வி ஹவுஸ் புரடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, சிம்பு , எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஏ .சந்திரசேகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா , ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் படம் மாநாடு.
அப்துல் காலிக் என்ற ஓர் இஸ்லாமிய இளைஞன் (சிம்பு).. அவனது நண்பன் மூர்த்தி (பிரேம்ஜி) . மூர்த்தி காதலிக்கும் இஸ்லாமியப் பெண்ணுக்கு (ஆஸ்னா) அவர்கள் குடும்பத்தார் திருமண ஏற்பாடுகள் செய்ய, நண்பனுக்காக பெண்ணைத் தூக்க கோவை வருகிறான் காலிக். உதவும் இன்னொரு நண்பன் சையது (கருணாகரன்) .
காலிக் வரும் விமானத்தில் பயணிக்கும் சீதாலட்சுமி என்ற பெண் ( கல்யாணி பிரியதர்ஷன் ) கல்யாண மாப்பிள்ளையின் அலுவலகத் தோழி, அறியாமல் சீதா செய்யும் ஓர் உதவியின் மூலமே பெண்ணை தூக்குகிறான் காலிக் .
காரில் விரையும்போது காரில் மோதும் இஸ்லாமிய இளைஞன் ஒருவன் (டேனியல் போப்) மரணம் அடைய , அங்கே அங்கே வரும் ஒரு போலீஸ் அதிகாரி (எஸ் ஜே சூர்யா) காலிக் மற்றும் நண்பர்களைக் கைது செய்கிறார் .
அப்போதுதான் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் மாநில முதல்வரை (எஸ் ஏ சந்திரசேகர்) சுட்டுக் கொல்ல அந்த இளைஞன் போலீசாரால் பிளாக் மெயில் செய்யப்பட்டதும் , அந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞனின் குடும்பம் துப்பாக்கி முனையில் இருப்பதும் காலிக்குக்கு தெரிகிறது.
காலிக்கின் நண்பர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு முதல்வரை காலிக் சுட்டுக் கொல்லாவிட்டால் நண்பர்களைக் கொன்று விடுவதாக போலீஸ் மிரட்ட , காலிக் முதல்வரை சுட , உதவி போலீஸ் அதிகாரி ஒருவர் ( மனோஜ் பாரதிராஜா) காலிக்கை சுட்டுக் கொள்ள,
விமானத்தில் திடுக்கிட்டு விழிக்கிறான் காலிக் .
அதாவது அவன் டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு இருப்பது அவனுக்கு புரிகிறது . அதாவது நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்கும் . அவனுக்கு மட்டும் நடந்தது நினைவில் இருக்கும் . மற்றவர்களுக்கு நடந்த ஏதும் தெரியாது .
மீண்டும் சம்பவங்கள் ஆரம்பத்தில் இருந்து நிகழ , எங்கே எந்த செயலை மாற்றிச் செய்தால் முதல்வரைக் காப்பற்றலாம் என்று காலிக் முயல, ஒவ்வொரு முறையும் அவன் வேறு வேறு வகைகளில் கொல்லப் பட, அப்போதுதான் அவனுக்கு புரிகிறது ,
அவன் கொல்லப் படாவிட்டால் டைம் லூப் முடிந்து விடும் , அதாவது அதுவரை இறந்த அவனது நண்பர்கள் , மற்றும் முதல்வர்கள் நிஜமாக இறந்து விடுவார்கள்.
நண்பர்கள் இழப்பு மட்டுமல்ல முதல்வரைக் கொன்ற பிறகு மதக்கலவரத்தை ஏற்படுத்த இருக்கும் திட்டமும் காலிக்குக்கு புரிய , அப்புறம் என்ன நடந்தது என்பதே மாநாடு .
மிக சிறப்பாக தரமாக பிரம்மாண்டமாக படத்தை தயாரித்து இருக்கிறார் சுரேஷ் காமாட்சி .
