செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித்குமார், ஜகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்க, விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மடோனா செபாஸ்டியன், கவுதம் மேனன் நடிப்பில் , 2005 ஆம் ஆண்டு வந்த ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற ஆங்கிலப்படத்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் .
இமாச்சலப் பிரதேசத்தில் காபி ஷாப் வைத்து நடத்தியபடி மனைவி (திரிஷா), டீன் ஏஜ் மகன் , சிறுமியான மகள் என்று வாழும் நபர் பார்த்திபன்( விஜய்) அவருக்கு வனத்துறை அதிகாரி ஒருவர் ( கவுதம் மேனன்) நண்பர்.
அந்தப் பகுதியில் அதிகம் வாழும் கழுதைப் புலிகளில் ஒன்று மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து விட, கொடூரமான அதன் தாக்குதலில் பலரும் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக, எல்லோரும் அதை சுட்டு வீழ்த்த முயல, வன ஆர்வலரான பார்த்திபன் போராடி அதை மயக்கத்துக்கு ஆட்படுத்தி காக்கிறார் . அதோடு கழுதைப்புலி ஒன்றை வீட்டுப் பிராணியாக வளர்க்கிறார் .
சைக்கோ தாதாக்கள் சிலர் ( மிஸ்கின், சாண்டி ) ஒரு அதிகாரியை அங்கு கொன்று விட்டு , பார்த்திபனின் காபி ஷாப்புக்குள் புகுந்து பணியாளர் ஒருவரை ( பிக்பாஸ் ஜனனி) பலாத்காரம் செய்ய, அந்தக் கும்பலையே கொல்கிறார் பார்த்திபன்
பெரிய நெட் வொர்க் உள்ள அந்த சைக்கோ தாதா கூட்டத்துக்கு வேண்டிய ஆட்கள் நாடு முழுதும் பார்த்திபன் போட்டோ பார்த்து விசாரிக்க , அவர்கள் எல்லோருக்கும் பெரிய ஒரு டான் கும்பல் ஒன்று ( சஞ்சய் தத் , அர்ஜுன்) பார்த்திபனின் போட்டோவைப் பார்த்து அதிர்கிறது . ஏனெனில் மூத்த டானின் மகனாக இருந்து அப்பாவுடன் முரண்பட்டு அப்பாவால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் லியோதான் பார்த்திபன் என்று நம்புகிறார் மூத்த டான் சஞ்சய் தத்
மீண்டும் என்னோடு வா . தாதா சாம்ராஜ்யத்தைத் தொடரலாம் என்பது மூத்த டான் அழைக்க,
நான் லியோவே இல்லை என்று பார்த்திபன் மறுக்க, மூத்த டான் பார்த்திபனின் மகனைக் கடத்திக் கொண்டு போய் விட நடந்தது என்ன என்பதே படம்.
ஹிமாச்சல பிரதேச லொக்கேஷன்கள் சிறப்பு . தயாரிப்பாளருக்குப் பாராட்டுகள்
விஜய் . விஜய் … விஜய் .. இந்தப் படம் ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் விஜய். அவரது திரை ஆளுமை, அவருக்கு இருக்கும் ரசிக வட்டம் .இவையே . அதுவும் ஒரு உருக்கமான காட்சியில் அற்புத நடிப்பால் பிரம்மிக்க வைக்கிறார் விஜய்
அதைத் தவிர மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் அனிருத் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. ஒலி வடிவமைப்பும் சிறப்பு .
அன்பறிவ் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் அபாரம். படத்தின் இரண்டாவது ஹீரோ மற்றும் இரண்டாவது இயக்குனர் அன்பறிவ் தான்.
இவற்றைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்…
தொண்ணூற்று ஆறு நிமிடங்களே ஓடும் ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தின் முதல் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு அதில் கழுதைப் புலியை குறுக்கே குறுக்கே ஓட விட்டு விட்டு , அந்தப் படத்தின் சென்சிபிளான இரண்டாம் பகுதியை குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விட்டு , நரபலி என்ற இந்த தலைமுறை அறியாத காட்டுமிராண்டித்தனத்தை கதைப் போக்காக வைத்து , அதுவும் எந்த லாஜிக்கும் இல்லாத நிலையில் மகளையே பலி கொடுக்க டான் விரும்புவதாக சொல்லி ஒரு சகிக்க இரண்டாம் பகுதியோடு ஓடும் நூற்றி அறுபத்தைந்து நிமிட அபத்தமே லியோ .
ஹீரோவிடம் நீதான் லியோ என்கிறான் வில்லன். மனைவியும் அதை நம்பி விட்டாள் என்பதற்காக மூக்குச் சளியும் கண்ணீரும் கலக்க நொறுங்கி உடைந்து அழுது மனைவியைக் குற்றம் சாட்டி கணவன் உருகுகிறான் .
இப்படி ஒரு தப்பு செய்து விட்டோமே என்று நொந்து போகும் மனைவி அந்த மூக்குச் சளி கண்ணீர் மிக்ஸ் திரவத்தை உறிஞ்சிக் குடித்தபடி கணவனுக்கு முத்தம் கொடுத்து ஆற்றுப்படுத்துகிறாள் .
தேவதை போன்ற சிறுமியான மகளிடம் நீ என்னை நம்பற இல்ல என்று நெகிழ்கிறான். அந்தக் குழந்தை நம்புகிறேன் என்கிறது
அது மட்டுமா? ” யாரோ ஒரு ______ பய என்ன மாதிரி இருந்தான்னு என்னை சந்தேகப்படுவது நியாயமா?” என்று குமுறுகிறான் .
கடைசியில் பார்த்தால்… அந்த ______ பயலே, இந்த ______ பயதான் !
மனைவிக்கும் உண்மையாக இல்லாமல் போலியாக உருகி நடித்து ( அந்தக் காட்சியில் விஜய்யின் நடிப்பு வேறு அற்புதம்) , அந்த அயோக்கியத்தனத்துக்காக தன்னைத்தானே ______ பய என்று திட்டிக் கொண்டு ….
முந்தா நாள் முதன் முதலாக சினிமா கேமரா முன் நின்ற ஒரு புதிய ஹீரோவின் கேரக்டர் கூட இவ்வளவு மோசமாக இருந்தது இல்லை. இதுவரை தமிழ் சினிமா கண்ட எந்த ஒரு வில்லனின் கேரக்டர் கூட இவ்வளவு கேவலமாக இருந்தது இல்லை. அவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறது இந்தப் படத்தில் விஜய்யின் கேரக்டர் .
இதை விஜய் ஒத்துக் கொண்டது ஆச்சர்யம் . இதை ஒத்துக் கொள்ள வைத்தது பெரிய மேஜிக் .
சரி லாஜிக்காவது நல்லா இருக்கா என்றால்…
லியோ பிறந்து பதினேழு வயதில் இறந்து போகிறான் என்கிறார்கள் . ஆனால் லியோவாக ஆடும் விஜய்யின் தோற்ற வயது கம்மியா சொன்னாலும் முப்பத்தைந்து வயது இருக்கும் .
அதே நேரம் சம்மந்தப்பட்ட அதே கால கட்டத்தில் மனைவியை சந்தித்து காதலித்து மணந்த கதையை சொல்ல அந்த மனைவியும் ஆமாம் என்று தலையாட்டுகிறார். . .
ஒரு வணிகப் படத்தில் எல்லா காட்சிகளிலும் லாஜிக் பார்க்கத் தேவை இல்லைதான். ஆனால் இப்படியா அடிப்படைக் கதையிலேயே இவ்வளவு கோட்டை விடுவார்கள்.?
ஈரச் சிவப்பும் இருட்டும் வெளிச்சமும் கலந்த ஒரு டோன்… பின்னணியில் எதுவும் தெரியாத அவுட் ஆப் போகஸ் காட்சிகள் … எல்லா காட்சிகளிலும் இதையே பார்ப்பது தண்டனை
கழுதைப் புலி காட்சிகளில் சிஜி இருந்தால் பரவாயில்லை. ஆனால் இத்தனைக் கோடிகள் கொட்டி எடுக்கப்படும் படத்தில் விபத்துக்குள்ளாகிய தரையில் தேய்த்துக் கொண்டு போவதைக் கூடவா சிஜியில் காட்டுவீர்கள். அது கூடப் பரவாயில்லை. அதுவும் மோசமான சிஜி
ஒரு காட்சியில் வில்லனின் இருப்பிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சண்டையிட , விஜய், அர்ஜுன் , சஞ்சய் தத் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் சண்டையிட , ஒரு நகரும் ஹெலி ஷாட் ஒன்று எல்லா இடங்களுக்கும் நகர்ந்து சண்டை போடும் அனைத்து முக்கியக் கதாபாத்திரங்களையும் தேடித் தேடி படம் பிடிக்கிறது . அதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும் . ஒரே ஷாட் மற்றும் முடிந்தவரை சரியான பிரேமிங் என்பதுதானே . ஆனால் விஜய் சண்டை போடுவதை தனி ஷாட்டாக காட்டுகிறார்கள் . அப்புறம் எதுக்கு அந்த ஷாட்.
வசனக் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக் காட்சிகளும் தேவைக்கு மேல் நீள்வது, ரசனை அஜீரணம் ஏற்படும் அளவுக்கு ஓவர் டீட்டைலிங். படம் முழுக்க.
இவ்வளவையும் மீறி இந்தப் படம் இப்படி சிறப்பாக ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் விஜய்யும் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமும் மட்டுமே .
லியோ . விஜய் . மட்டுமே