மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டைமென்ட் சார்பில் நாசரேத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் , யுவராஜ் கணேசன் தயாரிப்பில் மணிகண்டன் , ஸ்ரீகவுரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரீஷ் குமார், ரினி, நிகிலா சங்கர், அருணாச்சலேஸ்வரன் நடிப்பில் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
இரண்டாம் தாரமான அம்மாவுக்கும் ( கீதா கைலாசம்) , குடிகார அப்பாவுக்கும் ( சரவணன்) பிள்ளையாகப் பிறந்து அப்பாவின் மீது உள்ள கோபத்தால் எல்லார் மீதும் அளவுக்கு மீறிக் கோபப்படுகிற – குடிப்பழக்கம் உள்ள – நபருக்கும் (மணிகண்டன்) ,
நன்றாகப் படித்து , ஒய்ட் காலர் வேலைக்குப் போய் எலைட் வாழ்க்கை முறைக்குப் பழகிய பெண்ணுக்கும் ( ஸ்ரீகவுரி பிரியா) பள்ளிக்காலம் முதலே இருந்த காதல்…
ஒருநிலையில், இவனது சந்தேகம் , கோபம் இவற்றாலும் ‘நான் சரியாதான் இருக்கேன்கறத உனக்கு நிரூபிக்கத் தேவையில்லை’ என்று நினைக்கும் அவளது கம்பீரத்தாலும் சிக்கலுக்கு ஆளாகிறது.
இவனுக்கே உரிய மனோபாவத்தில் இவன் நெருக்க, அதை எதிர்த்தாலும் விலக முடியாமல் அவள் தவிக்க, ஒரு நிலையில் முதலில் அவள் தரப்பிலும் பிறகு இவன் தரப்பிலும் அணைகள் உடைய, நடந்தது என்ன என்பதே படம் .
மிகுந்த சிக்கலான – பெரும்பாலும் ஹீரோயிசம் இல்லாத ஹீரோ கேரக்டரில் – தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து இருக்கிறார் மணிகண்டன்.
மலையாள வாடையைத் துடைக்க முடியாத வசன உச்சரிப்பு இருந்தாலும், மன்னித்து மன்னித்து மனம் உடையும் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் ஸ்ரீ பிரியா கவுரி .
முடியாத நிலையில் கூட நல்லவன் என்ற கேரக்டரில் கண்ணா ரவி இயல்பாக நடித்துள்ளார் . முடிந்தவரை நல்லவன் கேரக்டரில் ஹரீஸ்குமார் , நட்பின் நெருக்கத்தை இயல்பாகக் காட்டும் அருணாச்சலேஸ்வரன் , தைரியமான மாடர்ன் பெண்ணாக ரினி, ஊசலாடும் கலாச்சார மனநிலை கொண்ட பெண்ணாக நிகிலா சங்கர்… அனைவரின் நடிப்பு கதாபத்திரத் தேர்வு யாவும் சிறப்பு .
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தின் குளிர் கண்(ணாடி). அருமை
சான் ரோல்டனின் இசை சிறப்பு .
படத்தில் கீதா கைலாசம் , சரவணன் கதாபாத்திரங்களும் அதை வைத்து திரைக்கதையில் முக்கிய பிரச்னைக்கு தீர்வு எடுப்பதும் இயக்குனருக்கு சபாஷ் சொல்லச் சொல்கிறது . அவர்கள் சம்மந்தப்பட்ட ஆரம்பக் காட்சிகளில் எழும் அவல நகைச்சுவையும் அழகு
அதே நேரம் யதார்த்தம் என்ற பெயரில் காதல் காலத்தில் ஜஸ்ட் லைக் தட் செக்ஸ் , கஞ்சா விற்கும் ஹீரோவின் நெருங்கிய நண்பன், கஞ்சா குடிப்பவன் நெருங்கிய நண்பன் , கஞ்சா விற்பவனின் நண்பனாக இருப்பது குற்றம் என்ற மேட்டுக்குடி மனோபாவத்தின் தலையைத் தடவிக் கொடுப்பது, எதற்கெடுத்தாலும் எதையாவது உடைக்கும் நாயகனின் பைத்தியக்காரத்தனத்தை அழுத்தமாகக் காட்டுவது, இவை எல்லாம் கண்டிப்புக்கு உரியன
நாயகன் திரும்பத் திரும்ப செய்ததையே செய்யும் காட்சிகள் மைனஸ்.
இன்னும் நல்ல உரையாடல்கள் கூடத் தேவைப்படும் படம் இது . சில முக்கிய விஷயங்கள் எமோஷனாக இல்லாமல் ஸ்டேட்மென்ட் ஆகக் கடந்து போவதையும் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
விஜய் நடித்த லவ்டுடே படத்தை நினைவு படுத்தும் இறுதிக் காட்சிகள் . ஆனால் அந்த அளவு நேர்த்தியும் நறுக்கும் இல்லாதது ஒரு குறை என்றாலும் மொத்தமாக படம் ஓகேதான்
லவர் … வெறுக்க முடியாது .