மகா மகா @ விமர்சனம்

maha maha 2

சக்தி ஸ்கிரீன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து மதிவாணன் சக்திவேல் இயக்கி இருக்கும் படம் மகா மகா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காற்றாலைப் பொறியாளரான விஜய்,  ஆஸ்திரேலியாவில்  டெரால்கா என்ற ஊரில் வேலை கிடைத்து அங்கே போகிறான் . சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியவைச் சேர்ந்த புரா புரா என்ற குடும்பத்தை சேர்ந்த  நபர்களால் உருவாக்கப்பட்ட ஊர் அது . புரா என்ற வார்த்தைக்கு ‘பெரிய’ என்று பொருள் . எனவே  டெரால்காவுக்கு பெரிய பெரிய என்ற பொருளில் மகா மகா என்று பெயர் வைக்கிறான் .

அங்கே அவன் தங்கி இருக்கும்  பகுதியில் எமிலி (ஆஸ்திரேலியப் பெண் மெலிசா) என்ற பெண்ணை சந்திக்கிறான் . இருவருக்கும் விரல் கூட தொடாத நட்பும் பின்னர் காதலும் ஏற்படுகிறது . இதற்கிடையே ஆஸ்திரேலியா வாழ் இந்தியப் பெண்ணான அனுஸ்ரீ (இந்திரா)யின் நட்பும் விஜய்க்கு கிடைக்கிறது .

maha maha 3

ஒரு நிலையில் அனுஸ்ரீக்கு எமிலியை  முன்னரே  தெரியும் என்பது தெரிய வருகிறது . ஆனால் அவளை கொஞ்ச நாட்களாக காணவில்லை என்கிறாள் அனுஸ்ரீ . “அவள் எனது ஏரியாவில்தான் இருக்கிறாள் . நான் அவளை காதலிக்கிறேன் ” என்று விஜய் சொல்ல , “அவளுக்கு முன்பே ஒரு காதலன் உண்டு ” என்று சொல்லி விஜய்க்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்  அனுஸ்ரீ.

அடுத்த நாள் விஜய்யின் குடியிருப்பில் உள்ள தோட்டத்தில் இருந்து மெலிசாவின் பிணம் தோண்டி எடுக்கப்படுகிறது . போலீஸ் விஜய்யை கைது செய்கிறது . ஆனால் மெலிசாவின் பிண ஆய்வு அறிக்கையோ,  விஜய் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பே மெலிசா கொல்லப்பட்டு விட்டதா க கூறுகிறது .

 எனில் மெலிசா விஜய்யோடு பழகுவது எப்படி ? அவள் உண்மையாகவே கொல்லப்பட்டாள் எனில் அவளை யார்,  எதற்கு கொன்றார்கள்?
— என்பதே இந்த மகா மகா !

maha maha 4

ஆஸ்திரேலியா  வாழ் இலங்கைத் தமிழரான  மதிவாணன் சக்திவேல் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆஸ்திரேலியாவிலேயே எடுத்து இருக்கிறார். எனவே  காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி  (கதாநாயகிகள் உட்பட !) உபயம் பிரேமின் ஒளிப்பதிவு .

வசனம் … குறிப்பாக நகைச்சுவை பெயரில் வரும் வசனங்கள்தான்  சோதிக்கிறது .

ஆனாலும்  அதே  வசனத்தின் மூலம் , ஆஸ்திரேலியா வாழ் பழங்குடி மக்களின் மரபணுவில், மதுரை  மாவட்ட மக்களின் மரபணு ஐம்பத்தொரு சதவீதம்  ஒன்றாக இருப்பது …. தமிழர்களைப் போலவே அவர்களுக்கும் தீய சக்திகளிடம் இருந்து தப்பிக்க நெற்றியில விபூதி  பூசும் பழக்கம் இருப்பது…. அவர்கள் போடும் கோடுகள் மற்றும் புள்ளிகளை மையமாகக் கொண்ட ஓவியங்கள் நாம் போடும் கோலங்கள் போலவே இருப்பது …இவற்றின் மூலம்  தமிழர்கள்தான் ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளாகப் போனவர்கள் என்பதை விளக்கும்  விதத்தில் மரியாதைக்குரிய கைதட்டல் பெறுகிறார் மதிவாணன்  சக்திவேல் .

அதே போல இஞ்சி வேர் என்ற  வார்த்தையில் இருந்துதான் ஜிஞ்சர் என்ற ஆங்கில வார்த்தை உருவானது என்பதை விளக்கும் விதமும் அருமை .

maha-maha 1

பாவலர் சிவா இசையில் அகரமொடு ழகரம் சேர்ந்தால்  மொழி அழகு என்ற தேன்மொழி தாசின் பாடல் அருமை .

மதிவாணன் இயல்பாக நடிக்கிறார். மெலிசா வெள்ளைகார அழகுடன் ஜொலிக்க , இந்திய அழகுடன் ஜொலிக்கும் இந்திரா சற்று நடிக்கவும் செய்கிறார்.

இறுதியில் வரும் கதாபாத்திரங்கள் படத்தில் என்ன செய்யப் போகிறது என்பது இயல்பாகவே புரிகிறது .

ஆனால் அதில் இருந்து ஒரு நீட்சி எடுத்து இரண்டாம் பாகத்துக்கு அறிவிப்பு கொடுத்து முடிக்கிறார்கள் படத்தை .

மகா  மகா …. ஆகா ஓகோ இல்லாவிட்டாலும் அகா ஜூகாவும் இல்லை .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →