கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, கருணாகரன், விருத்திகா, அங்கனா ஆகியோர் நடிப்பில் டான் சாண்டி இயக்கி இருக்கும் படம் மகாபலிபுரம் . ஒரு ரவுண்டு போய் வரும்படி இருக்கிறதா? பார்க்கலாம் .
அம்மா இறந்த நிலையில் சின்ன வயசிலேயே அனாதையான காஞ்சிபுரத்து சிறுவன் ஒருவன் மகாபலிபுரத்துக்கு போய், துரை என்ற ஒரு கிரிமினல் லோக்கல் அரசியல்வாதியின் (ஜெயக்குமார்) அரவணைப்பில் வளர்ந்து இளைஞன் ஆகிறான். துரையால் அவ்வப்போது கொல்லப்படும் நபர்களை, யார் என்ன என்று கூட பார்க்காமல், கொண்டு போய் புதைப்பதும் அவன் வேலைதான் .பாஞ்சா என்ற பெயர் கொண்ட அந்த இளைஞனுக்கு (விநாயக்) , மகாபலிபுரத்திலேயே பிறந்து வளர்ந்த மகாலட்சுமி மீது காதல் (விருத்திகா).
இந்தக் காதலுக்கு முன்பே நண்பர்களில் ஒருவனான சதீஷுக்கும் (வெற்றி) சங்கீதா என்ற பெண்ணுக்கும் (அங்கனா) இருந்த காதலை , சதீஷின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நண்பர்கள் ஒத்தவாடை (கருணாகரன்) மற்றும் குப்பன் (ரமேஷ்) ஆகியோருடன் சேர்ந்து சேர்த்து வைத்து அதனால் சதீஷின் அப்பாவிடம் அடி உதை எல்லாம் வாங்கியவன் பாஞ்சா . ஒரு நிலையில் பான்ஜாவை புரிந்து கொண்டு மகாலட்சுமியும் பாஞ்சாவை காதலிக்கிறாள் .
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி விட்டு இணையதளத்தில் நீலப் படம் பார்க்க, ஒரு படத்தில் இருப்பது சதீஷின் காதல் மனைவியான சங்கீதா ! சங்கீதாவை தேடி வீட்டுக்குப் போனால் அவள் தூக்கில் தொங்கி இருக்க, அந்த அதிர்ச்சியில் சதீஷும் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் .
இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார் என்று பாஞ்சா தேடும்போது அதிர்ச்சி மேல அதிர்ச்சி!
மகாபலிபுரம் வரும் வெளிநாட்டு கும்பல் தரும் பணத்துக்காக துரையே இந்த வேலை செய்வது தெரிகிறது. ஒரு நிலையில் சில வெளிநாட்டவரின் ஆசைப்படி, பாஞ்சா காதலிக்கும் மகாலட்சுமியையும் கடத்திப் போய் மயக்க மருந்து கொடுத்து நீலப் படம் எடுக்க திட்டமிடுகிறான் துரை .
அவன் தருவதாக சொன்ன கவுன்சிலர் சீட்டுக்காக சக நண்பன் ஒத்தவாடையும் இதற்கு துணை போக , மகாலட்சுமி கடத்தப்படுகிறாள் . ஒரு நிலையில் அவள் சாக்கு மூட்டையாக பாஞ்சாவிடமே கொடுக்கப்பட , அவன் அதை புதைக்கக் கொண்டு போக , அடுத்து என்ன நடந்தது என்பதே இந்த மகாபலிபுரம் .
சுற்றுலா என்ற பெயரில் நடக்கும் அந்நியர்களின் ஊடுருவலும் சுயநலத்துக்காக எதுவும் செய்யத் தயங்காத மனித மிருகங்களின் குணமும், ஒரு கலாச்சாரம் மிகுந்த மண்ணின் ஒழுக்கமான பெண்களை எப்படி சீரழிக்கிறது என்பதை காட்சிகளால் பதற வைக்கும்படி சொல்லும் விதம்…
பெண்களை மயக்கி நீலப் படம் எடுப்பதும் அதை பார்க்க துடிப்பதும் எப்படிப்பட்ட கீழ்த்தரமான குணம் என்பதை நடிகர் சத்யராஜின் குரல் வழியே சாட்டை அடியாக சொன்ன விதம்…
இவற்றின் மூலம் கவனம் கவர்கிறார் இயக்குனர் டான் சாண்டி. ( ” பெண்களின் வெற்று உடம்பை பார்க்கத் துடிக்க , அவர்கள் என்ன வேற்றுக் கிரகவாசிகளா?”)
கடைசிக் காட்சிகள் மனம் கனக்க வைக்கின்றன . அதுவும் படத்தை முடிக்கும் ( property oriented) டைரக்ஷன் உத்தி உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் பலரும் பின்பற்றும் பாணி . (தமிழில் அந்த வகையில் இப்போது நினைவுக்கு வரும் படம் மணிரத்னத்தின் அஞ்சலி!).
படம் ஆரம்பித்ததில் இருந்து முதல் பாதி வரை வெகு சாதரணமான விவரணைகள் மற்றும் சம்பவங்களோடு மெதுவாக நகரும் திரைக்கதை, இடைவேளை சமயத்தில் சங்கீதாவின் நீலப் படம் வரும் காட்சியில் இருந்து சிலிர்த்து எழுகிறது. அதிலிருந்து கடைசிவரை, இது சினிமா என்பதையே மறந்து, பதைக்க வைக்கும் நிஜ சம்பவங்களின் தொகுப்பை பார்க்கும் உணர்வையே படம் தருகிறது .சபாஷ் டான் சாண்டி.
நடிக நடிகையர் எல்லோருமே கேரக்டருக்கு பொருத்தமாக நடித்து உள்ளார்கள் . கே இசையில் பாடல்கள் பரவாயில்லை ராகம் . இன்னும் நன்றாக செய்து இருக்கலாம் . சந்திரன் பட்டுசாமியின் ஒளிப்பதிவும் கிம் ஆமின் படத்தொகுப்பும் சிறப்பு .
இந்தக் கதையை ஊட்டி , கொடைக்கானல் , ஏற்காடு, கோவா, சிம்லா என்று இந்தியாவில் வெளிநாட்டினர் புழங்கும் எல்லா ஊர்களிலும் நடப்பதாக எடுக்கலாமே. இதை மகாபலிபுரத்தில் எடுப்பதற்கு என்ன அவசியம் , அதுவும் மகாபலிபுரம் என்று படத்துக்கு பெயரே வைத்திருக்கும் நிலையில் ?
முதல் பாதியில் நண்பர்கள் எல்லோரும் ரூமிலும் டீக்கடை வாசலிலும் வரிசையாக உட்கார்ந்து பேசிக் கொண்டே இருப்பதைக் காட்டுவதற்கு பதில் மகாபலிபுரத்தின் ஆன்மா , குணாதிசயம், அதன் மற்ற பிரச்னைகள் , அந்த நகரின் சிக்கல்கள் முதலியவற்றை வெளிக்கொணர்ந்து இருந்தால் இந்தப் படம் தமிழகத்தையே அதிர வைத்து இருக்கும் .
பெண்களை மயக்கி நீலப் படம் எடுத்து பிணம் தின்று பணம் ஈட்டும் அற்பர்களை புரட்டி புரட்டி எடுத்து இருப்பதோடு நன்றியின் பெயரால் கூட அயோக்கியர்களுக்கு துணை போனால் என்ன ஆகும் என்றும் சொல்லி இருப்பதன் மூலம் மகாபலிபுரம் மதிப்புக்குரிய படமாகிறது .
மகாபலிபுரம் .. மகத்துவபுரம்!
Comments are closed.