நன்றிகெட்ட லிங்கா @ சினிமா விமர்சனம்

தண்ணீரின் தலைவன் கேப்டன் பென்னி குயிக்
கேப்டன் பென்னி குயிக்- முல்லைப் பெரியாறு அணை : ஒரு கருணையின் கம்பீரம்

நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ்காரன் இந்தியர்களை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்திய அந்த அடிமைக் காலத்தில் , இங்கிலாந்தில் பிறந்து  நிஜத்தில் ஒரு ராஜா போல வாழ்ந்த பெரும் கோடீஸ்வரரான கேப்டன் பென்னி குக் என்பவர் இந்தியாவுக்கு வந்தார் .

ராணுவ என்ஜினீயர் , மக்கள் ஆட்சிப் பணி அதிகாரி, வக்கீல் உட்பட பல பதவிகளை வகித்த அவர் நினைத்து இருந்தால் அவரும் இங்கிருக்கும் காலம் வரை இந்தியர்களை அடக்குமுறைக்கு ஆளாக்கி சேவகம் செய்ய வைத்து வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாம் .

 ஆனால் தென் தமிழ் நாட்டு  மக்கள் வறட்சியால் கஷ்டப்படுவதைக் கண்டு மனம் கசிந்தார் . மலையில் இருந்து வீணாக ஓடி கடலில் கலக்கும் ஆற்று நீரை தடுத்து அணை கட்டி வறண்ட தென் தமிழ்நாட்டை வளமாக்க,  இந்தியாவை ஆண்ட தமது வெள்ளைக்கார அரசுக்கு கோரிக்கை வைத்தார் .
அதன்படி  ஆயிரக்கணக்கான மக்களில் உழைப்பில் நூற்றுக்கணக்காக உயிர்களை பழிவாங்கி பாதி அளவு அணை கட்டப்பட்ட  நிலையில்  வெள்ளம் வந்து கட்டிய அணையை அடித்துக் கொண்டு போய் விட்டது . 
மீண்டும் பென்னி குக் வெள்ளைக்கார அரசாங்கத்திடம் போய்  அணை கட்டப் பணம் கேட்க , “யோவ் பென்னி … இந்தியாவுக்கு வந்தமா? உன் பங்குக்கு கொஞ்ச இந்தியர்களை கொடுமைப்படுத்தினோமா? நல்லா சரக்கு அடிச்சமா? ஊட்டி கொடைக்கானல்னு போய் என்ஜாய் பண்ணோமா? இங்க உள்ள வெள்ளைத் தோல் பெண்களை ஏற்பாடு செய்ய சொல்லி படுக்கையில் ருசிச்சோமா?’னு இருக்கணும்.
அதை விட்டுட்டு அணை கட்டணும்னு பணம் கேட்ட . நாங்களும் கொடுத்தோம் . தண்ணியில அடிச்சுட்டு போயிடுச்சுன்னா அது அந்த ஜனங்களோட தலை எழுத்து .அதோட விட்டுரு. ஊட்டிக்கு வா . உள் ஸ்வெட்டர் போட்டுட்டு சந்தோஷமா இரு . இனிமே பணம் எல்லாம் கிடையாது” என்று கூறி விட்டது.
வேறொரு வெள்ளைக்காரனாக இருந்திருந்தால் சாரி என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போயிருப்பான். அப்படி போயிருந்தால் கூட , தமிழனின் வரலாறு பென்னி  குக்கை நன்றியோடு நினைத்துப் பார்த்திருக்கும். அதுதான் நமது குணம் .
ஆனால் கேப்டன் பென்னிகுக்?
வெள்ளைக்காரத் தமிழன்
வெள்ளைக்காரத் தமிழன் பென்னி குயிக்

லண்டனுக்கு சென்று தனது சொந்த சொத்துக்களை எல்லாம் விற்று அந்தப் பணத்துடன் இந்தியா வந்து அணை கட்டும் வேலையை தொடர்ந்தார். ‘பணம் இல்லாத உன்னோடு வாழ முடியாது’  என்று  கூறிவிட்டு அவரது மனைவி அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார் . ‘கேவலம் அந்த காட்டுமிராண்டி இந்திய மக்களுக்காக உன் வாழ்க்கையை இழக்கிறாயே . நீ அவ்வளவு முட்டாளா?” என்று சுற்றமும் நட்பும் பென்னி  குக்கை காறி உமிழ்ந்தது.