டைம் லூப் என்ற (ஒரு குறிப்பிட்ட காலநேரம் மீண்டும் மீண்டும் அப்படியே வருவது ) – சற்று அசந்தாலும் ஆடியன்சை சோதிக்க வாய்ப்புள்ள – படத்தை அதிரடி ஆக்ஷன் படமாக , சமூக நல்லிணக்கப் படமாக வண்ணமயமாக சிறப்பான மேக்கிங்கில் எழுதி இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
டைம் லூப் படங்களில் கேமரா கோணங்கள், படத் தொகுப்பு இரண்டும் முக்கியம் . அப்புறம் இசை . ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்போது கட்டாயம் இருந்தால் அன்றி காட்டிய கோணங்களிலேயே மீண்டும் மீண்டும் காட்டக் கூடாது .
ஒவ்வொரு சம்பவமும் எந்த நீளத்தில் கால அளவில் முதன் முதலில் காட்டப்படுகிறதோ அதே அளவில் மீண்டும் மீண்டும் காட்டப் படக் கூடாது . கதைப் போக்குக்கு ஏற்றவாறு எத்தனையாவது லூப்பில் எந்த காட்சி நீளமாக இருக்க வேண்டும், எந்த காட்சி குறைவாக இருக்க வேண்டும், மீண்டும் எங்கே நீளம் அதிகரிக்க வேண்டும் என்ற தெளிவு முக்கியம்
.அப்புறம் வளரும் கதைப்போக்குக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளுக்குக் கூட பொருத்தமான மாறுபட்ட இசை வேண்டும் .
இவை எல்லாவற்றையும் சிறப்பாக செய்து இருப்பதோடு , அதற்கும் மேலாக பல விசயங்களை செய்து அசத்தி இருக்கிறது மாநாடு படம்.
ஒட்டி ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையில் வரும் சிம்புவின் முகத் தோற்றம் இந்த கெட்டப்பில் ஆரம்பத்தில் கொஞ்சம் அடடே என்று சொல்லும்படி இருந்தாலும் போகப் போக பழகிப் போகிறது , மற்றபடி நடிப்பு , துடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என்று எல்லாவகையிலும் அசத்தி இருக்கிறார் சிம்பு.
படம் முழுக்க பொருத்தமான் அட்டகாசமான சிறப்பான பின்னணி இசை கொடுத்து படத்தை பல மடங்கு தூக்கி நிறுத்துகிறார் யுவன் சங்கர் ராஜா . படத்தின் பெரும் பலம் இசையே.
ஹீரோவுக்கு சமமான கனமான பாத்திரத்தில் அதே போல கனமான நடிப்பை, தனக்கே உரிய பாணியில் கொடுத்து அசத்துகிறார் எஸ் ஜே சூர்யா . இரண்டாம் பகுதியில் சிம்புவுக்கு இணையான இவரது ராஜ்ஜியம்.
டைம் லூப் படங்களில் எடிட்டரின் பங்கு மிக முக்கியமானது என்பதை முன்னரே சொன்னோம் . அதற்கு ஏற்றபடி அட்டகாசமாகப் பணி புரிந்து இரண்டரை மணி நேரப் படத்தை டைம் லூப் தன்மையையும் மீறி நாலு கால் பாய்ச்சலில் பாய வைக்கிறார் எடிட்டர் பிரவீன் கே எல் . இது அவருக்கு நூறாவது படம். பொருத்தமான படம்
நேரில் அழகாக இருக்கும் கல்யாணி பிரியதர்சன் படத்தில் இன்னும் அழகாக இருக்கிறார் . போட்டோஜெனிக் முகம். சொந்தக் குரலில் அவர் பின்னணி பேசி இருக்கும் விதம் அவரது முக பாவனைகளுக்கு அம்சமாகப் பொருந்துகிறது .
ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவில் படம் ரிச் ஆக இருக்கிறது . விமான லேண்டிங் காட்சிகள் அருமை
அரசியல்வாதிகளாக எஸ் ஏ சந்திரசேகர் , வாகை சந்திரசேகர் , ஒய் ஜி மகேந்திரன் பொருத்தம்
துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியாக மனோஜ் அருமை.
டைம் லூப்பின் ஆழ அகலங்களை அலசுவதொடு அட்டகாசமான பர பர கமர்ஷியல் படமாகவும் வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறது படம் .
தயாரிக்கப்பட்ட விதத்தில் பிரம்மிக்க வைக்கிறது மாநாடு .
மொத்தத்தில் மாநாடு .. ஆட்சி !