
டான் கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் தயாரிக்க,
பாலு மகேந்திரா பயிற்சிப் பட்டறையில் பயின்ற திரு என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆக, சசி என்பவர் ஹீரோயினாக அறிமுகம் ஆக,
சத்யா சரவணா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் மஞ்சள் .
ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் சார்பில் பாரதி அய்யப்பனும் சுகு பூப்பாண்டியனும் வாங்கி வெளியிடும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டம் எதையும் திரையிடாமல் நான்கு பாடல்களை மட்டும் திரையிட்டனர்
அச்சு அசலான கிராமியத் தோற்றத்தில் திருவும் சசியும் நடித்திருக்க, செல்வ நம்பியின் இசையில் மண்வாசனை இருக்க, கிராமத்து வெளிகளை சிறப்பாக படம் பிடித்த சதீஷ் குமாரின் ஒளிப்பதிவில்,
சத்ய சரவணின் சிறப்பான எளிமையான இயக்கத்தில்,
உருவாகி இருக்கும் அந்த நான்கு பாடல்களுமே படத்துக்கு நல்ல முன்னோட்டமாக இருந்தன .
படத்தில் பக்கவான கிராமத்துப் பெண் தோற்றம் காட்டிய கதாநாயகி சசி நேரில் அவ்வளவு மாடர்னாக இருக்கிறார் . இதுவே ஒரு வெற்றிகரமான படத்துக்கான மேஜிக் ஆக இருக்கிறது .
சிறப்பு!
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் கேபிள் சங்கர்
“மிக சிறப்பான கிராமத்துப் படமாக இது இருக்கும் என்பது பாடல்களிலேயே தெரிகிறது . படம் வெற்றிபெற வாழ்த்துகள் ” என்றார் .
படத்தின் ஒளிப்பதிபாலர் சதீஷ் குமார் “கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை செய்ய தேவையான சுதந்திரத்தை இயக்குனர் கொடுத்தார்.
வசதிகளை தயாரிப்பாளர்கள் கொடுத்தனர் .
அவர்களுக்கு நன்றி . படம் நன்றாக வந்திருக்கிறது ” என்றார்
நடிகர் ஜெயசூர்யா பேசும்போது ” பதினெட்டு வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன் . வில்லன் அடியள் வேஷம் என்றேதான் வந்து கொண்டு இருந்தன .
ஆனால் இந்தப் படத்தில் மிக வித்தியாசமான கேரக்டர் கொடுத்து எனக்கு புதிய திருப்பம் கொடுத்து இருக்கும் இயக்குனருக்கு நன்றி ” என்றார்
நடிகர் சம்பத் பேசும்போது ” இந்தப் படத்தில் எனக்கு வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரம் .
ஒரு சோக்காளி கதாபாத்திரத்தில் வருகிறேன் ” என்றார் .
இசையமைப்பாளர் செல்வ நம்பி தன் பேச்சில் ” ஆரம்பத்தில் பாடம் எழுத மறுத்த யுகபாரதி மெட்டு ரொம்பப் பிடித்துப் போய் எழுதிக் கொடுத்தார் .
நா. முத்துக்குமார் தான் எழுதிய பாடலை அடிக்கடி வந்து கேட்டு உற்சாகப் படுத்தினார்.
ஏகாதசி எழுதிய ஒரு பாடல் இருக்கிறது . தவிர கனா பாலா தானே எழுதி பாடிய பாடலும் சிறப்பாக வந்திருக்கிறது . ” என்றார்
நடிகர் குணா பேசும்போது ” படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்கள் என்பதால் அவர்களைப் பற்றி தெரிந்த வகயில் சொல்கிறேன் . மிக சிறந்த தயாரிப்பாளர்கள் இவர்கள் .
நானும் இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து உள்ளேன் . படம் மிக நன்றாக வந்துள்ளது . இந்தப் படத்தின் வெற்றி பல நல்ல படங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் ” என்றார் .