ஆனால் அந்த மாமனிதன் பென்னி குக் பின் வாங்கவில்லை. பல கஷ்டங்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டார் . எனினும் தொடர்ந்து அணையை தனது சொந்தப் பணத்தில் கட்டி முடித்தார் .

அப்படி தாயுள்ளத்தோடு அவர் கட்டிய அணைதான் முல்லைப்பெரியாறு அணை.

கேரளர்களின் பல்வேறு விதமான சதிகளையும் கடந்து இன்று உச்ச நீதி மன்றத் தீர்ப்பு காரணமாக  அந்த அணையில் 142 அடிக்கு நிரம்பி வழிவது…. தண்ணீர் அல்ல!  அந்த அன்பேஸ்வரனின் கருணைதான் . அதனால் வெள்ளைக்காரத் தமிழன் என்று இன்றும் கொண்டாடப்படுகிறார் ,அந்த தண்ணீரின் தலைவன்.
தண்ணீரின் தலைவன் பென்னி குவிக்
தண்ணீரின் தலைவன் பென்னி குவிக்

சில ஆண்டுகளுக்கு முன்பு பென்னிகுக்கின் பேரன் தமிழகம் வந்த போது,  அவரை தென் தமிழகமே தூக்கி வைத்துக் கொண்டாடியது . தனது தாத்தா மீது தமிழ் மக்கள் வைத்து இருக்கும் அன்பில் நெகிழ்ந்து சிலிர்த்துப் போனார் அவரது பேரன்.

இன்றும் தென் தமிழககத்தில் பலரும் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பென்னி குக் என்று பெயர் வைப்பதை பார்த்து “என் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர் என்பது இப்போதுதான் எனக்கே புரிகிறது . அவரது பேரன் என்பதில் பெருமைப்படுகிறேன் ” என்று சிலிர்த்துப் போய் சொன்னார்.

இந்நிலையில்  முல்லைப் பெரியாறு அணையை வெடி வைத்து தகர்க்க கேரளத்தில் ரொம்ப நாளாகவே சிலர் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் .
இது வரலாறு .
இப்போது லிங்கா படத்தின் கதைக்கு வருவோம்.
 படத்தில் லிங்கா என்பவன் திருடனாக வாழ்கிறான் .  அவனது தாத்தா ராஜா லிங்கேஸ்வரன் ஜமீன்தாராக இருந்தவர் என்பது அவனுக்கு  தெரிந்தும் அப்பாவை ஏழ்மையாக விட்டுவிட்டுப் போனவர் என்பதால் தாத்தாவின் பேரையே வெறுக்கிறான்.  ஆனால் தாத்தா கட்டிய அணையால் செழித்து வாழும் மக்கள் ராஜா லிங்க்கேஸ்வரனை தெய்வமாக கொண்டாடுகிறார்கள் .
அவர்கள் லிங்கேஸ்வரனின் பேரனை கண்டுபிடித்து வரவழைக்க , அங்கும் அவன் திருட முயல , அப்போதுதான் தாத்தாவின் வரலாறு தெரிகிறது . மனம் நெகிழ்ந்து அங்கிருந்து கிளம்ப ,
அணையை உடைத்து புதிய அணைக்கு டெண்டர் விட்டு பல்லாயிரக்கணக்கான கோடி சம்பாதிக்க முயலும் ஒரு அரசியல்வாதி அந்த அணையை வெடிவைத்து தகர்க்க முயல்வது தெரிய வர,   அதை தடுத்து அணையை காப்பாற்றுகிறான் லிங்கா . இதுதான் படம் .
ஆக,  முல்லைப் பெரியாறு அணை, கேப்டன் பென்னிகுவிக், அவரது பேரன் , அணைக்கு எதிரான கேரளாவின் சதி, என்று உண்மை விசயங்களை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு திரைக்கதை வசனம் அமைத்து படம் ஆக்கி இருக்கிறார்கள் .
அப்படி இருக்க,  சொத்துக்கு பினாமி இருப்பது போல, இதற்கு கதை என்று ஒருவரின் பெயரைப் போடுவதுதான் பெரிய ஜோக் . (இது என் கதை என்று சொல்வதும் கூட …. !)
ஆனால் அதை விட அநியாயம் என்ன என்றால் பென்னிகுவிக் என்ற மனிதனையும் அவன் கட்டிய அணையையும் வைத்து வந்திருக்கும் படத்தில் அந்த மனிதனும் அவனது அணையும் அசிங்கப்படுத்தப்பட்டு இருப்பதுதான் பொறுக்க முடியவில்லை.
எப்படி?
Rajinikanth-Lingaa-New-Movie-Stills-Images
பென்னி குவிக்கின் பேரன்  இப்போதும் தமிழ் நாட்டோடு தொடர்பில் இருப்பவர். அவருக்கு இந்தப் படம் பற்றி தெரியாமல் போகாது . அப்படி இருக்க தனது இன்ஸ்பிரேஷனில் உருவான கதாபாத்திரத்தை திருடன் கதாபாத்திரம் என்று காட்டுவதை பார்த்தால் அவருக்கு எப்படி இருக்கும் ?
1950களில் இந்திப் படங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட — ரொட்டி திருடும் ஆளாக  ஹீரோவை காட்ட ஆரம்பித்ததை வைத்து — இன்னும் எத்தனை ஆண்டுகள்  ஹீரோ என்றால் திருடனாகவே இருக்க வேண்டும் ? இவ்வளவு செலவு செய்து எடுக்கும் படத்தில் லிங்காவுக்கு ஒரு வித்தியாசமான கேரக்டர் பிடித்து இருக்கக் கூடாதா? சரி திருடன் லிங் காவை வைத்து எதையாவது சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்களா? என்றால் சேட்டிடம் அடகு வைப்பது , வைர நெக்லசை திருடுவது , அதற்கு அபத்தமான ஐடியாக்கள் என்று எரிச்சல்தான் வருகிறது .
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைக்காரர்களை கண்டிக்க தண்டிக்க நிந்திக்க இன்னும் கூட ஆயிரம் விஷயங்கள் உண்டு . ஆனால் வெள்ளைக்கார அரசாங்கத்தால் துவங்கப்பட்டு பின்னர் ஒரு வெள்ளைக்காரரால் சொந்தக் காசில் கட்டப்பட்ட அணையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு திரைக்கதையில் வெள்ளைக்காரர்களை மட்டமாக காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவும் பக்குவமின்மையாயகவும் தெரிகிறது . வரலாறு குறித்த எந்த அக்கறையும் இல்லாதவர்கள் இது போன்ற விசயங்களை தொடமால் இருப்பதே உத்தமம் .
