ஒய் நாட் ஸ்டுடியோஸ் , ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் எல் எல் பி, ஒப்பன் விண்டோ புரடக்ஷன் சார்பில்
எஸ் . சஷிகாந்த்,சக்ரவர்த்தி ராமசந்திரா, மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன்( கிரியேட்டிவ் புரடியூசர்) ஆகியோர் தயாரிப்பில்
யோகி பாபு, ஷீலா ராஜேந்திரன், சங்கிலி முருகன், ஜி எம் சுந்தர், கண்ணா ரவி மற்றும் பலர் நடிப்பில் மடோன் அஷ்வின் எழுதி இயக்கி இருக்கும் படம் மண்டேலா .
விஜய் தொலைக்காட்சியிலும் பின்னர் நெட் பிலிக்ஸ் தளத்திலும் வெளியாகிறது இந்தப் படம்.
சாதி வெறியும் வறுமையின் வெறியும் போட்டி போட்டுக் கொண்டு கடித்துக் குதறும் –தென் தமிழ்நாட்டு வெக்கைக் கிராமம் ஒன்றின் ஊர்ப் பெரியவர் கருணாகரன் பெரியார் ( சங்கிலி முருகன்)
பெரியாரிஸ்ட் ஆன இவர், ஊரில் சாதிச் சண்டையைத் தீர்க்க, இரண்டு முக்கியச் சாதிகளில் இருந்தும் ஒவ்வொரு பெண் எடுத்துத் திருமணம் செய்து கொள்ள,
இரண்டு பெண்களுக்கும் தலைக்கொன்றாகப் பிறந்த மகன்கள் தத்தம் சாதியின் அடையாளம் ஆக, ஆத்தாக்காரிகளும் அதற்குத் தூபம் போட, சாதிச் சண்டை மேலும் பலமாகிறது .
ஊருக்குப் பொதுவாகக் கட்டப்பட்ட கக்கூசை எந்த சாதிக்கார ஆட்கள் முதலில் பயன்படுத்துவது என்ற சண்டையில் கக்கூசே இடிக்கப்படும் அளவுக்கு சாதி வெறி!
அந்த ஊரில் ஆலமரத்தடியில், அந்தக் கால பாணியில் கட்டை சேர் போட்டு நாவிதம் செய்து பிழைக்கும் ஒருவன்( யோகிபாபு) . நண்டு சிண்டு உட்பட ஊரே அவனுக்கு வைத்திருக்கும் பெயர் இளிச்சவாயன்.
அவன் நிஜ பெயரே தெரியாத நிலையில் அவனாக வைத்துக் கொண்ட பெயர் ஸ்மைல். அவனை ஏமாற்றாத ஆளே இல்லை.
இன்னொரு பக்கம் சாதி ஆணவ ஆட்கள் அவனிடம் சவரம் செய்து கொண்டு காசு தராமல் ஏமாற்றுவது , எடு பிடி வேலை செய்ய வைத்து எதுவும் தராமல் ஏய்ப்பது,
இவ்வளவு கஷ்டத்திலும் அவன் சம்பாத்தித்து ஆலமரத்தில் வைத்து இருக்கும் காசை திருடிக் கொண்டு போய் குடிப்பது என்று எல்லா அநியாயமும் செய்வதுண்டு. அவன் பக்கம் நியாயம் பேச இருப்பது அவனது உதவியாளன் ஆன கிருதா மட்டுமே . ஆம் அதுதான் அவர் பெயர்.
பணத்திருட்டை சமாளிக்க அவன் ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசில் அக்கவுன்ட் துவங்கி பணம் போட முயல, அக்கவுண்ட் துவங்க ஆதார் கார்டு, இருப்பிடச் சான்று , வாக்களர் அடையாள அட்டை, வாங்கித் தந்து உதவுகிறார் போஸ்ட் மாஸ்டரான முதிர்கன்னி ( ஷீலா ராஜேந்திரன்).
