சென்ற வாரம் வெளிவந்து வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் மாயா திரைப்படத்தின் வெற்றி விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ‘பொட்டன்ஷியல் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அஷ்வின் சரவணன் , நடிகர்கள் ஆரி , அம்ஜத் கான் , ஒளிப்பதிவாளர் சத்யா , படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆரி பேசும்போது “மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்கத்தான் நான் வெகுநாட்களாக காத்துக்கொண்டிருந்தேன்.
நான் மாயா படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம், ‘ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள்/’ என்று வருத்தமாக கேட்டனர். அவர்களது கேள்விக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லியுள்ளது. படம் தெலுங்குவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி.
நேற்று என்னை ஹோட்டல் ஒன்றில் பார்த்த ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் நான் யார் என்பதை கண்டறிய முடியாமல் என்னை பார்த்து கொண்டே இருந்தார். பின்னர் சுதாரித்த அவர் , “ நீங்கள் மயூரி(தெலுங்கில் மாடா படத்தின் பெயர் மயூரி) படத்தின் நாயகன்தானே” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டு சென்றார்.
ஹாலிவுட் இயக்குநர் எரிக் இங்கிலாந்த் மாயா படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசியுள்ளது எங்களுக்கு மிக பெரிய உற்சாக ஊற்றாக அமைந்துள்ளது “என்றார்.
நடிகர் அம்ஜத் தனது பேச்சில் “படத்தின் இயக்குநர் அஷ்வின் சரவணன் என்னுடைய நெருங்கிய நண்பர். இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நான் இந்த படத்தில் நிச்சயம் எதாவது ஒரு சின்ன வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
நண்பன் என்றபோதும் அஷ்வின் சரவணன் இந்த படத்துக்கு என்னை ஆடிஷன் செய்துதான் எடுத்து கொண்டார். அந்த அளவுக்கு அவர் படம் நன்றாக வரவேண்டும் என்று உழைத்தார்” என்றார்
படத்தின் தெலுங்கு விநியோஸ்தரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான கல்யாண் பேசும் போது ,’
‘ நான் மாயா படத்தை முதல்முறை பார்த்தவுடன் இந்த படத்தை நான்தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிக பெரிய சாதனையாகும்” என்றார்.
படத்தைப் பற்றி இயக்குநர் அஷ்வின் சரவணன் கூறும் போது , ”மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தை எடுக்கும் போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறிதான் முடித்தேன்.
இப்போது எனக்கு இரண்டாம் பாகத்தை இவ்வாறு எடுக்கலாம் அவ்வாறு எடுக்கலாம் என்று புதுப்புதுகதைகளை என்னை சந்திக்கும் பலர் கூறி வருகிறார்கள். அவர்கள் என்னிடம் இப்படி கதைகளை சொல்லும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை வருகிறது. நிச்சயம் நல்ல கதை அமைந்தால் மாயா படத்தின் பாகம் இரண்டை எடுப்பேன்” என்றார் இயக்குநர்.
இறுதியாக பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு
“மாயாவின் வெற்றி எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், மன பலத்தையும் தந்துள்ளது. தொடர்ந்து புது இயக்குனர்கள் ,மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து படம் தயாரிக்கவே விரும்புகிறேன் ” என்றார் .
வாழ்த்துகள் !
பின்குறிப்பு :- நிகழ்ச்சிக்கு நயன்தாரா வரவில்லை. எனவேதான் முடிந்தவரை எல்லா புகைப்படங்களிலும் அவர் இருக்கிறமாதிரி போட்டு இருக்கோம் . எதோ நம்மால முடிஞ்சது!