லிங்கா பிரச்னையின் அடுத்த கட்டமாக மீண்டும் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிங்காரவேலனிடம் “கோவை, என் எஸ் சி ஏரியா விநியோகஸ்தர்கள், மற்றும் வேந்தர் மூவீஸ் தவிர எல்லோருக்கும் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கும் விரைவில் லிங்கா தயாரிப்பாளர் கொடுத்து விடுவார் . இதோடு லிங்கா பிரச்னை முடிந்தது’ என்று திருப்பூர் சுப்பிரமணியம் கூறி இருக்கிறாரே ?” என்று கேட்டேன்.
அதற்கு பதில் சொன்ன சிங்காரவேலன் “செங்கல் பட்டு விநியோகஸ்தர் மன்னன் தனக்கு கீழ் லிங்கா படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்று நேற்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார் அல்லவா ? இங்கே நிறைய தியேட்டர் அதிபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்” என்றார் . உடனே அங்கிருந்த பல திரையரங்கு உரிமையாளர்களும் “இல்லை இல்லை ….மன்னன் ஒரு பைசா கூட தரவில்லை ” என்றனர் .
“திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்று இப்போது புரிகிறதா ?” என்று கேட்ட சிங்காரவேலன் ” குறைந்த பட்சம் பதினைந்து கோடி ரூபாயாவது நஷ்ட ஈடு கொடுத்தால்தான் லிங்கா படத்தில் பாதிப்புக்கு ஆளான விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கொஞ்சமாவது தப்பிப் பிழைக்க முடியும் .

லிங்கா பிரச்னையை இழுத்துப் பெரிதாக்கும் தாணுதான் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதில் ரஜினியின் சம்பளம் 70 கோடிக்கும் மேல். ரஜினிக்கு அட்வான்ஸ் மட்டுமே 30 கோடி ரூபாய் கொடுத்து உள்ளார். அதுவும் ஒயிட் பணமாகவே! நாங்கள் என்ன கேட்கிறோம்? எங்களுக்கு உரிய நிவாரணத்தில் பாதியாவது கொடுத்து விட்டு படம் எடுங்கள் என்றுதான் கேட்கிறோம் . அதைக் கூட செய்ய மனம் இல்லாமல் அநியாயம் செய்கிறார்கள் ” என்றார் .
அதைத் தொடர்ந்து …..
‘இன்னும் ஒரு வார காலத்திற்குள் ‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டுப் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினியே தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்துவைக்கவில்லையெனில் வரும் ஜூன் 13-ம் தேதி சனிக்கிழமையன்று ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டு வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும்” என்று சிங்காரவேலன் தலைமையிலான விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் பிரச்சினையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்கும் படங்களுக்கு இனிமேல் எவ்வித தொழில் ஒத்துழைப்பும் தரப் போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவினை தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கும், விநி்யோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும் முறைப்படி தெரியப்படுத்தவிருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள் .