சிங்களவனை கண்டித்து வசனம் வைக்க துப்பு இல்லாத நிலையில் இன்னன்ன்ன்னும் வெள்ளைக்காரனை கண்டிக்கும் இந்த தேசபக்தி ‘வியாபாரம்’….. குமட்டுகிறது.
linga
சரி அதற்காக வெள்ளைக்காரனை புகழ்ந்து படம் எடுக்க முடியுமா? தேசபக்தி என்னாவது என்று கேட்கலாம் ? இப்போது மற்றும் படத்தில் என்ன வாழ்கிறது ? படத்தில் வரும் வெள்ளைகார வில்லனை கண்டித்து நியாயமாக நடந்து கொள்ளவைப்பது ரஜினி அல்ல, ஊர் மக்கள் அல்ல, அந்த வெள்ளைக்காரக் கலெக்டரின் மனைவியான வெள்ளைக்காரிதான் .
ராஜா லிங்கேஸ்வரன் கதைக்கே வருவோம் . அப்படி ஒருவன் எங்கிருந்தோ வந்து (பென்னி குவிக் போலவே) கட்டிக் கொடுத்த அணைக்கு எதிராக இன்று மொழி , பிரிவு துவேஷ உணர்வு காரணமாக பலர் இயங்குகிறார்கள் என்பதையாவது ஆண்மையோடு கதையில் ஒரு விசயமாக சொல்லி இருக்கலாம் . . அதே போல அணைக்கு வெடிகுண்டு வைக்க முயலும் குறுகிய மனோபாவத்துக்கு பின்னால் இருக்கும் துவேஷத்தையாவது சொல்லி இருக்கலாம் .
இவை இரண்டையும் நேரடியாக சொல்ல தில் இல்லையா ? அட்லீஸ்ட் உருவகமாகவாவது சொல்லி இருக்கலாம் . ஆனால் அதற்குக் கூட வக்கில்லாமல் , அந்த தொகுதி எம் பி எதோ புதிய அணை கட்டி ஊழல் செய்து காசு சம்பாதிக்க எண்ணிதான்,  அணைக்கு வெடிகுண்டு வைக்கிறான் என்று கதை விட்டிருகிறார்கள் பாருங்கள் .. உச்சபட்ச பம்மாத்து !
linga 1அட . அவ்வளவு ஏன் … ராஜா லிங்கேஸ்வரன் கட்டிய அணையில் இருந்து தானியங்கி மதகு திறந்து தண்ணீர் பீறிட்டு வெளியிடும் காட்சியில் …”இந்த இடத்தில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம் என்று அவர் போட்டோவைப் போட்டு ஒரு டைட்டில் போட்டு இருந்தால் கூட போதும் . இந்தப் படம் ரஜினி படம் என்ற பலத்தை விடவும்  இன்னொரு உணர்வுபூர்வமான மாபெரும் பலத்தை அடைந்து   இருக்கும் . அந்த ஒரு விசயத்துக்காகே இந்தப் படத்தை தென் மாவட்டங்களில் கொண்டாடி இருப்பார்கள் . (தமிழ்நாட்டு ரசிகர்களை எப்படியாவது ஏமாற்றி விடலாம் . கேரளா ரசிகர்கள் கோபப்பட்டு விடக் கூடாது என்று வஞ்சகமாக யோசித்ததன் விளவு…. ரிசல்ட் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே !)
அது கூட வேணாம்….டைட்டிலின் துவக்கத்தில் ‘படத்தின் கதைக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த கேப்டன் பென்னி குவிக்குக்கும் முல்லைப்பெரியாறு அணைக்கும் எங்கள் நன்றி ‘ என்று ஒரு டைட்டில் போட்டு இருந்தால் கூட , இந்தப் படம் தென் தமிழ் நாட்டில் ஒரு நெகிழ்ச்சியான பந்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.
ஆனால் அதுக்கெல்லாம் ஒரு  நேர்மை வேணும் . தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் ஒரு ஏ டி எம் மெஷினாக மட்டும் பார்ப்பவர்களிடம் அது எப்படி இருக்கும்?
”அணை கட்டுவது பற்றி இந்தியர்களுக்கு என்ன தெரியும் ?” என்று ஒரு வெள்ளைக்கார அதிகாரி கேட்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை மற்றும் கோவைப்பகுதியில் உள்ள கொடிவேரி ஆணை பற்றி தலா ஐந்தே வார்த்தைகளில் பேசுகிறார் ரஜினி .
