பீப் ஸ்டோன் ஸ்டுடியோ சார்பில் காஞ்சர்லா பார்த்தசாரதி வழங்க, எடிட்டர் கோலா பாஸ்கர் தயாரிப்பில் அவரது மகன் கோலா பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, இயக்குனர் செல்வராகவனின் எழுத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி இருக்கும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’ .
ஜனவரி ஒன்றாம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை தமிழகம் எங்கும் வெளியிடும் வால்மார்ட் சாய் , படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் செல்வராகவன்” படத்தை நான் பார்த்து விட்டேன் . படம் எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது.
ஓர் ஆண் இயக்குனரான நான் பெண்களின் உணர்வுகளை பேசும் படங்களை எடுத்தேன். ஆனால் என் மனைவி கீதாஞ்சலி ஒரு பெண் இயக்குனராக இருந்து ஆண்களின் உணர்வுகளை பேசும் படத்தை எடுத்துள்ளார் .
நான் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டு கீதாஞ்சலியை படப்பிடிபுக்கு அனுப்புவேன். அது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது . படப்பிடிப்பில் இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போன் செய்து குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்.
இந்தப் படத்தின் மூலம் கோலா பாலகிருஷ்ணா மற்றும் இசை அமைப்பாளர் அம்ரித் ஆகியோரை அறிமுகப்படுத்தியது சந்தோஷமாக இருக்கிறது. புதிய படைப்பாளிகளை வரவேற்போம் .
எடிட்டர் கோலா பாஸ்கர் என் படங்களில் படத்தொகுப்பு செய்வதற்காக வேறு யார் படத்திலும் வேலை செய்யாமல் எப்போதும் என்னுடனேயே இருந்து என் கூடவே பயணிப்பவர். 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இருந்து என்னுடனேயே இருப்பவர். அவர் வெல்ல வேண்டும் ” என்றார் .
கீதாஞ்சலி பேசும்போது ” இந்தப் படத்தின் நாயகன் கோலா பாலகிருஷ்ணா மாதிரி ஒரு இனிய மனிதரை நான் பார்த்ததே இல்லை .
என் வாழ்க்கையை மாற்றிய விஷயங்கள் மூன்று. முதலாவது செல்வராகவன் சாரை நான் பார்த்த தருணம் . இரண்டாவது அம்மாவான தருணம் . மூன்றாவது இந்தப் படத்துக்கு இயக்குனரான தருணம் .
நானும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒன்றாக வேலை பார்த்தோம். அப்போதே நாங்கள் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்க நினைத்தோம் . அது இப்போது நிறைவேறி விட்டது. “என்றார் .
தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் தன் பேச்சில்
” நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக பயணித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தின் தலைவர் செல்வராகவன். அவர் தன்னுடைய கதையை கொடுத்து என் மகனை ஹீரோவாக ஆக்கி உள்ளார்.
படத்தை கீதாஞ்சலி சிறப்பாக இயக்கி உள்ளார் . அம்ரித் மிக சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார் . படத்துக்கு அனைவரும் ஆதரவும் வேண்டும் ” என்றார் .
படத்தை வாங்கி வெளியிடும் வால்மார்ட் சாய் பேசும்போது”
உண்மையில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட விரும்பிய ஒருவருக்காக படத்தைப் போட்டார்கள். அவரோடு சபடத்தை நான் பார்க்கத்தான் போனேன் . ஆனால் படம் பார்த்ததும் அசந்து விட்டேன் . நானே உள்ளே புகுந்து படத்தை வாங்கி விட்டேன்.
இந்தப் படத்தை நான் மிக சிறப்பாக வெளியிட்டு படத்துக்கு பெரும் பலமாக இருப்பேன் ” என்றார் . (இப்படி ஒரு நபர் கிடைப்பதுதான் இப்போது பெரிய விஷயம்)
படத்தின் கதை பற்றி நான் கேட்டபோது பேசிய கீதாஞ்சலி
” என் ஹீரோயின் எல்லோரையும் மயக்கும் நபர் அல்ல. அவள் மிக சாதாரணமானவள். பல சமயம் அவள் எரிச்சல் ஊட்டும் நபராக இருக்கலாம் . என் ஹீரோவும் எல்லோரையும் ஈர்க்கும் நபர் அல்ல . அவனும் சாதரணமான ஒருவன்தான் . ஆனால் இருவரும் சேரும்போது நடக்கும் நிகழ்வுகள் உங்களை மயக்கும் .
ஒன்று நீங்கள் ஹீரோவை நேசித்து ஹீரோயினை முழுக்க வெறுப்பீர்கள் . அல்லது ஹீரோயினை நேசித்து ஹீரோவை முழுக்க வெறுப்பீர்கள் . பார்த்த பிறகும் பல நாள் நீங்கள் விவாதிக்கும் படமாக இது வரும் என்கிறார்.
வாழ்த்துகள் அனைவருக்கும் !