எத்தனையோ பேருக்கு இலவசமாக இசை சொல்லிக் கொடுத்து உருவாக்கிய பிதாமகன் அவர். மாண்டலின் இசை மட்டுமல்லாது வேறு இசைக்கருவிகள் வாசிப்பதில் புகழ் பெற்ற இசை வல்லுனர்களும் அவர் மீது பிரம்மிப்பான மரியாதை வைத்து இருந்தார்கள். அப்படி எத்தனையோ இசைக் கலைஞர்களும் , பெரிய ஆளுமைகளும் சீனிவாசின் இசையில் மனதைப் பறிகொடுத்து அவர் மறைந்த பின்னரும், இன்றும் அவர் மேல் தீராப் பற்றோடு இருக்கிறார்கள் .
புகழ் பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் , சீனிவாசின் தம்பி மாண்டலின் ராஜேஷும் சீனிவாசின் பிரதம சிஷ்யர்கள் .
சென்னை மற்றும் தமிழ் நாட்டில் கடந்த 20 வருடங்களாக வெளிப்புற விளம்பரங்களில் முதன்மை நிலையில் இருந்து வரும் எஸ் எஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு துவங்கிய அடுத்த நிறுவனம்தான் எஸ் எஸ் இன்டர்நேஷனல் லைவ் .
ஆண்டு தோறும் ஜனவரியில் மூன்று நாட்கள் தை உற்சவம் , அக்டோபர் , நவம்பரில் ஒன்பது நாள் நவோத்சவம் உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு , சென்ற ஆண்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் காவியத்தை பதினெட்டு முறை மேடை ஏற்றிய பெருமைக்குரிய நிறுவனம் இந்த எஸ் எஸ் இன்டர்நேஷனல் லைவ்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், சீனிவாசின் தம்பி மாண்டலின் ராஜேஷ் இருவருடனும் சேர்ந்து மேற்படி எஸ் எஸ் இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம் , மாண்டலின் சீனிவாசின் பிறந்த நாளான வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில், மாண்டலின் சீனிவாசின் புகழ் பாடும் விதமாக, the GREAT MANdolin என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை மியூசிக் அகாடமியில் நடத்துகிறது .
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாண்டலின் சீனிவாஸ் பற்றிய இருபது நிமிட ஒலி/ஒளிக் குறுந்தகடை வெளியிட்டு உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்புரை ஆற்ற , இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் உஸ்தாத் ஜாகீர் உசேன், விக்கு விநாயக் ராம், அருணா சாய்ராம், ஹரிஹரன், சங்கர் மஹாதேவன், டிரம்ஸ் சிவமணி, குணால் கன்ஜாவாலா , மாண்டலின் ராஜேஷ் , ரஞ்சித் பரோட், அனில் சீனிவாசன் , செல்வகணேஷ், ஸ்டீபன் தேவசி, உமாசங்கர், ஹர்மீத், மற்றும் பல இசைக் கலைஞர்கள், இவர்களுடன்….
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தி, அருவிகள் சேர்ந்து உருவாகும் ஓர் அற்புத இசை நதியை ஓடவைக்க இருக்கிறார்கள்.
“மேற்படி கலைஞர்கள் யாரும் இதற்காக ஒரு பைசா கூட சம்பளம் பெறாத நிலையில் , இந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சியையும் பார்வையாளர்களுக்கு இலவசமாகவே வழங்குகிறோம் ” என்று சொன்ன எஸ் எஸ் இன்டர்நேஷ்னல் உரிமையாளர் குமணன் தொடர்ந்து ” மாண்டலின் சீனிவாஸ் உருவாக்கிய சிவ ஓம் அமைப்பின் பெயரில், இனி வருடா வருடம் மூத்த இசைக் கலைஞர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாயையும் இளம் இசைக் கலைஞர் ஒருவருக்கு ஐம்பது லட்ச ரூபாயையும் பரிசாக ராஜேஷ் வழங்குவார் ” என்றும் அறிவித்தார்.
“தேவி ஸ்ரீ பிரசாத் போன்றவர்கள் அண்ணன் மீது வைத்துள்ள குருபக்தி மனம் நெகிழ வைக்கிறது” என்றார் மாண்டலின் ராஜேஷ் .
“மாண்டலின் சீனிவாஸ் அவர்களை குருவாக அடையப் பெற்றது நான் செய்த பெரிய பாக்கியம் . அவரது திறமைக்கு முன்னாள் நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை . அவரது ஆசிர்வாதமே என்னை எல்லாம் இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது . அவர் புகழ் என்றும் மாறாது ” என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.
ஆக,
பிப்ரவரி 28 தேதி மறைந்த மாண்டலின் இசை மேதை சீனிவாசின் புகழ் பாடி இசை பாடும் ஒரு நெகிழ்வும் மகிழ்வுமான இசை விருந்தாஞ்சலி, சென்னையை இசைச் செவிகளில் தேன் ஊற்றக் காத்திருக்கிறது .
ரசித்து ருசிக்கவும் ருசித்து ரசிக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .