திங்க் மூவீஸ் மற்றும் எஸ் என் எஸ் மூவி புரடக்ஷன்ஸ் தயாரிக்க யோகி பாபி, வீரா, ரேச்சல் ரெபக்கா, அப்துல் லீ, ஆர் எஸ் சிவாஜி, அமீத் பார்கவ், சாத்விக், சுஹாசினி குமரன் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கும் படம்.
சிறுவயது முதலே அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தூற்றப்பட்டு, அப்படியே தானும் நம்பி வளர்ந்து, கல்யாணம் ஆகி மனைவி (ரேச்சல் ரெபக்கா) ஒரு மகன் ( சாத்விக்) என்றாகி ரியல் எஸ்டேட் புரோக்கராக சொற்ப வருமானத்தில் போராடி வரும் ஒரு நபருக்கு ( யோகி பாபு)…
எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டக் குழுக்கலில் ஒரு கார் பரிசாக விழுகிறது . கார் இருப்பதால் ரியல் எஸ்டேட் கம்பெனியில் மாதச் சம்பளமும் கிடைக்கிறது . எல்லோரும் அவனை லக்கி மேன் என்கின்றனர் .
போலீஸ் துறையில் சக அதிகாரிகளி ன் முறையற்ற செயலால் கோபத்தில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி ( வீரா) .
அவனோடு கல்யாண நோக்கில் பழகும் ஒரு பெண் (சுஹாசினி குமரன்)
லக்கி மேனின் காரை அந்த போலீஸ் அதிகாரி சாலையில் நிறுத்த, அவன் ரியல் எஸ்டேட்
ஓனரிடம் உதவி கேட்க , அவர் இந்த போலீஸ் அதிகாரிக்கு டார்ச்சர் கொடுக்கும் போலீஸ் அதிகாரியிடம் சொல்ல, அவர் சிபாரிசுக்கு வர , அதனால் இந்த போலீஸ் அதிகாரி எரிச்சல் ஆகிறார் .
சாதாரண மனிதன்தான் பெரிய ஆள் என்று லக்கி மேன் சொல்ல, நேரமையனவன்தான் பெரிய மனிதன் என்று போலீஸ் அதிகாரி சொல்ல , இருவருக்கும் ஈகோ போர் துவங்குகிறது .
போலீஸ் அதிகாரி லக்கி மேனை விரட்ட, அவன் அவரை மன்னிப்புக் கேட்க வைக்க, போலீஸ் அதிகாரி கொந்தளிக்க, லக்கி மேனின் கார் திருடு போகிறது.
மனைவி கோவித்துக் கொண்டு அப்பா வீட்டுக்கு போய் விடுகிறாள் . போலீஸ் அதிகாரிதான் திருடி இருப்பார் என்று எண்ணி அவரது செல்ல நாயை லக்கி மேன் கடத்த அப்புறம் நடந்தது என்ன என்பதே படம்.
யோகி பாபு கதாபாத்திரம், குடும்பச் சூழல்ம அவன் லக்கி மேன் ஆவது என்று அந்த பகுதியை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார் பாலாஜி வேணுகோபால் . நண்பன் , வீட்டு ஓனர் , நிலம் வாங்க வந்தவர் என்று படம் முழுக்க வரும் எளிய சிறிய கதாபாத்திங்கள் நல்லவர்களாக வாழ்வில் நம்பிக்கை ஊட்டுபவர்களாக இருப்பது அருமை . இன்று சினிமாவிலாவது சொல்ல வேண்டிய விஷயம் . சபாஷ் பாலாஜி வேணுகோபால்
அதே போல அந்த போலீஸ் அதிகாரி கேரக்டரும் வித்தியாசமானது .
யோகி பாபு படத்தைத் தூண் போலத் தாங்குகிறார் . சூழலுக்கும் கேரக்டருக்கும் அப்பாற்பட்டு பல நேரம் பேசிக் கொண்டு இருந்தாலும் இன்னொரு பக்கம் காமெடி பஞ்ச்களும் சிறப்பு
மனைவி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ரேச்சல் ரெபக்கா.
அந்தக் கதாபாத்திரமும் தனித்தன்மையோடு சுய மரியாதையோடு படைக்கப்பட்டு இருப்பது அழகு. இங்கேயும் இயக்குனரின் முத்திரை
யோகி பாபு மாதிரியே மகன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆள் பிடித்து இருக்கிறார் இயக்குனர் . அந்தத் தம்பியும் சிறப்பாக நடித்துள்ளான்
வீரா நிறுத்தி நிதானமாக கம்பீரமாக நடித்துள்ளார்
மிக யதார்த்தமாக் நடித்துள்ளார் அப்துல் லீ . சுகாசினியும் ஒகே
பாலாஜி வேணுகோபாலின் வசனங்களில் சிரி சிந்தி என்பது போல பல சிரிக்கும்படியும் இருக்கிறது . பல சிந்திக்கும்படியும் இருக்கிறது. இன்னும் பல சிந்தும்படியும் இருக்கிறது .
சந்தீப் விஜய்யின் ஒளிப்பதிவு காட்சியின் சூழலுக்கு பலம் சேர்க்கிறது
சான் ரோல்டன் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன . பின்னணி இசை குறை சொல்லும்படி இல்லை . பாராட்டவும் பாலாஜி வேணுகோபால் இடம் தரவில்லை
இதுதான் நடக்கும் என்று நினைக்கும்போது வேறொன்று நடப்பது திரைக்கதையில் நல்ல உத்திதான் . ஆனால் அது ரசிக்கும்படியாகவும் தேவையாகவும் இருக்க வேண்டும். நினைப்பது அல்லாமல் வேறொன்று நடப்பது மட்டுமே சுவாரஸ்யம் ஆகி விடாது .
மெதுவான நகர்வு, நாடகத்தனமான பல காட்சிகள் , ஸ்வீட் அல்லாத நத்திங்ஸ் என்ற அளவில் விரியும் காட்சிகள், எமோஷனாக அல்லாமல் ஸ்டேட்மென்ட் ஆக வளர்ந்து முடியும் கிளைமாக்ஸ் இவை எல்லாம் மைனஸ்
மொத்தத்தில் லக்கி மேன்…
அன்லக்கி இல்லைதான் . அதே நேரம் ‘அட…’ போடும் அளவுக்கு லக்கியும் இல்லை.