படத்தின் நாயகன் திரு பேசும்போது “இயக்குனரை நானாக சந்தித்து வாய்ப்புக் கேட்டேன் . அவர் கொடுத்தார் . நடிக்கும்போதே அவ்வளவு நம்பிக்கையாக இருந்தது .
இப்போது அது அதிகமாகி இருக்கிறது ” என்றார்
சிறப்பு விருந்தினராக வந்திருந்த க க க போ படத் தயாரிப்பாளர் டாக்டர் சங்கர் “இது போன்ற கதை அம்சங்களோடு கூடிய படங்களே சினிமாவை உருவாக்கும் .
ஆகவே நல்ல கதை அம்சத்துடன் சிறப்பாக படமாக்கப்படும் எல்லா படங்களுமே பெரிய படங்கள்தான் . மஞ்சள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார்
தேவர் பிக்சர்ஸ் சார்பில் பேசிய சுகு பூப்பாண்டியன் ” ரஜினி நடித்த எந்திரன் படத்தை எங்கள் ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் (சன் பிக்சர்சுடன் இணைந்து) வெளியிட்டவர் மறைந்த ஐயப்பன் .
இப்போது நல்ல சிறிய படங்களாக வாங்கி வெளியிடுகிறோம் க க க போ மற்றும் இந்தமஞ்சள் படத்தை இப்போது வாங்கி இருக்கிறோம் .
இதே தேவர் பிக்சர்ஸ் மூலம் ஐயப்பனின் மகன் பாரதி ஐயப்பன் , எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 வையும் வாங்கி வெளியிடுவார் இது உறுதி ” என்றார் .
பாடல்களை வெளியிட்டுப் பேசிய நடிகர் — இயக்குனர் ராஜ் கபூர் “கதை கேட்டபோது விலாவரியாக போனிலேயே மூன்றரை மணி நேரம் கதை சொன்னார் இயக்குனர் .
முதல் நாள் படப்பிடிப்பை அவர் நடத்திய விதத்தில் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகி விட்டேன் .
அது கடைசி வரை தொடர்ந்தது ” என்றார்
படத்தின் இயக்குனர் சத்ய சரவணா தன் பேச்சில் ” இன்றைய கிராமத்து வாழ்வில் குடிப் பழக்கமும் அதை வைத்து பலரை ஏமாற்றி மயக்கி தவறான காரியங்களில் ஈடு பட வைக்கும் மனிதர்களும்,
எப்படி நல்ல மனிதர்களின் வாழ்வை சீரழிக்கிறார்கள் என்பதை சொல்லும் படம் இது . வாய்ப்பு மட்டுமல்லாது தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது .
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும் செல்வ நம்பியின் இசையும் எனக்கு பெரிய பலமாக இருந்தது .
தப்படிக்கும் வேடத்தில் வரும் திருவை நிஜமாகவே சில மரண வீடுகளுக்கு அனுப்பி தப்படித்துப் பழக வைத்தேன் . படத்துக்கு ராஜ்கபூர் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கொடுத்த ஒத்துழைப்பு மிக சிறப்பானது ” என்றார் .
தயாரிப்பாளர் சுரேஷ் பேசும்போது
” படம் எடுத்தால் அர்த்தமுள்ள நல்ல கதைகளைத்தான் எடுக்க வேண்டும் என்று இருந்தேன் . அப்படி ஒரு கதையோடு வந்தார் இயக்குனர் .
அது மட்டுமல்ல , ஒரு பாடலை கம்போஸ் செய்து இசை அமைத்து அதற்கு ஹீரோ திருவை நடிக்க வைத்து அதைப் போட்டுக்காட்டி அவர் கதையை சொன்னது மிக சிறப்பாக இருந்தது.
படம் நன்றாக வந்திருக்கிறது . அதுவும் ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் படத்தை வாங்கிய பிறகு நம்பிக்கை அதிகரித்துள்ளது ” என்றார் .
மங்களகரமாய் வெல்லட்டும் மஞ்சள்