மனுஷங்கடா @விமர்சனம்

ஏகே பிலிம்ஸ் சார்பில் தாரா மற்றும் ஞான நட்குணன் தயாரிக்க, ராஜீவ் ஆனந்த், மணிமேகலை, சசிகுமார் , ஷீலா ராஜ்குமார் நடிப்பில், 

 ஒருத்தி படத்தை இயக்கிப்  புகழ் பெற்ற அம்ஷன் குமார் எழுதி இயக்கி இருக்கும் படம் மனுசங்கடா .  சிறப்புடா என்று ரசிகர்கள் பாராட்டும் படமாக இருக்குமா ? பார்க்கலாம் . 

சென்னையில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் கோலப்பனுக்கு   (ராஜீவ் ஆனந்த்)  கிராமத்தில் தந்தை இறந்த செய்தி வருகிறது .
 
தான் காதலிக்கும் பெண்ணான ரேவதிக்கும் (ஷீலா ராஜ்குமார்) தகவல் சொல்லி வரச் சொல்லி விட்டு ,
 
ஊருக்குப் போகிறான் . ஊரில் பாமரத் தாய் (மணிமேகலை) கதறிக் கொண்டிருக்கிறாள் . 
 
கோலப்பனின் ஊரில் போய் இறங்கும்  ரேவதி கோலப்பனின் வீட்டு முகவரியை கேட்கும்போது , அவளுக்கு கிடைக்கும் மூக்குடைப்பே சாதிவெறி அவலத்தை சொல்கிறது . 
கோலப்பனின் அப்பாவின் உடலை ஊரின் பொதுவான தெரு வழியே கொண்டு செல்ல ஆதிக்க சாதியினர் தடை விதிக்கின்றனர் .
‘இதுவரை பாதையே இல்லாத முள்ளுக் காட்டின் வழியே தாழ்த்தப்பட்ட மக்களின் பிணத்தை தூக்கிக் கொண்டு போய் புதைக்கும் அவலம் இதோடு ஒழிய வேண்டும்’
 
– என்று முடிவு செய்து கோலப்பனோடு தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் சேர்ந்து ஊரின் பொதுத் தெரு வழியே இறுதி ஊர்வலத்தை  நடத்தப்  போராடுகின்றனர் . 
 
படித்த நண்பர்கள் மூலம் சென்னைக்கு வந்து,  உடனடி வழக்காக நடத்தி பொது வழியில் கொண்டு போக கோர்ட் அனுமதி பெற்று ஊருக்கு வருகின்றனர் . 
 
ஆனாலும் சாதி வெறி சும்மா இருக்கவில்லை . ஆர் டி ஓ , இன்ஸ்பெக்டர் , டி எஸ் பி வரை அனைவரும் ,
 
“ஊரின் பொது வழியில் போனால் ரத்த ஆறு ஓடும்’ என்று ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகப் பேசி அனுமதி மறுக்கின்றனர் 
 
போலீஸ் அந்த உடலை வலுக்காட்டயமாக பிடுங்கி முள்ளுக் காடு வழியே கொண்டு போய் அடக்கம் செய்ய திட்டமிட்டு, 
 
கைகலப்பில் இறங்குகிறது . பிணத்தோடு வீட்டுக்குள் போய் பூட்டிக் கொள்கிறார்கள் அந்த ஆதரவில்லா மக்கள் . 
மின்சாரம் நிறுத்தப் படுகிறது . பிரீசர் இயங்காத காரணத்தால் பிணம் அழுகத் துவங்குகிறது . 
 
ஒரு நிலையில் கோலப்பனும் அவன் சமூக இளைஞர்கள் சிலரும் தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பற்ற வைத்து பிணத்தோடு எரிய முடிவு செய்கின்றனர் . 
 
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவு தர ஆட்கள் வருவதாக ஒரு செய்தி வர , அதை நம்பி பாடையில் அலங்கரித்து கொண்டு செல்ல,
 
வழியில் மறிக்கும் போலீஸ் எல்லோரையும் அடித்துக் கைது செய்கிறது . பிணத்தை பிடுங்கிக் கொண்டு முள்ளுக் காடு வழியே செல்கிறது . 
 
ஒரு நாள் ஜெயிலில் வைக்கப் பட்ட கோலப்பனும் அவன் சமூக இளைஞர்களும் மறுநாள் சடங்குகள் செய்ய , சுடுகாடு போனால் …
 
அங்கு அவர்களுக்கு கிடைக்கும் மனிதாபிமானம் அற்ற , மிருகத்தனமான , கேவலமான கொடுமையான, 
 
மனதுக்குள் பூகம்பம் ஏற்படுத்தும்  அநியாய அராஜக , உங்களால் யூகிக்க முடியாத கொடூர அனுபவமே இந்தப் படம் . 
 
பல்வேறு உலகப் பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற படம் . 
 
மிக எளிய படமாக்கல் மனம் கவர்கிறது 
 
நடிக நடிகையரின் நடிப்புதான்  செயற்கை . 
 
அம்மாவாக நடிக்கும் மணிமேகலையும் ரேவதியாக நடிப்பவரும் மட்டும்  பரவாயில்லை . 
 
பி எஸ் தரனின் ஒளிப்பதிவும் அரவிந்த் -சங்கர் இரட்டையரின் இசையும் எளிமையாகவும் பலமாகவும் இருக்கிறது .
 
தனசேகரின் படத் தொகுப்பு இன்னும் கொஞ்சம் கச்சிதமாக இருந்திருக்கலாம். 
 
மிக சாதரணமாக போகும் படம் இரண்டாம் பகுதியில் பிணத்தை போலீஸ் கைப்பற்ற முயலும்போது பரபரப்பும் அர்த்தமும் கொள்கிறது .
 
அடுத்து வரும் காட்சிகள் அதிர்ச்சியையும் அவலத்தையும் சேர்த்துக் கொண்டே போகின்றன 
 
சாதி வெறியின் இரக்கமில்லா கொடூர குணத்தை  சொல்லும் அந்த இறுதிக் காட்சியில் படம் பார்க்கும் நம் மனசுக்குள் பூகம்பம் வெடிக்கிறது .
 
ஆடி அதிர்ந்து நடுங்கிப் போய் உட்கார்ந்திருக்கிறோம் . 
பின்னணியில் இன்குலாப் எழுதி குணசேகரன் பாடிய புகழ் பெற்ற பாடலான ‘மனுசங்கடா  நாங்க ‘ பாடல், 
 
புது மெட்டில் குணசேகரனின் மகன் குரலில் ஒலிக்க , படம் மனசுக்குள் விஸ்வரூபம் எடுக்கிறது . 
 
தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சாதி ஆணவம் மிக்க ஆதிக்க சாதியினர்  இழைக்கும் கொடுமையை, 
 
 எந்த சமரசமும் பூச்சும் இல்லாமல் வெளிப்படையாக பொட்டில் அடித்து சொல்லும் இந்தப் படம் , மறக்க முடியாத மறைக்க முடியாத ஒரு கனமான  பதிவு . 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *