
மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனம் மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்த நிலையில் அடுத்து தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில் தயாரித்தது. அது வணிக வெற்றியையும் உள்ளூர் விருதுகளையும் பெற, . இரண்டாவது படமாக ஆஸ்ட்ரோ ஷா தயாரிக்க, சி.குமரேசன் என்ற மலேசியத் தமிழ் நடிகர் நாயகனாக நடித்து இயக்க ‘புன்னகைப் பூ ‘கீதா ஷைலா நாயர் இருவரும் கதாநாயகியாக நடிக்க , வந்திருக்கும் படம் மைந்தன்
மலேசியாவில் அநாதை சிறுவர் சிறுமிகளுக்கான இல்லம் நடத்தும் ஒருவன் அந்தக் குழந்தைகளை ஒரு வயதுக்கு பிறகு விற்று பணம் சம்பாதிக்கிறான். விஷயம் தெரிந்து அங்கிருந்து தப்பித்து வரும் ஒரு சிறுவன் நாயகனிடம் (குமரேசன்) தஞ்சம் அடைகிறான் . சிறுவனை தேடி வரும் அடியாட்கள் குழு , நாயகன் மிகவும் நேசிக்கும் கார் ஒன்றை அழித்து விடுவதாக மிரட்ட, பையனை அவர்களிடம் விட்டு விடுகிறான் நாயகன் . ஆனாலும் அவனது மனம் உறுத்துகிறது .
இந்நிலையில் நாயகனுக்கு ஓர் இளம்பெண்ணுடன் (புன்னகைப் பூ கீதா) எதிர்பாரத மோதலும் பின்னர் நட்பும் ஏற்படுகிறது . அந்தப் பெண் அவனை காதலிக்கிறாள்.
நாயகன் அதை கண்டு கொள்ளாமல் இருக்க,” உனக்கு காதல் என்றால் என்ன என்று தெரியுமா/” என்று அந்தப் பெண் கேட்க , நாயகனின் பழைய காதல் பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது.
கொஞ்ச நாள் முன்பு வரை கார் ரேசராக இருந்த அவன், ஒரு பெண்ணின் (ஷைலா நாயர்) அழகில் மயங்கி அவளை காதலிக்கிறான் . நாயகனின் தீவிர இறைஞ்சலை அடுத்து ஒரு நிலையில் அவளும் அவன் காதலை ஏற்கிறாள் . ஆனால் ”இனி ஆபத்தான் ரேஸ் பழக்கத்தை கை விட வேண்டும்” என்று அவள் சொல்கிறாள். அவனும் சம்மதிக்கிறான் .
ஆனால் தனது நண்பனுக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக, காதலிக்கு தெரியாமல் ஒரு ரேசில் நாயகன் கலந்து கொள்ள, அதை அறிந்து காதலி அங்கே வர , அப்போது ஏற்படும் ஒரு சம்பவத்தில் காதலி இறக்கிறாள் .
இப்போது அவன் தனி மரமாய் வாழும் சூழலில்தான் சிறுவனின் வருகை புதிய காதல் எல்லாம் !
ஒரு நிலையில் நாயகியும் அவனை இப்போது காதலிக்கும் பெண்ணும் சேர்ந்து சிறுவனை மீட்கக் கிளம்பி , குழந்தை கடத்தல் கொடியவனை கண்டு பிடித்து குழந்தைகளை மீட்டு …
இதுதான் மைந்தன் .

மலேசியத் தமிழ் நடிக நடிகையர் நடிக்க , எல்லோரும் மலேசியத் தமிழில் பேசுவதை கேட்க அந்த மொழிப் பயன்பாடு அவ்வளவு இனிமையாக இருக்கிறது. குமரேசன் எழுத்து இயக்கம் நடிப்பு மூன்றையும் கமர்ஷியலாக செய்து இருக்கிறார் .
ஹீரோவுக்கும் சிறுவனுக்குமான டூயட் பாட்டு (காதல் பாட்டு அல்ல !) அருமை.
முடிந்தவரை வண்ணமயமான பின்னணியில் படம் எடுத்துள்ளனர் . காடு சம்மந்தப்பட்ட காட்சிகள் அருமை . பாடல் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு உள்ளன . குமரேசனின் ஷாட் ஸ்டைல் சராசரிக்கும் மேல் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
புன்னகைப் பூ கீதா கவர்ச்சியாகவும் காமெடியாகவும் நடித்துள்ளார்.
மலேசியாவில் மலேசியத் தமிழில் படம் எடுத்து தமிழ் நாட்டிலும் வெளியிடும் இந்த மலேசியத் தமிழர்களை பாராட்டுவோம் . அடுத்த படம் இன்னும் நல்லா எடுக்கணும். ஒகே வா கண்ணுகளா?
மைந்தன் … வருக வணக்கம்