லவ் @ விமர்சனம்

ஆர் பி பிலிம்ஸ் சார்பில் ஆர் பி பாலா , கவுசல்யா பாலா தயாரிக்க, பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா நடிப்பில் மேற்படி ஆர் பாலாவே இயக்கி இருக்கும் படம் 

பெரும் பணக்காரர் ஒருவரின் ( ராதாரவி) ஒரே மகளுக்கும் ( வாணி போஜன்) , வியாபாரத்தில் நஷ்டப்பட்ட ஒரு நபருக்கும் ( பரத்) நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது . 

மகளுக்காக ஒரு பெரிய  வீட்டை அப்பா கொடுக்க, மருமகனோ சுய மரியாதை காரணமாக , நான் நல்ல நிலைமைக்கு வரும் வரை கல்யாணம் வேண்டாம் என்கிறார் . மீறி மனைவி கர்ப்பம் ஆகிறார் . 

சண்டை வருகிறது . எல்லை மீறிய கோபத்தால் சண்டை பெரிதாகி , குடிபோதையில் இருந்த கணவன் அடிக்க மனைவி இறக்கிறாள். தானும் தற்கொலை செய்து கொள்ள கணவன்  முயல , காலிங் பெல்  ஒலி.

திறந்தால் நண்பன் ஒருவன் (விவேக் பிரசன்னா) . தன் மனைவிக்கும் அந்த மனைவியின் தோழன் ஒருவனுக்கும் முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகப்படும் அந்த நண்பன் , தற்கொலை… மனைவியைக் கொல்வது.. மனைவியின் கள்ளக்காதலனைக் கொல்வது… என்ற மூன்றில் ஒரு முடிவை எடுக்கவும் , அதை செய்யவும் ஒத்துழைப்புக் கேட்கிறான் . 

அடுத்து மற்றொரு  நண்பன் (போப்) வேறு  வருகிறான். அவன் இன்னொருவனின் மனைவியோடு (ஸ்வயம் சித்தா) வந்து வீட்டின் ஓர் அறையைக் கேட்கிறான் .  தனது மனைவியிடம் அவன் சிக்கிக் கொள்ள, அந்த மனைவி கணவனோடு வந்து இருக்கும் அந்த இன்னொருவனின் மனைவியை போனில் மிரட்டுகிறாள். 

இது போதாதென்று செத்துப் போன மனைவியின் அப்பா வருகிறார்  பேச்சுவாக்கில் மனைவியை அடித்தால் என்ன தப்பு என்று கொலை செய்தவன் கேட்க, அந்தக் கேள்விக்கே அவன் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். 

இதெல்லாம் என்ன  என்ற கேள்விக்கு , படம் பார்ப்பவருக்கு கிடைக்கும் – யூகிக்க முடிந்த சுவாரஸ்யமற்ற விடையும் அதன் பின்னர் நடக்கும் ரொம்ப சுலபமாக யூகிக்க முடிந்த முடிவுமே இந்தப் படம். 

மலையாளத்தில் ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆஷிக் உஸ்மான் தயாரிக்க, ஷைன் டொம் சாக்கோ, ரஜிஷா விஜயன், கோகுலன், சுதி கொப்பா, வீணா நந்தகுமார் , ஜானி ஆண்டனி, நடிப்பில் காலித் ரஹ்மான் இயக்கி,  2020 இல் இதே பெயரில் வெளிவந்த படத்தின் அச்சு அசல் ஜெராக்ஸ் ரீமேக் ( கிளைமாக்சில் சில நொடிகள் வரும் ஒரு விவரணை தவிர )

படத்தின் முதல் பலம் முக்கிய பலம் பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு . கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது. அருமை 

இரண்டாவது வாணி போஜனின் லுக் மற்றும் கெத்தான நடிப்பு . 

அடுத்து பரத்தின் பங்களிப்பு . 

ராதா ரவி வரும் ஒரு சீனும் அந்த பளீர் அறையும்  படைப்பாளிக்கு  (WHOM SO EVER IT MAY CONCERN)  பெருமை சேர்க்கிறது 

மற்றபடி மல்லாந்து படுத்த கரப்பான் பூச்சி கடைசிவரையில் குப்புறத் திரும்ப முடியாமல் குலைந்து போன கதை தான். 

படம் முழுக்க ரெண்டே பேர்… ஒரு பாதியில் இன்னும் மூன்று பேர்.. ஒவ்வொரு காட்சிக்கு என மொத்தம் மூணு பேர்… அங்கே இங்கே பிரேமுக்குள் ரெண்டு பேர்.. என்று இந்தப் படத்தில் வரும் மொத்த ஜீவராசிகளையும் இரு கை விரல்களில்  முடித்து  விடலாம் . 

முக்கால் வாசிப்படம் ஒரே லொக்கேஷன்… மூணு நாலு லொக்கேஷனில் ஒவ்வொரு காட்சியில் மிச்ச படம் …என்று லோக்கேஷன்களை ஒரு கை விரல்களில் சுருக்கி விடலாம் . 

படம் எடுக்க ரொம்ப செலவு குறைவாக வசதியாக ஹாயாக  ஆஹா ஓஹோ வென இருக்கும். அப்பப்போ சிரிச்சு விளையாடலாம் ஆனால் அதுவா முக்கியம்?

சினிமா என்பது ஷூட்டிங் விசயத்தில் சொகுசு பார்ப்பது அல்ல . கதைக்கு உண்மையான திரைக்கதையையும் அந்தத் திரைக்கதைக்கு உண்மையான படமாக்கலையும் கொடுப்பது 

மலையாளக்கரையிலேயே இது அவ்வளவாக கரை ஏறாத படம். அதை எதுக்கு எடுக்கணும்? சரி எடுத்தாச்சு . அதை அப்படியேதான்  ஈயம் பூசி வைக்கணுமா என்ன ?

மலையாள ஒரிஜினலுக்கு மாற்றாக வீட்டுக்குள் வரும் நண்பர்கள் எல்லோருமே நிஜ  ஆட்களாக இருந்தால் ஓர் அசத்தலான பரபரப்பான திரைக்கதை வந்திருக்குமே என்ற ஏக்கம் கூட வருகிறது . 
இந்தப் படத்துக்கு லவ் என்று பெயர் வைத்த அந்த மலையாளப் பட ஆட்களே கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். 

இதையும் மீறி பவுசான  ஷூட்டிங் .. சின்ன கல்லு பெத்த லாபம் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தை வேறு மொழிகளில் யாராவது ரீமேக்கினால் மறுபடியும் லவ் என்று மட்டும் பெயர் வைக்க வேண்டாம் என்று ஏசப்பா சாட்சியாக காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் 

வேணும்னா லவ் வுக்குப் பதில் ‘லொள்’னு வைக்கலாம் . 

ASKING THE MALAYALAM LOVE MOVIE CREATORS ALSO …  WHY THE NAME LOVE , FOR THE BLOODY AND ‘BLOODY’ SCRIPT ?

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *