
தமிழ் நாட்டில் லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலரும் இப்போது ஏற்பட்டிருக்கும் பலத்த நஷ்டத்தால் பெரும் வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள் . அப்படி நஷ்டம் ஆனதற்கு அவர்கள் நேரடியாக கை காட்டுவது ரஜினியை என்பதுதான் அதிர்ச்சியான சமாச்சாரம்
லிங்கா படத்தை வாங்கிய திருச்சி , தஞ்சை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, கூறி , தங்களுக்கு லிங்கா படத்தை விற்ற , விஜய் பார்கவி என்டர் பிரைசஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர், வாங்கிய தொகைக்கு பாதி கூட வசூல் ஆகவில்லை என்பது இவர்களது வேதனை . காரணம் இவர்கள் வாங்கிய மாபெரும் விலை விலை. அதற்குக் காரணம் விஜய் பார்கவி நிறுவனம் விற்ற அந்த மாபெரும் விலை .
விஜய் பார்கவி நிறுவனம் ஏன் அவ்வளவு பெரிய விலைக்கு விற்கவேண்டும் . என்ன செய்ய? படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனத்திடம் இருந்து அவர்கள் வாங்கிய விலை அப்படி ?
இருக்கட்டும் .. விஜய் பார்கவி நிறுவனம் ஏன் வேந்தர் மூவீசிடம் இருந்து அப்படி ஒரு பெரிய விலைக்கு வாங்க வேண்டும்?
இதற்குதான் ரஜினியை சுட்டிக் காட்டுகிறார் விஜய் பார்கவி என்டர்பிரைசஸ் நிறுவன பாலா விஸ்வநாதன்.
“லிங்கா படம் வருவதற்கு முன்பு ரஜினி எங்களிடம் ‘லிங்கா படம் படையப்பா படத்தை விட பத்து மடங்கு நல்ல படம் . இந்த படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்’ என்று கூறினார் . அவர் சொன்ன வார்தையை நம்பித்தான் நான் 14 கோடிக்கு செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஏரியா உரிமையையும் எனது தலைமையில் விநியோகஸ்தர்கள் திருச்சி தஞ்சை விநியோக உரிமையை 8கோடி ரூபாய்க்கும், வட மற்றும் தென் ஆற்காடு உரிமையை 6 கோடிக்கும் வேந்தர் மூவீஸ் மதனிடம் வாங்கினோம்.
எனக்கு 6 கோடிதான் வந்தது. 8 கோடி நஷ்டம். ஆற்காடு பகுதிக்கு வாங்கியவருக்கு 2 கோடிதான் வந்தது . 4 கோடி நஷ்டம் . திருச்சி தஞ்சை பகுதிக்கு 8 கோடிக்கு வாங்கியவருக்கு 4 கோடிதான் திரும்ப வந்தது . 4 கோடி நஷ்டம். இப்படி மூன்று ஏரியாவில் மட்டும் 16 கோடி போச்சு !. ” என்று கூறும் பாலா விஸ்வந்தான் அடுத்து கூறுவதுதான் பகீர் ரகம்.
“இந்த விசயத்தில் ரஜினி தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை ” என்கிறார் பாலா விஸ்வநாதன்.
பட விற்பனை விசயத்தில் எதனால் இப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன?
தான் நடிக்கும் படம் விற்பனை செய்யப்படும் விசயத்தில் ஒரு பாலிசியை கடை பிடித்தார் அமரர் எம்ஜிஆர் .
படத்தின் கதை , படமாகும் விதம் , பட்ஜெட் இவற்றை வைத்து ஒரு குறிப்பிட்ட லாபத்தை படத்தின் தயாரிப்பாளருக்கு ஃபிக்ஸ் பண்ணி அந்த விலைக்கு மேல் படத்தை விநியோகஸ்தருக்கு விற்கக்கூடாது என்று சொல்லி விடுவார். அது போல அடுத்து வினியோகஸ்தருக்கு ஒரு லாபத்தை ஃபிக்ஸ் பண்ணி அந்த விலைக்கு மேல் விநியோகஸ்தர் தியேட்டர்காரருக்கு விற்கக் கூடாது என்று சொல்லி விடுவார் .
இதனால் பல சமயம் சில தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எம்ஜிஆர் மீது கோபமோ வருத்தமோ அடைந்தாலும் முடிவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் , தியேட்டர்காரர்கள எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட லாபம் கிடைத்து இருக்கும் . கடைசியில் எல்லோரும் எம்ஜிஆரை வாழ்த்துவார்கள்
அந்த பெருந்தன்மை எல்லாம் யாருக்கு இப்போது இருக்கிறது ?