பிளாக் ஸீ மூவீஸ் சார்பில் கே. ஈஸ்வரமூர்த்தி , ஏ.வி.ஆறுமுகம் இருவரும் தயாரிக்க, தருஷி என்பவர் கதாநாயகியாக நடிக்க, அக்னி என்ற புதியவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் மனிதக் காதல் அல்ல.
அப்படியானால் இது வேறு என்ன காதல் ? பார்க்கலாம்.
கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் அவள் (தருஷி) . வயதுக்கு வந்த பின்பும் தினமும் அப்பா பெட் காபி கொடுத்து எழுப்ப , அம்மா சாப்பாடு ஊட்டி விட , அவ்வளளவு செல்லமாக வளர்ந்த அந்த பெண்ணின் சந்தோஷங்கள் , ஒரு ஆக்சிடெண்டில் அப்பா அம்மா இருவரும் இறந்த அடுத்த நொடியில் பறிபோகிறது.
ஒரே வாரிசு என்பதால் அவளைக் கொன்று விட்டால் சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம் என்று அவளது சித்தப்பா திட்டமிடுகிறார். அதே நேரம் ரவுடி தாய்மாமனும் அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டு சொத்துக்களை அடையத் திட்டமிடுகிறான். அவர்களுக்குள் அந்த விசயத்தில் சண்டை வேறு வருகிறது.
காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் கண்ணீரில் கரையும் அந்த அப்பாவி பெண்ணிடம் ஒரு பெண்மணி “கவலைப் படாத மா . கடவுள் பாத்துக்குவாரு” என்று சொல்ல , “கடவுளா? அவரு இருந்தா என் அப்பா அம்மா இப்படி அநியாயமா சாவாங்களா? அவரு எங்க இருக்கார் ?” என்று அந்த பெண் கதற , அப்படியே கேமரா மேலே போக….
வையகத்துக்கு மேல உள்ள வானகம் !
அங்கே வெள்ளி நிறமும் நீல நிறமும் கலந்த உலகில் கடவுளாக கோட் சூட் போட்ட நாசர் . அவருக்குக் கீழே ஏகப்பட்ட ஆண் பெண் ஏஞ்சல்கள். அவைகளுக்கு தலைமை அதிகாரியாக ஒரு பெண் ஏஞ்சல்.
பூமியில் கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்து அங்கே ஒவ்வொரு ஏஞ்சலாக அனுப்பி உதவி செய்ய வைப்பது அந்த தலைமை பெண் ஏஞ்சலின் பணி. கற்றுக் கொடுக்கும் மாஸ்டராக மனோ பாலா. அங்குள்ள ஏஞ்சல்களில் ஒருவன் அக்னி (நாயகன் அக்னி ). இப்படி ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல இருக்கிறது இந்த கடவுளின் உலகம்!
பெற்றோர் இல்லாத ஒரு சிறுமியை தேற்றி ஆறுதல் கூறும் பணிக்கு அக்னி அனுப்பப்பட்டு பூமிக்கு வருகிறான். ஆனால் அவனுக்கு பெற்றோரை இழந்து தவிக்கும் இளம் பெண்ணின் குரல் காதில் விழ, நாயகிக்கும் உதவி செய்கிறான் .
விதி மீறல் காரணமாக கடவுளின் தண்டனைக்கு ஆளாகும் அக்னி , ஒரு தேவதைக்குரிய எல்லா சக்திகளையும் இழந்து சாதாரண மனிதானாக பூமிக்கு வருகிறான் .
“அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து அவளது பிரச்னைகளை தீர்த்த பிறகு மீண்டும் உன்னை தேவதையாக்கி அழைத்துக் கொள்கிறேன் ” என்று கூறி விடுகிறார் கடவுள் .
அந்தப் பெண்ணுக்கும் அக்னிக்கும் காதல் வர, விஷயம் தாய்மாமன் வில்லனுக்கு தெரிய, அவன் அக்னியைக் குத்திக் குற்றுயிரும் குலை உயிருமாக்க……. அப்புறம் அந்த கார்ப்பரேட் கடவுள் என்ன செய்தார் என்பதுதான் இந்தப் படம் .
வித்தியாசமான இந்த கதை சிந்தனை படத்தின் முதல் பலம் .
மிக அழகாக இருக்கிறார் நாயகி தருஷி . நடிப்பும் ஒகே .
எழுதி இயக்கி நடித்து இருக்கும் அக்னியின் குரல் ஈர்ப்பாக இருக்கிறது .
நாயகனைப் போலவே தப்பு செய்து விட்டு மனிதனாக பூமிக்கு அனுப்பப்படும் மனோபாலா பசி தாள முடியாமல் சாப்பாடு பால் பாட்டில் எல்லாம் திருடி அடி வாங்கிக் கொண்டு படம் முழுக்க ஓடிக் கொண்டே இருப்பது, புன்னகை .
பாரதி ராஜன் என்பவரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது . ஷமீரின் இசையும் ஒகே ரகம்.
கடவுள் ஆண் பெண் ஏஞ்சல்கள் என்று ஒரு சுவாரஸ்யமான களம் பிடித்தவர்கள், அதைப் போல கதாநாயகிக்கும்– சொத்துக்கு அலையும் சித்தப்பா , முறை மாமன் என்று போகாமல் — ஒரு வித்தியாசாமான பிரச்னையை, சிக்கலை, ஆபத்தை உருவாக்கி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
மனிதக் காதல் அல்ல …. அதையும் தாண்டாமல் சகஜமானது.