கே என் ஆர் மூவீஸ் சார்பில் கே என் ஆர் ராஜா தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்க , ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு நாத் ஒளிப்பதிவில் ரவிவர்மா இசையில் பிரேமின் பின்னணி இசையில் ஆலயமணியின் பாடல்களில் ஜூலியனின் படத் தொகுப்பில் வன மகன் மாவீரன் வீரப்பன் — முத்துலட்சுமி இணையரின் மகள் விஜயலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம் .
தமிழகத்தின் வறண்ட பகுதியில் ஒரு கிராமத்தில் வாழும் தெருக் கூத்துக் கலைஞர் ஒருவர் ( ராதாரவி) . அவரது மூத்த மகனை அவர் சட்டம் படிக்க வைத்து வழக்கறிஞர் ஆக்கியும் , நீதிபதியின் தீர்ப்புகளில் அநீதி வெல்வது கண்டு மனம் வெதும்பி அவன் குடிகாரனாகிறான். இளையமகன் (கே என் ஆர் ராஜா) அப்பாவுக்கு உதவியாக இருக்கிறான் .
ஆபாச நடனக் காட்சிகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் பாரம்பரிய தெருக்கூத்து கலையையும் கண்மூடித்தனமாக அரசாங்கம் சேர்த்து விட, கூத்துக் கலைஞரின் தொழில் நொடித்துப் போகிறது . வறட்சி காரணமாக லாரியில் தண்ணீர் கொண்டு வந்து வயலுக்கு பாய்ச்சும் கொடிய நிலை. இன்னொரு பக்கம் கிராமத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் பலரும் வேலைக்குப் போகாமல் குடிகாரர்கள் ஆகும் நிலை.
இளைய மகனுக்கும் அவனது பள்ளித் தோழிக்கும் காதல் வர, அதைக் கல்யாணம் வரை கொண்டு போக அவர்கள் முயல , பெண்ணின் தாயார் கூத்துக்கார அப்பன் குடிகாரன் உள்ள வீட்டில் பெண் தரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார். காதல் கருகுகிறது .
இந்த மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் பெண் வழக்கறிஞர் ஒருவர் ( விஜயலட்சுமி)
டாஸ்மாக்கில் விற்கப்படும் கலப்பட சாராயத்தால் கூத்துக் கலைஞரின் மூத்த மகன் இறக்கிறான். அவன் மனைவி இளம் விதவை ஆகிறாள்.
கோபம் கொண்ட கூத்துக் கலைஞரின் சொற்படி , இளைய மகனான நாயகன் டாஸ்மாக்கை அடித்து உடைக்கிறான். இதனால் பாதிக்கப்படுகிறார் லோக்கல் அரசியல்வாதி . அவர் கூத்துக் கலைஞர் மற்றும் அவரது மகன் மேல் வன்மம் வைக்கிறார்.
வறட்சி காரணமாக கூத்துக் கலைஞர் வளர்க்கும் மாடு ஒன்று இறந்து போக, மற்ற மாடுகளைக் காப்பாற்ற எண்ணி ஊர்ப் பணக்காரர் ஒருவரிடம் மாடுகளை ஒப்படைக்கும் கூத்துக் கலைஞர், ” தண்ணி தீனி கொடுத்து உங்க விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் . எனக்கு எதுவும் தர வேண்டாம். வறட்சி முடிந்ததும் மாடுகளை அழைத்துக் கொண்டு போகிறேன் ” என்றரீதியில் சொல்லி விட்டுப் போகிறார் .
லோக்கல் அரசியல்வாதியின் பேச்சைக் கேட்கும் அந்தப் பணக்காரர், கூத்துக் கலைஞரின் மாடுகளை அடிமாட்டுக்கு விற்று விடுகிறார் . மனம் உடைந்த கூத்துக் கலைஞர் விஷம் குடித்து மரணம் அடைய , நாயகன் ராஜா , மதுவுக்கு எதிராக போராடிய தியாகி சசிபெருமாள் பாணியில் செயல்படுகிறார் . நடந்தது என்ன என்பதே இந்தப் படம் . .
வன்னிய மக்களின் வாழ்க்கை நிலை படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. கூத்துக் கலைஞர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள், அவர்களது நாடி நரம்பில் கலந்த உடல் மொழிகளுடன் கூடிய நடனம் ஆகியவை அபாரம். ராதாரவி ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் . நாயகன் நாயகிகளின் மண் சார்ந்த தோற்றம், உடல் மொழிகள், கிராமியப் பின்புலம் யாவும் சிறப்பு .
டிராக்டரில் தண்ணீர் கொண்டு வயலுக்குப் பாய்ச்சும் காட்சி விஷய ரீதியாக அதிர வைக்கிறது. மாடுகள் தொடர்பான காட்சிகளும் அப்படியே விஷய ரீதியாக நெகிழ வைக்கிறது
ஆனால் படமாக்கல் ?
பெரும்பாலான நடிகர்கள் கடமைக்கு நடிக்கிறார்கள் . முக்கியமாக விஜயலட்சுமிக்கே நடிப்பு வரவில்லை. சும்மா கையை கையை நீட்டிக் கொண்டு ஓவர் மேக்கப்புடன் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார் . கொஞ்ச நாள் நடிப்புப் பயிற்சி கொடுத்து அவரை நடிக்க வைத்து இருக்கலாம்
வறட்சி என்பதுதான் படத்தின் பிரதானம் . ஆனால் அதே பகுதியில் காட்டப்படும் ஒரு காதல் பாடல் காட்சியில், காதல் கரைபுரண்டு ஓடுவதை விட, ஓர் ஆறு கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா காசுக்கு லாரித் தண்ணீர் வாங்கி வயலுக்குப் பாய்ச்சி கஷ்டப்பட, காதலியோடு கொஞ்சும் நாயகனுக்கு அதே ஆத்தங்கரைக்கு லாரியை வரவைத்து தண்ணீரை இலவசமாக கொண்டு போய் பாய்ச்சி, மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்து இருந்தால் அப்பா செத்திருக்க மாட்டார் என்பது தோணவே இல்லையா? என்ன புள்ள அவன்?
டைரக்ஷன் என்பது விளையாட்டு இல்லை ( கே என் ஆர் ) ராஜா .
மது பிரச்னை, சசி பெருமாள் விஷயம், குடிகாரர்கள் காலில் விழுந்து குடிக்காதீர்கள் என்று கெஞ்சுவது இவற்றை எல்லாம் வைத்து வேறு லெவலில் கதைகள் உருவாகி தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளைத் தட்டும் நிலையில் இந்தப் படத்தில் காட்டப்படுவது எல்லாம் ஆரம்ப நிலை .
எனினும் கூத்துக் கலைக்கு எதிரான அரசின் முட்டாள்தன முடிவு, அதன் விளைவுகள், கிராமங்களில் தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்க வழி காணாத அரசுகள் தண்ணி அடிக்கும் கடைகளைத் திறந்து மக்களின் ரத்தத்தை வருமானம் ஆக்கிக் கொள்ளும் அவலம், இவற்றை பேசும் வகையில் இது கருத்தியல் ரீதியாக உயர்ந்த படம் . அதுவும் வீரப்பனாரின் மகள் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் கம்பீரம்.