கல்லணை பற்றி ஆராய்ச்சி செய்த விக்டோரியா மகராணி காலத்து வெள்ளைக்கார எஞ்சினியர் ஆர்தர் காட்டன் ”கல்லணைக்கு இணையான டெக்னிகல் சிறப்பு வாய்ந்த அணை இந்த உலகத்திலேயே இல்லை என்பதால் அதற்கு கிராண்ட் அணைகட் (மாபெரும் அணைக்கட்டு) என்று பெயர் கொடுத்த கதையை இன்னும் அழுத்தமாக விஷுவலாக சொல்லி இருந்தாலாவது படத்தின் மீது ஒரு மரியாதையை வந்திருக்கும். தவிர இந்தக் கதைக்கு அந்த மாதிரி காட்சிகள்தானே பலம் சேர்க்கும் ? ஆனால் சோற்றை ஊறுகாய் போலவும் ஊறுகாயை சோறு போலவும் தின்றதால் இன்று வயிறு புண்ணாகிக் கிடக்கிறது  படம் .
வழக்கமான விமர்சனப் பார்வையில் பார்த்தாலும் இந்தப் படத்தில் சிறப்பாக இருப்பது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு .மற்றும் அமரனின் கலை இயக்கம் மட்டுமே. நடித்திருப்பவர்களில் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் இயல்பாக மனத்தைக் கொள்ளை கொள்பவர் சொனாக்ஷி சின்ஹா மட்டுமே. மூவருக்கும் வாழ்த்துகள் !
அருமை சொனாக்ஷி
அருமை சொனாக்ஷி
ரஜினியை இதை விட எல்லாம் பல படங்களில் சிறப்பாக பார்த்து விட்டதால் இதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது . சிவாஜி பட பாணியிலான கெட்டப் நன்றாக தெரிகிறது .
வழக்கமாக ரஜினி டான்சில் எந்த ஸ்டெப்பையும் ஃபினிஷ் பண்ணாமல் முக்கால்வாசிதான் ஆடுவார். ஆனால் அவரது ஸ்டைல் காரணமாக அதுவே அழகாக இருக்கும் . இதில் வழக்கம் போலவே ஃபினிஷ் பண்ணாத டான்ஸ் ஸ்டெப்கள் உண்டு . ஆனால் அந்த அழகு மிஸ்ஸிங் . சொனாக்ஷி சின்ஹாவுடனான என்னை விட அழகி உண்டு பாடலில் வெள்ளை உடையில் ஆடும் போது அவ்வளவு டயர்டாக இருக்கிறார் .
தவிர அந்தப் பாடலின் பல்லவியே தப்பாக இருக்கிறது . ‘என்னை விட அழகி உண்டு’ என்ற வரி ஒகே . ஆனால் ‘உன்னை விட தலைவன் இல்லை’ என்பது என்ன மாதிரியான சொல்லாடல் கவிஞரே ? என்னை விட அழகி என்பதில் அழகான பெண் என்ற பொருள் இருப்பதால் அதற்கு முன்பு வரும் ‘விட’ என்ற ஒப்புமை வார்த்தைக்கு பொருள் இருக்கிறது .
ஆனால் அடுத்த வரியில்  ”உன்னை விட தலைவன் இல்லை”  என்றால் எந்த மாதிரியான தலைவன் என்று சொன்னால்தானே ‘விட’ என்ற வார்த்தைக்கு பொருள் வரும் ? உன்னை விட நல்ல தலைவன் , சிறந்த தலைவன் , உயர்ந்த தலைவன் , அன்பான தலைவன் இல்லை என்று சொன்னால்தானே அது அர்த்தமுள்ள வரி ? இப்படியாதமிழை கொலை செய்வது ?
lingaa-teaser-images-9கடைசி காட்சியில் பைக்கில் போகும் ரஜினி,  ‘புராஜக்ட் ஏ’ படத்தில் ஜாக்கி சான் செய்தது போல,  பைக்கில் இருந்து ஜம்ப் பண்ணி ஜஸ்ட் ஒரே தாவலில் பலூனுக்குள் குதித்தாலாவது பரவாயில்லை . ஆனால் வான் வெளியில் ஒரு பத்து நிமிஷம் நீந்திக் கொண்டே வருகிறார் பாருங்கள் , கொடுமை.
இப்படியாக படத்தின்  மற்ற விசயங்களும் ஈர்க்கவில்லை .
உண்மை,  நேர்மை,  நன்றி  உணர்ச்சி,  மண் மீதான பற்று , வரலாறு குறித்த பார்வை உள்ள யார் இந்தப் படத்தை பார்த்தாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் கேப்டன் பென்னி குயிக்தான் ரஜினி முகத்துக்கு மேல்,  மாஸ்க் போல தெரிவார் .
ஆனால் கேரளர்கள் கோவித்துக் கொள்வார்கள் என்ற சுயநலம் காரணமாக பென்னிகுவிக்கை முழுக்க முழுக்க புறக்கணித்த விஷயம்தான் கூனிக் குறுக வைக்கிறது .
அந்த விதத்தில் லிங்கா நிச்சயமாக ஒரு நன்றிகெட்ட படம்தான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →