர்கள் ராஜேஷ் ராமச்சந்திரனும் துருவாவும் .
திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய ராஜேஷ் ராமச்சந்திரன் பிங்கர் பிரின்ட் புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கினார்.
ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் யாதவின் நட்போடு சேர்ந்து, கதைகள் கேட்டு, பெருமாள் பிள்ளை என்பவர் சொன்ன கதை பிடித்துப் போக, துருவாவை கதாநாயகனாக ஆக்கினார்கள் .
படத்தின் பெயர் திலகர். விடுதலைப் போராட்டத் தலைவரும் நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் குருவுமான லோகமான்ய பாலகங்கதர திலகரின் பெயரில் படத்தின் பெயர் இருந்தாலும் இது நம்ம ஊர் மண்வாசனைப் படம்
1990 களின் காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் முக்குலத்து மக்களின் வாழ்வில் நிகழ்வதாக சித்தரிக்கப்படும் படம் இது. (சுதந்திரப் போராட்ட வேட்கை காரணமாக சுபாஷ் சந்திர போஸ் , திலகர் என்று எல்லாம் பெயர் வைத்துக் கொள்வது தென் மாவட்ட மக்களின் வழக்கம்தான் )
மிக அமைதியாக நல்லவனாக அன்போடு வாழ விரும்பும் ஒருவனை ரொம்ப சீண்டினால் என்ன ஆகும் என்பதை ஆக்ரோஷமாக சொல்லும் இந்தப் படத்தை எடுத்து முடித்து விட்ட நிலையில் வித்தியாமாக ஏதாவது செய்ய எண்ணி அவர்கள் செய்ததுதான், நாயகன் துருவாவுக்கான இந்த ஹீரோ லாஞ்ச்.
அதிலும் பாலகங்காதர திலகர் பிறந்த நாள் அன்று இந்த ஹீரோ லாஞ்ச்சை நடத்தியது பிங்கர் பிரின்ட் புரடக்ஷன்ஸ் .அதற்கேற்ப நிகழ்ச்சியில் படத்தின் டீசர் , டிரைலர் , பாடல்கள் எதுவும் திரையிடப்படவில்லை. படத்தின் புகைப்படங்கள் ஒரு ஆல்பமாக தொகுப்பட்டு டிசால்வ் உத்தியில் அடுத்தடுத்து சுகமான பின்னணி இசையோடு காட்டப்பட்டன.
இயக்குனர் கே.பாக்யராஜும் விக்ரமனும் வெற்றிமாறனும் கலந்து கொண்டு துருவாவை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்து லாஞ்ச் செய்தார்கள் .
படம் சம்மந்தப்பட்ட அனைவருமே துருவாவின் நடிப்பை மனதார பாராட்டி பேசினார்கள்.
படத்தின் ஒளிப்பதிவாளரும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து இருப்பவருமான ராஜேஷ் யாதவ்”எடுத்த உடனேயே துருவாவை நடிக்க வைக்க முடிவு பன்னால. ஏன்னா இந்தக் கதைக்கு ஷூட்டிங்ல ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும் . அதனால காரை விட்டுட்டு சென்னைல பல சமயம் சைக்கிள்ல பயணிக்க வச்சோம். கஷ்டமான உடல் வேலைகள் எல்லாம் கொடுத்தோம். அப்புறம்தான் நடிக்க வச்சோம் ” என்றார் .
எடிட்டர் கோலா பாஸ்கர் இசையமைப்பாளர் கண்ணன் உட்பட பலரும் துருவாவின் நடிப்பை பாராட்டினார்கள்.
“நல்ல நடிகராக வருவதற்கு துர்வாவுக்கு வாழ்த்துகள் ” என்று வெற்றிமாறன் கூற, இயக்குனர் விக்ரமன் , “சீக்கிரம் அம்மா திரையரங்குகள் வரணும் . அப்போதான் சினிமா உலகம் தப்பிக்கும்” என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்து விட்டு ,
“சில பேரை பார்த்தாலே இவர் நல்ல நடிகரா வருவார்னு தோணும். முகத்துல அந்த அம்சங்கள் இருக்கும். துர்வாவைப் பார்க்கும்போதே அந்த நம்பிக்கை வருது ” என்றார் .
கிட்டத்தட்ட அதே ரீதியில் துருவாவை வாழ்த்திய கே.பாக்யராஜ் தனக்கும் நடிகர் (உதிரிப் பூக்கள்) விஜயனுக்குமான நடிப்பு அனுபவங்களை விளக்கினார்.
“ஆரம்பத்துல விஜயன் என் ரூம் மேட். எங்க டைரக்டர் படத்துக்கு நான் சீன எழுதிக்கிட்டு இருக்கும்போது எல்லாம் பக்கத்துல உட்கார்ந்து எனக்கு ஒரு கேரக்டர் வைங்க .. சீன வைங்க.. டயலாக் வைங்கன்னு சொல்லிட்டே இருப்பார். நானும் அப்படியே நுழைச்சு விடுவேன் . எங்க டைரக்டர் திட்டுவார்.
கிழக்கே போகும் ரயில் கிளைமாக்ஸ்ல அந்த பட்டாளத்தான் சீனும் வேணாம் . விஜயன் ஆளும் வேணாம்னு சொன்னார் . நான்தான் வாதாடி அந்த சீனை அனுமதிக்க வச்சேன்.
தியேட்டர்ல அதுக்கு பயங்கர கைதட்டல் . நிறம் மாறாத பூக்கள் படத்துக்கு நான் ரஜினிய ஹீரோவா போடணும்னு சொன்னேன்.
ஆனா டைரக்டர் அதெல்லாம் வேணாம் . பட்டாளத்தான் சீன்ல விஜயனுக்கு எப்படி கைதட்டல் விழுந்ததுன்னு விஜயனை வச்சே படம் எடுத்தார் .
துருவா மிக பெரிய ஹீரோவாக வாழ்த்துகள்” என்றார் .
வாழ்த்துகள் துருவா !