தோனி என்டர்டைன்மென்ட் சார்பில் சாக்ஷி சிங் தோனி, விகாஸ் ஹசிஜா தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர் ஜே விஜய் , நடிப்பில் ரமேஷ் தமிழ் மணி எழுதி இசை அமைத்து விசுவல் எஃபக்ட்ஸ் செய்து இயக்கி இருக்கும் படம்.
அலுவலகத்தின் சக ஊழியை ( இவானா) மீது ஊழியனுக்கு ( ஹரீஷ் கல்யாண்) காதல் . அதை அவன் சொல்ல , ”இரண்டு வருடம் பழகிப் பார்த்து சொல்கிறேன்” என்கிறாள் . இரண்டு வருடம் கழித்து சரி சொல்கிறாள் . காதலனுக்கு அம்மா ( நதியா) மட்டுமே இருக்கும் நிலையில் , ”கல்யாணத்துக்குப் பிறகு உன் அம்மாவோடு எல்லாம் நான் எப்படி திடீர் என்று ஒன்றாக ஒரே வீட்டில் இருக்க முடியும். அதற்கு முன்பு அவர்களோடு பழகிப் பார்த்து புரிந்து கொள்ளணும்” என்கிறாள் . அதற்கு எல்லோரும் ஜாலியாக ஒரு ட்ரிப் போய் வரலாம் என்கிறாள் .
காதல் ஜோடி, காதலனின் அம்மா , நண்பன் (ஆர் ஜே விஜய்), அக்கா ( வினோதினி) மாமா , காதலியின் அம்மா அப்பா , தாத்தா (காத்தாடி ராம மூர்த்தி) பாட்டி என்று ஒரு கூட்டமே போகிறது . வேன் டிரைவராக யோகிபாபு
போன இடத்திலும் இரண்டு தரப்பும் தனித்தனியாகப் புழங்க, எல்லோரையும் அனுப்பி விட்டு வருங்கால மாமியார் மருமகள் மட்டும் டூர் போகிறார்கள் .
என்ன நடந்தது என்பதே படம் .
ஹரீஷ் கல்யாண், இவனா , நதியா பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்கள் ; நடிக்கிறார்கள். இவனா லவ் டுடே கேரக்டரில் இருந்து வெளியே வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்இருபது வயதுப் பெண்ணாக வரும் காட்சியிலும் சிறப்பான ஒளிப்பதிவு, இயக்கம் , மேக்கப் ஆகியவற்றால் பொருத்தமாக இருக்கிறார் நதியா . வியப்பு. நடிப்பும் சிறப்பு. அவருக்கு ஒரு நல்ல பின்னணிக் குரல் ஏற்பாடு செய்து இருக்கலாம்
இயக்குனரின் பின்னணி இசை ஆங்காங்கே நகைச்சுவையாகவும் ரசனையாகவும் இருக்கிறது. விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு அழகு . கூர்க், கோவா லோக்கேஷன்களும் அதை தொடர்புப்படுத்தி காட்சிகள் இருப்பதும் சிறப்பு.
வருங்கால மாமியாரும் மருமகளும் கோவாவில் பப்பில் சரக்கு அடித்ததைத் தவிர , இந்தப் பயணத்தால் பலன் என்ன ? இதை வீட்டுக்குள் உட்கார்ந்தே பேசிப் புரிந்து கொண்டு இருக்கலாமே ? அந்த புலிக் கூண்டு காட்சிகளால் என்ன பயன்? என்ற கேள்விகள் எல்லாம் வந்தாலும் யோகி பாபு, ஆர் ஜே விஜய் மட்டுமின்றி எல்லாகதாபாத்திரங்களை வைத்தும் ஆங்காங்கே காமெடிகள் உண்டு .