அவ்வளவு ஏன், ஏன் பெயரே இல்லாமல் இருந்த அவனுக்கு நெல்சன் மண்டேலா என்ற பெயரும் வைக்கிறார்.
அக்கவுன்ட் துவங்கி அதில் அவன் பணம் போட, பணம் திருடு போகாத நிம்மதி நிலை.
இந்த நிலையில் ஊரில் பஞ்சாயத்து தேர்தல் வர, பெரியவரின் இரு மகன்களும் நிற்க, அவரவர் சாதியினர் அவரவர் சாதி மகனுக்கு ஓட்டுப் போட உறுதி கூற, இருவருக்கும் சம எண்ணிக்கையில் ஓட்டு வருகிறது.
இந்த நேரத்தில் மண்டேலாவுக்கு வாக்களர் அடையாள அட்டை வர, அவன் ஓட்டுதான் எந்த சாதி மகன் வெற்றி பெற முடியும் என்பதை முடிவு செய்யும் என்ற நிலையில் ….
இதுவரை தெருவில் உள்ள நாய் அளவுக்குக் கூட மண்டேலாவை மதிக்காத இரு சாதி ஆட்களும் , அவன் ஓட்டைப் பெற அவனுக்கு வித விதமான வசதிகள் செய்ய,
யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு செய்யாமல் அவன் குழம்ப, அவனைக் கவர இரு சாதியினரும் மேலும் மேலும் உதவிகள் செய்ய, வசதியில் கொழிக்கும் மண்டேலா அப்போதும் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு செய்ய முடியாமல் குழம்ப,
ஒரு இரு தரப்பும் கொந்தளிக்க , அடுத்து நடக்கும் விபரீதங்களில் விழுந்தது என்ன ? விளைந்தது என்ன என்பதே இந்த மண்டேலா.
அட்டகாசமான படம்.
அசத்தலான கதை . அபாரமான திரைக்கதை. உறுத்தாத எளிய அர்த்தமுள்ள வசனங்கள். நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம், எளிமை , பக்குவம் மேட்டிமை நிறைந்த இயக்கம் .
திரையரங்குகள் தவற விட்ட அற்புதமான படம்.
படிக்கக் கூட வக்கில்லாமல் பழைய கஞ்சிக்கு அலைந்தாலும் சாதி வெறி என்னும் சாணியைத் தின்னும் மனித மனங்கள், தீண்டாமையின் கொடுமை, இரக்கமின்மை ,
வாக்குரிமையை விற்பதால் வரும் கேடுகள், கேவலங்கள், அந்த வாக்குரிமையின் உண்மையான பலன் , வாக்குப் பதிவு சமயத்தில் திடீர் முக்கியத்துவம் பெரும் பஞ்சைப் பராரிகள், அப்போது நடக்கும் கோரங்கள் , நகைச்சுவைகள்
எளியவர்களிடம் கொட்டிக் கிடக்கும் மனிதம் ….
இவற்றை எல்லாம் பிரச்சார நெடி , ஆர்ப்பாட்டம் இல்லாமல் கண்ணியமாக கடிதோச்சி மெல்ல எறிந்து,
ஆரோக்கியத்துக்கு தேவையான கசப்பு மருந்தை, ஆஹா என இனிக்கும் தேனில் கலந்து கொடுப்பது போல, காமெடி கலந்து கொடுத்து இருக்கிறார், எழுதி இயக்கி இருக்கும் அன்புத் தம்பி கருத்தாளன், கருத்தாழன் மடோன் அஷ்வின் .
ஒரு நல்ல படம் சரியாக இருபது நிமிடங்களிலேயே தன்னை அடையாளம் காட்டி விடும். இந்தப் படமும் அப்படிதான்.
சரியாக சொல்லப் போனால் இடைவேளை வரும்போதே படம் மனதில் நிறைந்து விடுகிறது. அதற்குப் பின் கிடைப்பது எல்லாம் போனஸ் . அதுவும் அருமையான போனஸ் .
மிக முக்கியமாக இயக்குனர் அஷ்வினுக்கு ஒரு காட்சியை எவ்வளவு நீளத்தில் சொல்ல வேண்டும் என்பது சரியாக வசப்படுகிறது.
சரியான வாய்ப்புகள் கொடுத்தால் இவர் பல அற்புதமான நல்ல வெற்றிப் படங்களைத் தருவார் என்பது புரிகிறது .
வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையை மாத்தி யோசி பாணியில் பயன்படுத்தி இவர் அமைத்து இருக்கும் காட்சிகள் ரசனை .
வசனம், சூழல், முக பாவனைகள், நடிகர்களின் உடல் மொழிகள் மூலம் எல்லாம் நகைச்சுவையை வரவழைக்கும் திரைமொழி சிறப்பாகக் கைவரப் பெறுகிறது அஸ்வினுக்கு .
யோகி பாபு !
தனது வழக்கமான பாணியை முற்றிலும் தள்ளி வைத்து விட்டு கதை நாயகனாக அசத்தி இருக்கிறார் யோகி பாபு. கதைக்கு உட்பட்ட காமெடி மட்டுமல்லாது, சோகக் காட்சிகளிலும் நெகிழ வைக்கிறார் . யோகி பாபுவுக்கு இந்தப் படம் இன்னொரு உயரம்.
படம் முழுக்க யோகி பாபு இருந்தாலும் இது ஒரு இயக்குனரின் படமாக வந்திருக்கும் அதிசயம் நடந்திருக்கிறது . இப்படி எதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் இயக்குனரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை .
ஷீலா ராஜேந்திரன் மிக சிறப்பான நடிப்பு .
அவர் மட்டுமா? கிருதாவாக வந்திருக்கும் தம்பி, சங்கலி முருகன், மகன்களாக வரும் சுந்தர் , கண்ணா , அவர்கள் தரப்பில் வரும் மற்ற நடிகர்கள் , இயல்பான கிராமத்து முகங்கள் எல்லோரும் சிறப்பாக பங்களித்துள்ளனர்
நகைச்சுவைக் காட்சிகளுக்குத் தரக் கூட்டல், நெகிழ்வான காட்சிகளுக்கு நல்ல துணை என்று பரத் சங்கரின் பின்னணி இசை பிரம்மாதம். இப்படி ஒரு படத்துக்கு பாடல்கள் சும்மா தெறிக்க விட வேண்டாமா ? இல்லையே இசை அமைப்பாளரே.
ஆரம்பக் காட்சிகளும் இரண்டாம் பகுதியும் எல்லை மீறாத அளவில் வந்திருப்பதில் எடிட்டர் பிலோமின் ராஜின் பங்கு சிறப்பானது.
மற்ற தொழில் நுட்பங்கள் குறிப்பாக ராஜூ தங்கராஜின் கலை இயக்கம் இவையும் சிறப்பு .
எந்த சாதிப்பெண்ணை பெரியவர் மணந்தால் என்ன? அப்பாவின் சாதிதானே நம்ம ஊரில் கணக்கு.? அதன் பிறகும் பிள்ளைகள் வெவ்வேறு சாதிக்கு எப்படி அடையாளம் ஆவர்கள் என்ற பாமர லாஜிக்கை தவிர்க்க முடியாதுதான் .
அதே போல படத்தின் சில பல காட்சிகள் சூழல்கள் கூட யதார்த்தம் அல்லாத லாஜிக் மீறல்கள்தான் .
ஆனால் அதை வைத்து இந்தப் படம் சொல்ல வரும் கருத்து எவ்வளவு உயரியது என்று பார்க்கும்போது இந்த லாஜிக் மீறல்கள் கூட குறும்பான குறியீடுகளாக மாறி ரசிக்க வைக்கின்றன .
இந்தத் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் தியேட்டர்களில் இறங்கி தெறிக்க விட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்?
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படத்தைப் பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்
மண்டேலா ……. மகத்தானவன் .
மகுடம் சூடும் கலைஞர்கள்
**************************************
மடோன் அஷ்வின், யோகி பாபு, பரத் சங்கர்