மகாமுனி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு  நடிப்பில்  மவுன குரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி இருக்கும் படம் ‘மகாமுனி’ . 

கிராமப் புறத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தாய் எடுத்து வளர்த்த காரணத்தால், தாழ்த்தபட்டவனாக அடையாளமாகி, ஆண்டை வீட்டுப் புரட்சிப் பெண் ( மகிமா நம்பியார்) காதலித்த காரணத்தால்  ஆண்டையின் கோபத்துக்கு ஆளாகும் முனி ( ஆர்யா)…. 

நகர்ப்புறத்தில் தன்னை நம்பி வந்த பெண்ணையும் ( இந்துஜா) அன்பில் பிறந்த குழந்தையையும் காப்பாற்ற , லோக்கல் அரசியல்வாதி ஒருவருக்கு ( இளவரசு),  வேண்டாத புள்ளிகளை  தீர்த்துக் கட்ட ஆள் தயார் செய்யும் வேலை பார்த்து அதனால் பலரின் கோபத்துக்கு ஆளாகி, ஒரு நிலையில் முழுசாக வஞ்சிக்கப்படும் மகா ( இன்னொரு ஆர்யா )… 

சிறுவயதில் அபலைத் தாயோடு பயணிக்கும் பொது ரயில் நிலையத்தில் பிரிந்த இந்த இரட்டை சகோதரர்களின் வாழ்வு , எப்படி உறவு அறியப்படாத நிலையிலேயே , அயோக்கியர்களின் அலட்சிய ஆணவ அதிகார வெறியால் , ஒருவரால் இன்னொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது .. அதன் விளைவு என்ன என்பதே இந்த மகாமுனி . 

கதையை விட திரைக்கதை சிறப்பு . திரைக்கதையைவிட  இயக்கம் சிறப்பு .  அப்படி ஓர் ஆழமான அழுத்தமான கனமான நிதானமான படமாக்கல் தந்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்  . 

கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்து மேட்டுக்குடி மக்களுக்குக்கு இல்லாத சித்தாந்தத் தெளிவோடு தாழ்த்தப்பட்ட முனி கதாபாத்திரத்தை படைத்த வகையிலும் தமிழ் உணர்வோடு அதை இணைத்த வகையிலும் கவனிக்க வைக்கிறார் . அந்த பகுதியில் வசனங்களும் அருமை   . 

ஆரம்பத்தில் மெல்ல நகரும் படம் அதற்கான காரண காரியங்களோடு தொடரும்போது ஒரு வாழ்வியலாக விரிகிறது .   

இளவரசு – ஜே பி பழக்கத்தை ஆரம்பத்தில் ஒரு காட்சியில் ஜஸ்ட் லைக் தட் சொல்லி ,கிளைமாக்சில் அதில் இருந்து முனி மகா இருவரின் சிக்கல்களை ஒரு புள்ளியில் இணைக்கும் இடத்தில்,  திரைக்கதை பாராட்டுப் பெறுகிறது 
பூடக முடிவு . 

ஆர்யாவுக்கு அழுத்தமான இரண்டு கதாபாத்திரங்கள் . வித்தியாசப்படுத்தி நடித்து இருக்கிறார் .

 வாழ்தல் குறித்த ஆர்வமும் ஆவேசமும் கொண்ட ஓர் ஏழைப் பெண்ணை சிறப்பாக பிரதிபலித்து இருக்கிறார் இந்துஜா . 

தத்துவ சித்தாந்த தெளிவு கொண்ட பெண்ணாக சற்றே முரட்டு தோற்றம் கொண்ட கெட்டப்பில்  மகிமா சூப்பர்மா . இளவரசு சிறப்பு . 

அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு மகா , முனி இருவரின் வாழ்வியல் சூழலையும் தன் பங்குக்கு வித்தியாசப்படுத்துகிறது . 

சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு , இயக்குனரின் கதை சொல்லும் உத்திக்கு பெரிதாக உதவி இருக்கிறது . 

தமனின் இசையும் பாடல்களும் ஏமாற்றி விட்டன . 

கதை நிகழும் சூழல் வெகு யதார்த்தமாக இருக்கிறது. ஆனால் அதற்கு இரட்டை வேடம் என்பது பொருந்தவில்லை . 

இதை சற்று மாற்றி , இரண்டு சூழல்களையும் அடுத்தடுத்து ஒரே பாத்திரத்துக்குத்  தந்து ,  ரவுடியை விட  அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எப்படி கொடூஎரமாக இருக்கிறர்கள் என்ற கதையை இன்னும்  விரிவாக சொல்லி இருக்கலாம் .

 எனினும் …  சிறப்பான படமாக்கல்,  விபரீத விளைவை முதலில் சொல்லி அப்புறம் எப்படி நடந்தது என்பதை சொல்லும் உத்தி அழுத்தமான இயக்கம் இவற்றால் ஓர் சிறந்த  அனுபவமாக மலர்கிறது மகாமுனி .

3.5/5.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *