டி ஜி எம் அசோசியேட் வழங்க வசந்தகுமார் தயாரிப்பில் பிரஜின் , கவுதம் கிருஷ்ணா, தன்ஷிகா, வருணா ஷெட்டி ஆகியோர் நடிப்பில், ஒருதலை ராகம் படத்தின் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் ஷங்கர் இயக்கி இருக்கும் படம் மணல் நகரம் .
மனதுக்கு பிடிக்குமா இந்த மணல் நகரத்தை ? பார்க்கலாம்.
உடம்பு சரியில்லாத அக்காவின் மருத்துவ செலவுக்காக பணம் சம்பாதிக்க சென்னையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு போகும் ஆனந்த் (கவுதம் கிருஷ்ணா), அங்கு தனது நண்பனான மன்சூர் (பிரஜின் ) தங்கி இருக்கும் அறையில் தங்குகிறான் . அறையில் ஜேம்ஸ் என்பவன் (ஜெய்ஸ்) உட்பட சில நண்பர்கள் (அருணாச்சலம், ராம்கி).
குடும்பத்தை தாங்கிய தந்தையை இழந்து , ஒரு தவறான பெண்ணை நம்பி , கடனாக வாங்கிக் கொடுத்த ஐம்பது லட்ச ரூபாயை இழந்து , பணம் சம்பாதிப்பதற்காக துபாய் வந்திருக்கும் பூர்ணிமாவுக்கும் (தேஜஸ்வினி தன்ஷிகா) மன்சூருக்கும் காதல் .
பூர்ணிமாவின் முதலாளி மோகன்ராஜ் (வீ கே ) அவளை பாலியல் ரீதியாக அடையத் துடிக்கிறான் . சம்மதிக்காத அவளை வேலையின் பெயரால் சித்திரவதை செய்கிறான் . அவனிடம் வாங்கி ஊருக்கு அனுப்பிய முன்பணம் காரணமாக, அவளால் வேறு வேலைக்கும் போக முடியாத நிலை.
மாபெரும் கோடீஸ்வரரான இப்ராஹீம் ரப்பானியின் (ஒருதலை ராகம் ஷங்கர்) மகள் நிஷாவுக்கு (வருணா ஷெட்டி ), ஆனந்த் மீது காதல் வருகிறது. அது வெளிப்பாடுத்தப்படாமலே இருக்கிறது .
ஜேம்ஸின் நண்பன் நவ்ஷாத் (ஜிஜேஷ் மேனன்) ஊரில் இருந்து பாத்திமா என்ற பெண்ணோடு (சாக்ஷி ஷர்மா) துபாய் வந்து “அவளைத் திருமணம் செய்து கொண்டு வந்து விட்டேன் . வசிப்பதற்கு வீடு வேண்டும்” என்று ஜேம்சிடம் உதவி கேட்கிறான் . ஜேம்ஸ் வீடு பார்த்துத் தருகிறான். ஆனால் நவ்ஷத்தோ பாத்திமாவை மலையாளியான தனது கம்பெனி எம் டி யுடன் படுக்கைக்குப் போக வற்புறுத்துகிறான் . மறுக்கும் பாத்திமாவை கொடுமைப்படுத்துகிறான் .
விஷயம் அறிந்த ஜேம்ஸ் பாத்திமாவை பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறான் . இதனால் ஜேம்ஸ் மீது தீராத கொலைவெறிப் பகை கொள்கிறான் நவ்ஷாத் .
பூர்ணிமாவுக்காக பல லட்சம் தந்த நபர் துபாய்க்கு வருகிறார் . முன்பே பூர்ணிமாவை பாலியல் ரீதியாக வற்புறுத்தும் முதலாளிக்கு இவர் நண்பர் வேறு . இப்போது ஒருவரும் சேர்ந்து பூர்ணிமாவை “படுக்கைக்கு சம்மதம் இல்லை என்றால் பணம் கொடு ” என்று வற்புறுத்துகிறார்கள்.
ஐம்பது லட்சம் கொடுத்தால் பூர்ணிமாவுக்கு பிரச்னை இல்லை என்ற நிலையில் மன்சூர் , ஆனந்த் மற்றும் நண்பர்கள் அதற்காக முயல , பணம் கிடைக்கவில்லை .
இந்நிலையில் மோகன்ராஜ் பூர்ணிமாவை பலாத்காரம் செய்ய முயல, அங்கே போகும் ஆனந்த் தனது நண்பனின் காதலியை காப்பற்ற முயல, அந்த முயற்சியில் மோகன்ராஜ் மரணம் அடைய , ஆனந்த் ஜெயிலுக்கு போகிறான்.
ஆனந்தின் நோயாளி அக்காவின் குடும்பம் கையறு நிலைக்கு போக, நிஷாவின் தந்தையான இப்ராஹிம் ரபானி நினைத்தால் ஆனந்தை காப்பற்ற முடியும் என்ற நிலை . நிஷா அப்பாவிடம் பேச, ஆனந்தை காப்பாற்ற இப்ராஹிம் ரப்பானி ஒரு அதிர்ச்சிகரமான நிபந்தனையை போடுகிறார் .
அடுத்து என்ன நடந்தது என்பதே , இந்த மணல் நகரம் .
படத்தின் கடைசியில் வரும் ஒரு காட்சியைத் தவிர, முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பை துபாயிலேயே நடத்தி இருக்கிறர்கள் . துபாயின் வானுயர்ந்த கட்டிடங்கள், பிரம்மாண்டம் , செழுமை , வண்ணமயம் இவை யாவும் ரசனையான பின்புலத்தை ஒவ்வொரு காட்சிக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. .
வேலுமணியின் வசனங்கள் படம் முழுக்க சிறப்பாக இருக்கின்றன . ரெனில் கவிதமின் இசையில் பாடல்கள் பெரிதாக பலம் சேர்க்கவில்லை என்றாலும் கூட, கேட்கும்போது உறுத்தாமல் இருப்பதையும் சொல்ல வேண்டும் .
படத்தில் வரும் பெண்கள் எல்லோருமே மிக அழகாக இருக்கிறார்கள் .
கவுதம் கிருஷ்ணா, பிரஜின் , தன்ஷிகா, வருணா ஷெட்டி , ஜெய்ஸ் ஆகியோர் நன்றாக நடித்து இருக்கிறார்கள் . வில்லனாக வரும் வி கே அசத்தி இருக்கிறார். ஒருதலை ராகம் படத்தில் பார்த்தது போலவே இன்னும் இளமையாக இருக்கும் ஷங்கர் , திரைக்கதையில் கிளைமாக்ஸ் திருப்பம் கொண்டு வரும் கேரக்டரில் இயல்பாக நடித்து இருக்கிறார்.
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், குழப்பம் இல்லாமல் மிக அழகாக அவற்றுக்கு இடையே இணைப்பு கொடுத்து, திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யத்தையும் நெகிழ்ச்சியையும் கொண்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர் .
பார்வையற்ற இசைக் குழுவுக்கு உதவ ஆனந்த் பார்வையற்றவனாக நடித்து பாடிக் கொடுக்கும் பண்பு , ஜேம்ஸ் கதாபாத்திரத்தின் தியாகம் , மன்சூர் கதாபாத்திரத்தின் பதை பதைப்பு, பாலியல் வக்கிர முதலாளியிடம் சிக்கிக் கொண்டு பூர்ணிமா தவிக்கும் தவிப்பு, பணக்கார சேட்டின் நம்பிக்கைக்குரிய மனிதராக இருந்து சேட்டு தன்னை தவறாக நினைத்த உடன் உயிர் துறக்கும் நல்ல மனிதரின் விரக்தி, அவரது குடும்பத்தின் அவலம் போன்ற விஷயங்கள் மனசுக்கு நெருக்கமாக படைக்கப்பட்டு இருக்கின்றன .
துபாயில் நடக்கும் இந்தியர் — பாகிஸ்தானியர் சண்டை, அவற்றை துபாய் அரசு பார்க்கும் விதம் , அங்குள்ள சட்ட திட்டங்கள் என்று பல விசயங்களை அங்கங்கே சொல்வது சிறப்பு.
அந்த கிளைமாக்ஸ் திருப்பம் மனதை கனமாக்குகிறது.
அடிப்படைக் கதை திரைக் கதையை வைத்துப் பார்க்கும்போது ராபர்ட் ராஜ சேகரன் இயக்கிய பறவைகள் பலவிதம் என்ற படம் நினைவுக்கு வந்தாலும், (இதற்கு முன்பே மலையாளத்தில் ஒரு படம் இயக்கி இருக்கும்) ஷங்கர் (இப்போது தமிழிலும்) ஒரு இயக்குனராக ஜெயித்து இருக்கிறார்.
மணல் நகரம் ….மனம் நகரும் !