நாராயணன் செல்வம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன், சுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் நடிப்பில்
வைகுந்த் சீனிவாசன் இசையில் தணிகை தாசன் ஒளிப்பதிவில்
ராஜசேகர் – யுவராஜ் இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருக்கும் படம்.
தன்னால் முடிந்த வகையில் எல்லாம் மற்றவர்களை நம்ப வைத்து பண விசயத்தில் ஏமாற்றி சம்பாதிக்கும் நபருக்கு ( விக்னேஷ் சண்முகம் ) சலூனில் பணிபுரியும் ஒரு பெண்ணின் (நிரஞ்சனி அசோகன் ) நட்பு கிடைத்து, காதல் ஆகிறது .
இவன் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரிந்து அவள் விலகப் போக, அவன் திருந்துகிறான். பெரிய அளவில் தான் ஏமாற்றிய ஒரு நபருக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறான் .
இந்த நிலையில் அப்படித் திருப்பிக் கொடுத்த நபரோடு வரும் ஒரு நபரைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறாள் . காரணம் அந்த புதிய நபர்தான், பணக்காரனாக இருந்த தனது தந்தையை ஏமாற்றி , வறுமை நிலைக்குத் தள்ளியவர் என்று கூறும் அவள், “இவனை மட்டும் உன் பாணியில் ஏமாற்று ” என்கிறாள் .
அவள் சொல்லும் நபர் ஒரு தாதா
காதலி சொன்னபடி காதலன் செய்யப் போக, நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
கட்டுக்கட்டாய் பணம் , திருட்டு, ஏமாற்று, தங்கக் கட்டிகள், கடத்தல் , காதல் என்று… ரசிகர்களை ஈர்க்கும் என பல படைப்பாளிகள் நம்புகிற பின்னணி !
விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன் ஜோடியின் எளிமையான அழகும் நடிப்பும் படத்தின் பலம். மற்ற நடிகர்களும் பெரிதாகக் குறையில்லை.
காமெடி காட்சிகள் சில இடங்களில் சிறப்பு .
சில எதிர்பார்த்த திருப்பங்கள் , சில எதிர்பாராத திருப்பங்கள், சில ஒகே திருப்பங்கள், சில காதில் பூ சுற்றும் திருப்பங்கள் என்று படம் போய்க் கொண்டே இருக்கிறது . கிளைமாக்ஸ் பகுதியில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்
இன்னும் சிறப்பான உலோகம் (கதை),சிறப்பான டிசைன் (திரைக்கதை), சிறப்பான பாஸ்வேர்ட் (மேக்கிங் ) இன்னும் பாதுகாப்பான அரை ( கேரக்டர்களில் குணாதிசயத் தெளிவு) இருந்திருந்தால் ரசிகர்களை லாக் செய்திருக்கும் இந்த லாக்கர்