மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனம் மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்தது .
அடுத்து தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில் தயாரித்தது. இது வணிக வெற்றியையும் பல விருதுகளையும் பெற, . இரண்டாவது படமாக சி.குமரேசன் என்ற மலேசிய தமிழ் நடிகர் நாயகனாக நடித்து இயக்க மைந்தன் என்ற படத்தை தயாரித்துள்ளது. இங்கே இப்போது தமிழில் விமல் கதாநாயகனாக நடிக்க ‘நல்லா வருவடா’ என்ற படத்தை தயாரித்து வரும் ‘புன்னகைபூ ‘கீதா (உங்களுக்கு வயசாகாதா கீதா ?) இந்தப் படத்தின் கதாநாயகி (நல்லா வருவடா படத்திலும் நீங்கதானே நாயகி , நாயகி ?) இன்னொரு கதாநாயகி ஷைலா நாயர் .
படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எஸ்.பி.முத்துராமன் இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்கள் விமல், ஸ்ரீகாந்த், நட்ராஜ் என்று தலைமுறை இடைவெளிகளை தாண்டி நிற்கும் பிரமுகர்களை பார்க்க முடிந்தது.
மைந்தன் படத்தின் இயக்குநரும் கதாநாயக நடிகருமான சி.குமரேசன் பேசும்போது “நான் 80களில் பார்த்து ரசித்த ரஜினி, கமல் படங்களை இயக்கிய திரையுலக பிதாமகன் எஸ்.பி. முத்துராமன் அவர்கள் நான் இயக்கிய படத்தின் விழாவில் கலந்து கொண்டது பெருமையாக இருக்கிறது.”என்ற பேச்சில் ஒரு உண்மை இருந்தது .
படத்தை தயாரித்துள்ள ஆஸ்ட்ரோ நிறுவன நிர்வாகத் துணைத்தலைவர் ராஜாமணி பேசும் போது “நாங்கள் மலேசியாவில் சேனல், வானொலி, அச்சு ஊடகம் என்று மலாய், சீன, தமிழ் மொழிகளில் முன்னணி நிறுவனமாக இருக்கிறோம். இப்போது படங்கள் தயாரிக்கிறோம். ‘ஜர்னி’ என்று 4 கோடி செலவில் ஒரு சீனப் படம் எடுத்தோம். அது மலேசியாவிலேயே25 கோடி வசூல் செய்தது.
தமிழில் ‘அப்பளம்’ முதல்படம்.இரண்டாவது படம் ‘மைந்தன்’ . படம் தயாரிப்பது லாபநிச்சயம் இல்லாத தொழில்தான். இருந்தாலும் எதிலும் முறை, திட்டமிடுதல், விளம்பரம் ஆகியவற்றை சரியாகச் செய்தால் வெற்றி பெற முடியும். இதை ஊடகத்துறையில் நாங்கள் செய்து காட்டியுள்ளோம். இப்படத்தில் 100% மலேசிய தமிழர்கள்,மலேசிய இந்தியர்கள்தான் பங்கு பெற்று இருக்கிறார்கள். நாங்கள் தமிழ்த்திரையுலகுடன் இணைந்து படங்கள் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறோம்.’மைந்தன்’ படம் இதற்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். தமிழ்த் திரையுலகம் ஒரு மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. இச்சூழலில் இருவரும் இணைந்தால் வெற்றி பெற முடியும்.”என்றார்.
இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் போது “முதல் இரண்டு படங்கள் சரியாகப் போகாததால் சிரமப்பட்டேன். திக்குத் தெரியாமல் திசைமாறி தவித்துக் கொண்டிருந்த போது. எனக்கு சரியான திசை காட்டியவர் ராஜாமணி அவர்கள். அவர் அறிமுகப் படுத்தியவர்தான் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவர் கொடுத்த வாய்ப்புதான் ‘நாடோடிகள்’ இப்படி என் வாழ்க்கையையே திசைமாற்றியவர் ராஜாமணி.கலைதான் உலகை இணைக்கும். அவர்களது படம் நிச்சயம் உலகில் சிதறிக் கிடக்கும் தமிழர்களை இணைக்கும். உலகத் தமிழர்களிடம் போய்ச் சேரும். “என்றார்.
நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது “நாம் நம் படங்களின் ஆடியோவை மலேசியாவில் வெளியிடுவோம். நம் படங்களை அங்கு ப்ரமோட் செய்வோம். அவர்கள் இங்கு வந்திருப்பது வித்தியாசம். நம்பட வசூலில் ஒவர்சீஸ் என்றால் முதலில் மலேசியாவிலிருந்துதான் தொடங்கும். நம்பிக்கை, உழைப்பு. சின்சியாரிட்டி இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். இவர்களும் ஜெயிப்பார்கள்.” என்றது வெல்செட் !
பாடல்களை வெளியிட்டு இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசும் போது..”இங்கே படக்கதாநாயகன் பேசும் போது ரஜினி,கமல் படம் பார்த்து வளர்ந்தேன் என்றார். என்னை பிதாமகன் என்றார். நான் இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் அது என் தனிமனித சாதனை அல்ல. எனக்குப் பின்னால் இருந்த குழுவின் சாதனை. போன தலைமுறை நடிகர்களையும் இயக்கினேன். இந்தத் தலைமுறை மட்டுமல்ல அடுத்த தலைமுறையிலும் இயக்குவேன். நான் எதனால் சினிமாவில் நிலைக்க முடிந்தது என்றால்,என் வெற்றியின் ரகசியம் வேறொன்றுமில்லை. நான் எல்லாரையும் அனுசரித்துப் போவதுதான்.” என்றவர் அடுத்து பேசியது படு சுவாரஸ்யம்
”இங்கே அமர்ந்து இருக்கும் நடிகர் விமலுக்கு கல்யாணம் செய்து வைத்தது நான்தான். அவர் பிரியதர்ஷினி என்கிற பெண்ணைக் காதலித்தார். இரண்டு பேர் வீட்டுக்கும் இது தெரியாது. ஆனால் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டார் ரகசியமாக.
நான் சவீதா கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போன போது அங்கு மாணவிகள் கிசுகிசுத்தார்கள். இது பற்றிப் பேசிய போது வெளியே தெரியக் கூடாது என்றார்கள். அப்படியா விஷயம் என்று இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டு வாருங்கள் என்றேன். கொண்டு வந்தார்கள்.அதே மேடையில் எல்லார் மத்தியிலும் விமலுக்கு திருமணம் நடத்தி வைத்தேன். எல்லாருக்கும் தெரிய வைத்தேன். அப்படி திருட்டுக் கல்யாணம் செய்த விமலுக்கு நான்தான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைத்தேன். இப்படி திருட்டு கல்யாண ஜோடி யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் பகிரங்கமாக திருமணம் நடத்தி வைக்கத் தயார்.
மலேசியாவில் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பல துறைகளில் வெற்றிகளைக் குவித்த இவர்கள் இதிலும் வெற்றி பெற்றுச் சாதனை படைப்பார்கள். “என்று கூறி வாழ்த்தினார்.
படத்தின் பாடல்கள் அருமையான லோக்கேஷன்களில் ஏக கில்மாவாக இருந்தது . இயக்குனரின் படமாக்கல் அருமையாக இருந்தது மனிதன் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் maindhan என்று சாதாரணமாக எழுதாமல் MAINdhan என்று டைட்டிலில் வித்தியாசப்படுத்தி எழுதி இருந்தது அருமை .
நீங்க ‘மெயின் தான்’ !