ஹார்வெஸ்ட் எண்டர்டெயினர்ஸ் மற்
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்.
இசை அமைபாளர்கள் கே. ஆர் , சரத் , ரோஹித், நடிக்கும் ஹாஷிம் ஜெயின் , ஒளிப்பதிவு செய்யும் ஃபிர்னாஸ் ஹுசைன், மார்ட்டின், அப்பு , உதவி இயக்குனர்கள் நந்த கிஷோர் மற்றும் நமீதா சப் கோட்டா, பாடகர் பரக் சாப்ரா உள்ளிட்டோர் சினிமா சம்மந்தப்பட்ட விஸ்காம் மற்றும் மீடியா படிப்பு படிப்பவர்கள்
இயக்குனரைத் தொடர்ந்து பாடலாசிரியர் பிரேம் சங்கர், நடனம் ஆடி இருக்கும் ஆர்த்தி பட்நாகர் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் . மேலும் இரண்டு நடனக்காரர்களான ராஜ் லட்சுமி, அவ்லின் இருவரும் வேறு படிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் .
ஆடை வடிவமைப்பு செய்திருப்பது, பத்தாம் வகுப்பு மாணவியான வருணா ஸ்ரீதர் . இவர் ஏ.பி ஸ்ரீதரின் மகள்.
இப்படி கல்லூரிப் படிப்பையே முடிக்காத மாணவர்கள் சேர்ந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தின் கதை என்ன ?
வீட்டுக்குள் பத்திரமாக மறைத்து வைத்து எடுத்து செலவு செய்யும் பணத்தை, ரோட்டில் போட்டு வைக்கும் விந்தையை செய்தது ஏ டி எம் மெஷின்கள். அதே நேரம் அந்த பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றமும் உருவானது.
ஏ டி எம் மெஷினை உடைத்து கொள்ளையடிப்பது ரொம்ப சிரமமான விசயமாக இருக்க, பணத்தை எடுத்துக் கொண்டு வருபவரை, அங்கேயே பிடித்துக் கொள்ளையடிப்பதும் , அல்லது அவரை அடித்து உதைத்து மேலும் பணம் எடுக்கச் செய்வதும் அதிகமானது . விளைவாக உயிராபத்துகள் அதிகரித்தன .
பெரும்பாலும் ஏ டி எம் பயன்படுத்துவது நடுத்தர மக்கள் , மாதச் சம்பளக்காரர்கள் என்ற நிலையில் அது பலரை பொருளாதாரச் சிக்கலில் ஆழ்த்தும் விசயமாகவும் போனது .
இதுதான் படத்தின் கதைக் களம் .
ஓர் இளம் காதல் ஜோடி (நவீன் சஞ்சய் — சுஹாசினி குமரன்) . காதலியின் பணக்கார அப்பன் , காதலைப் பிரிக்கத் தீவிரமாக முயல , குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது காதல் ஜோடி. காதலனுக்கு உதவுகிறான் அவனது நண்பன் . (குமரன் தங்கராஜன் ) காதலனைக் கொல்ல பெண்ணின் தந்தை ஆள் அமர்த்த, காதல் ஜோடியின் ரகிசய திருமண ஏற்பாடுகள் தீவிரமாகிறது .
அம்மா வெளிநாட்டில் இருக்க சென்னையில் தங்கி மாடலிங் செய்யும் இளம்பெண் (ஜெய் குஹேனி ).
நாளை விடிகாலை நடக்க இருக்கும் ரகசிய திருமணத்துக்காக பணம் எடுக்க நண்பர்கள் இருவரும் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் உள்ள ஒரு ஏ டி எம் மையத்துக்கு பின்னிரவில் வருகிறார்கள் . செலவுக்காக பணம் எடுக்க மாடலிங் யுவதியும், அதே நேரத்தில் வருகிறார் .
அந்த ஏடி எம்மின் காவலாளிக்கும் (ரோபோ ஷங்கர் ) அவனது குடிகார நண்பன் ஒருவனுக்கும் (வசனகர்த்தா முருகானந்தம் ),ஏற்பட்ட ஒரு போதைச் சண்டையில் கோபப்பட்ட அந்த நண்பன், காவலாளியை ஏ டி எம் அறையை ஒட்டிய பின்புறத் தனி அறையில் வைத்துப் பூட்டி விட்டுப் போய் விட, அந்தக் காவலாளியால் ஏ டி எம் மிஷின் அறைக்குள் வர முடியாத நிலை .
காதலன் , நண்பன் . மாடலிங் பெண் மூவரும் பணம் எடுக்கும் நேரம் அங்கு பெரிய இரும்புக் கடப்பாறையுடன் வரும் ஒருவன், அங்கு இருக்கும் இன்னொரு காவலாளியை கொடூரமாகக் கொலை செய்கிறான் . அறைக்குள் பூட்டப்பட்ட காவலாளியால் வெளியே வர முடியாததால், சக காவலாளியைக் காப்பாற்ற முடியவில்லை.
பணம் எடுத்த இந்த மூவரும் வெளியே வரும்போது அவர்களை அடித்துக் கொன்று பணத்தை பிடுங்கக் காத்திருக்கிறான் கொலையாளி . (உள்ளே வந்தால் கேமராவில் முகம் பதிந்து விடும் )
அடுத்து அங்கு வரும் போலீஸ்காரரையும் அந்தக் கொலையாளி கொல்கிறான் .
காதலனும் நண்பனும் பணத்தோடு வெளியே போகாவிட்டால், ரகசியக் கல்யாணத் திட்டப்படி நள்ளிரவில் சாலையில் காத்திருக்கும் காதலிக்கு ஆபத்து . ஏ டி எம் அறையை விட்டு வெளியே வந்தால் காதலன் , நண்பன் , மாடல்லிங் யுவதி மூவருக்கும் ஆபத்து .
இந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்பதே இந்த மய்யம்
ஆள் அரவம் அற்ற ஒரு பகுதி . அங்கே ஒரு ஏ டி எம் . அதை ஒட்டிய ஓர் சின்ன அறை. இந்த இடத்திலேயே பெரும்பாலும் நகரும் காம்பாக்ட் படம் ( காதல் , பிளாஷ்பேக் , உள்ளிட்ட கொஞ்ச காட்சிகளுக்கு மட்டும் வேறு இடம் ).
படத்தின் வண்ணங்கள் மிக அருமை . அதனால் ஒளிப்பதிவும் சஜொலிக்கிறது .
கலை இயக்கம் ரம்மியமாக இருக்கிறது . அதற்கேற்ப உடை வடிவமைப்பும் .
சட்டென்று வரும் குடிகார நண்பனின் காதல் தோல்வி கதை கவனிக்க வைக்கிறது . அந்த கேரக்டரில் வரும் முருகானந்தம் ”பரிவட்டம் உனக்குத்தான்” என்று வெள்ளந்தியாக சொல்லும் இடங்களில் கவர்கிறார்
கொலைகாரனாக நடித்திருக்கும் ஹாசிம்சைன் முக பாவங்களில் ஈர்க்கிறார் .
மூக்கை விடைத்துக் கொண்டு கேப் விடாமல் ரைமிங்காக பேசினால் அது காமெடி ஆகிவிடாது. ஸ்டேஜ் ஷோவில் பேசுவது சினிமாவில் மக்கள் சிரிக்கும்படி காமெடி பண்ணுவது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசர அவசியத்தில் ரோபோ ஷங்கர் இருக்கிறார்.
ஏ டி எம் கொள்ளை கொலைகள் என்ற விசயத்தில் இருக்கும் அழுத்தம் கதையில் கம்மி.. கதையில் உள்ள சீரியஸ்னஸ் திரைக்கதையில் இல்லை . கதாபாத்திரங்கள் சூழலுக்கு பொருந்தாத மன நிலையில் பேசுவதால் திக் திகில் திகீர் உணர்வு குறைகிறது .
கடைசியில் சொல்லப்படும் பிளாஷ்பேக் காதல் கதையை அதற்கான அளவு நேரத்தை ஒதுக்கி விளக்கமாக அழுத்தமாக எமோஷனலாக சொல்லி இருக்கலாம்
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் எல்லாம் ஏ டிம் எம் வைத்து விடுகின்றனர். அதற்கு பாதுகாப்பும் இல்லை . சரியான பாதுகாவலர்களும் இல்லை . பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை .
பொதுவாக ஏ டி எம் மிஷினை உடைக்க முடியாது . அதனால பணம் எடுப்பவர்களை மிரட்டி பணம் பிடுங்குவதுதான் அதிகம் நடக்கிறது.
வெளிநாடுகளில் ஒரு ஏ டி எம் மெஷினில் தவறாக ஏதாவது நடக்கும்போதே உடனே போலீசுக்கு தெரிந்து விடும். உடனே வந்து விடுவார்கள். ஆபத்து நடக்காது . ஆனால் நம் நாட்டில் ஏதாவது ஆபத்து நடந்தால் அப்புறம்தான் ஏ டி எம் கேமராப் பதிவை போட்டுப் பார்த்து குற்றவாளியை தேடுவார்கள் . எனவே ஆபத்தில் உள்ளவரை உடனடியாக காப்பாற்ற வழி இல்லை
ஏ டி எம்மில் பின் நம்பரை தலைகீழாக மாற்றிப் போட்டால் பணம் பாதியில் நின்று விடும் என்பது எல்லாம் நம்ம ஊரில் இன்னும் சாத்தியம் இல்லை .
–இது போன்ற விசயங்களை படத்தில் சொல்வது பாராட்டுகுரியது . ஆனால் அதை காட்சிகளுக்குள் பிணைத்து விஷுவலாக சொல்லாமல் வசனத்தில் மட்டும் .. அதுவும் போகிற போக்கில் சொல்கிறார்கள் .
இப்படி சில குறைகள் இருந்தாலும் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத மாணவர்களின் இந்த முயற்சியை வாழ்த்தலாம் .
ஏ டி எம் கொலை கொள்ளைகளை மையமாக வைத்து சமூக நோக்கில் ஒரு படம் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது .