சென்னை லயோலா கல்லூரியின் தமிழ் ஊடகத்துறை மாணவர்களுக்கு, திரைப்படம் படம் எடுப்பது பற்றிய பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார், சந்தனக்காடு உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படைப்புகளை தந்த இயக்குனர் வ.கௌதமன். அதன் ஓர் அங்கமாக ஒரு குறும்படம் எடுப்பது பற்றிய நேரடி பயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட கதையை படமாக எடுக்க முயன்று , கடைசி நேரத்தில் அது முடியாமல் போனது.
இந்த நிலையில் கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் எழுதிய புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்றான வேட்டி என்ற சிறுகதையை தேர்வு செய்த கௌதமன் , கி.ராவிடம் முறைப்படி அனுமதி பெற்று , லயோலா கல்லூரி மாணவர்களுக்கு செயல்முறைப் பாடமாக , அந்த சிறுகதையை வேட்டி என்ற பெயரிலேயே குறும்படம் ஆக்கினார் .
தமிழ் ஈழப் போராட்டத்துக்கு தன் தூரிகைகளால் பார் பாராட்டும் பதிவுகள் தந்த போராளி ஓவியர் வீர சந்தனம், உடல் நலம் சீர்கெட்டு மரணத்தின் பிடியில் சிக்கி , பின்னர் அதில் இருந்து மீண்ட நிலையில் மிகுந்த உடல் உபாதைகளுக்கு இடையில் அந்தப் படத்தின் கதை நாயகனாக நடித்துக் கொடுத்தார்
தமிழ் தேசியம் , சுதந்திர இந்தியாவின் நிலை என்று அந்தக் கதையில் கி.ராவின் அனுமதியோடு சிறு சிறு மாற்றங்களை செய்து, தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் படைப்பாக அதை கௌதமனும், லயோலா கல்லூரியின் தமிழ் ஊடகத்துறை பேராசிரியர் சாரோன் செந்தில்குமாரும் , மாணவர்களும் உருவாக்கினார்கள் .
இதை ஒரு பெரும் குற்றமாக கருதிய லயோலா கல்லூரி நிர்வாகம், இதன் எதிர்வினையாக சாரோன் செந்தில் குமாரை நிரந்தரப் பதவி நீக்கம் செய்ததோடு, படத்தில் முக்கியப் பங்காற்றிய எட்டு மாணவர்களை பெயில் ஆக்கி மேற்கொண்டு படிக்க விடாமல் செய்து , மார்க் ஷீட்டையும் தராமல் அவர்கள் வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களும் அந்தப் படத்தில் பணியாற்றிய நிலையில் எட்டு மாணவர்களை மட்டும் தண்டிததன் மூலம் வெள்ளைக்காரன் பாணியில் பிரித்தாளும் சூழ்ச்சியையும் செய்து இருக்கிறது .
அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு பனிரெண்டாயிரம் பண உதவி செய்த ‘குற்ற’த்துக்காக பாதிரியார் படிப்புப் படித்த மார்க் என்ற மாணவரின் மாற்றுச் சான்றிதழை தராமல் அலைய வைக்கிறது .
இந்த தகவல்களை எல்லாம் சென்னையில் நடந்த மேற்படி வேட்டி குறும்பட வெளியீட்டு விழாவில் அந்த பேராசிரியரும் பாதிக்கப்பட்ட மாணவர்களும் நேரடியாக மேடையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்
அந்த நிகழ்ச்சியில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் , ம.தி.மு.க. தலைவர் வைகோ,மணியரசன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர் .
எல்லோரும் வீர சந்தனத்தின் சேவைகளை, நடிப்பை புகழ்ந்தனர். தப்பில்லை .
கௌதமனின் படைப்பாற்றலை கொண்டாடினர் . நியாயம் .
தமிழகம், தமிழ் ஈழம் , தமிழ் தேசியம் பற்றி எல்லாம் சிறப்பான கருத்துகளை பகிர்ந்தனர் . சிறப்பு.
ஆனால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்காக ‘லயோலா கல்லூரி நிர்வாகத்திடம் நீதி கேட்போம் .பாதிக்கப்பட்டவர்களுக்கு வர வேண்டிய மதிப்பெண் பட்டியல் , மாற்றுச் சான்றிதழை பெற்றுத் தருவோம்’ என்று ஒருவர் கூட , மருந்துக்குக் கூட பேசவில்லை.
என்ன அநியாயம் !
தமிழ் தேசியம் பற்றிய ஒரு படைப்பை உருவாக்குவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் பெற்றுத் தர முயலாமல், சும்மா முழங்கிக் கொண்டு போவதே வேலை என்று இருந்தால், அப்புறம் எப்படி இது போன்ற மண் சார்ந்த புதிய படைப்பாளிகள் தைரியமாக வருவர் ?
இது ஒரு பக்கம் இருக்கட்டும் .
கன்யாகுமரியை தமிழ்நாட்டில் இருந்து பிரித்து கேரளாவுடன் இணைப்போம் என்று பேசும் கருத்துகளுக்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும் ….
சென்னையை ஆந்திராவுடன் இணைப்போம் என்று கூவும் கருத்துகளுக்கு ஆந்திர கிறிஸ்தவ நிறுவனங்களும் பால் வார்த்துக் கொண்டு இருக்கின்றன.
அப்படி இருக்க , சுதந்திர இந்தியாவில் தமிழகமும் இந்தியாவும் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்பதை பேசும் ஒரு படைப்பில் பணியாற்றிய காரணத்துக்காக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் வாழ்வில் லயோலா கல்லூரி நிர்வாகம் இப்படி விளையாடுகிறது என்றால் …
இதன் மூலம் லயோலா கல்லூரி நிறுவனம் என்ன சொல்ல வருகிறது? அல்லது இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு லயோலா கல்லூரி நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது ?
உப்புப் போட்டு உண்பவன் , சுத்த ரத்தம் உள்ளவன் கேட்கக் கடவன் !