டான் கிரியேஷன்ஸ் சார்வில் கணேஷ், சுரேஷ் , பிரியா மூவரும் தயாரிக்க, பாலுமகேந்திரா சினிமாப் பட்டறை மாணவரான திரு –கொக்கரக் குளம் , தேனீ பசங்க போன்ற படங்களில் நாயகியாக நடித்த சசி ஆகியோரின் நடிப்பில் சத்யசரவணா இயக்கி இருக்கும் படம் மஞ்சள்
“மரணம் என்பது சம்மந்தப்பட்ட குடும்பம் மற்றும் நெருங்கிய சொந்தத்துக்கு மட்டுமே பெரிய துக்கம் . மற்றவர்களுக்கு அது கூடிப் பழகும் ஒரு நிகழ்வு. இந்த பக்குவ மன நிலை கொண்ட ஒரு சமூகத்தில் , மரணத்துக்கு கொட்டடித்து பிழைக்கும் ஒரு இளைஞன்தான் படத்தின் நாயகன். அவனுக்கு ஒரு காதல் . அந்தக் காதலுக்கு வரும் பிரச்னை என்பது கதையின் ஒரு பக்கம் “என்று சொல்கிறார் இயக்குனர் சத்ய சரவணா
மறுபக்கம் ?
தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தால் லட்சியமற்ற தலைமுறை, வீணாகும் மனித சக்தி, அகால மரணங்கள் , இளம் விதவைகள் மற்றும் அனாதைகள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில்…
அந்த போதைப் பழக்கத்தால் வளரும் இன்னொரு அவலமான அசிங்கமான , சமூக அவமானமான பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாராம். (“அது என்ன பிரச்னைன்னு இப்ப ஓப்பனா எழுத வேணாம் சார் “)
” காதல் என்ற வார்த்தையைக் கேட்டால் கடவுளே கல்லெடுத்து அடிக்கும் நிலை வந்து விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு காதல் கேவலமாக போய்க்கிட்டுருக்கு. இந்த சூழ்நிலையில , உண்மையா காதலிக்கிற அந்த காதல் ஜோடிக்கு , குடியால் ஏற்படும் சமூக அவலமான அந்த பிரச்னை மூலமா பாதிப்பு வருது . இப்படி சமூக அக்கறை , தனி மனித வாழ்க்கை இரண்டையும் கலந்து கதை சொல்லி இருக்கிறேன்.
பல கறுப்பு விஷயங்களைப் பற்றி படம் பண்ணும்போது ஒரு வித்தியாசமான டைட்டில் இருக்கட்டுமேன்னுதான் படத்துக்கு நேர் மாறா ‘மஞ்சள்’னு பேரு வச்சேன் .(செண்டிமெண்ட்!) மத்தபடி படத்துக்கும் அந்த தலைப்புக்கும் சம்மந்தம் இல்ல ” என்கிறார் இயக்குனர். (கதாநாயகிக்கு மஞ்சள் தாவணி போட்டு ஆட விட்டா , சம்மந்தம், கல்யாணம் எல்லாம் தானா வந்துடப் போவுது )
படத்தில் சிங்கம் புலி , சிங்கமுத்து, சண்முக சுந்தரம், செவ்வாழை போன்ற கிராமத்து முகம் கொண்ட நடிகர்கள் பலர் உண்டு .
படத்தின் கதையை எழுதிய இயக்குனர் சத்ய சரவணா ஹீரோ, ஹீரோயின் ஆகியோரை முடிவு செய்து , இசையமைப்பாளர் செல்வநம்பி இசையில் பாடல்களையும் கம்போஸ் செய்து விட்டு, அதன் பிறகுதான் முதன் முதலில் தயாரிப்பாளர்களை பார்த்து கதையை சொல்லி ,
‘ இவர்தான் ஹீரோ, இவங்கதான் ஹீரோயின் , இதுதான் பாடல்கள் ‘ என்று லைவ் டெமோ காட்டி , தயாரிப்பாளர்களை திருப்திப் படுத்தி… அப்படி படம் ‘பிடி’த்திருக்கிறார்.
படத்தில் கானா பாலா எழுதிப் பாடிய ஒரு பாடலும் உண்டு . அந்தப் பாடலைப் பாடிக் காட்டும் கானா பாலா ” 75 பாட்டு எழுதிட்டேன் . 300 பாட்டு பாடிட்டேன் . போதும்னு தோணுது . அடுத்த தலைமுறைக்கு வழி விடலாம்னு முடிவு பண்ணிட்டேன் . அதானால இனிமே யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.
நாந்தான் வேணும்னு அவங்களா வந்தா மட்டும் பாடுவேன் . எழுதுவேன் . நான் தனி ஆல்பம் நிறைய பண்ணப் போறேன் . வேளாங்கண்ணி மாதா மேல ஒரு பக்தி ஆல்பம் பண்ணிட்டு இருக்கேன் ” என்றார்.
நல்லது, செய்ங்க !