எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், அஞ்சலி, சூரி, டத்தோ ராதா ரவி ஆகியோர் நடிப்பில் ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் .
இந்த மாப்ள முறுக்கா? இல்லை கிறுக்கா ? பார்க்கலாம் .
கோவில் திருவிழா தேரோட்டத்தில், எந்த சாதி வடம் பிடிப்பது என்ற பிரச்னையில் முட்டிக் கொள்ளும் ஒரு ஊர் , இரண்டு சாதிகள் .
உள்ளாட்சிப் பதவியில் இருப்பவரும் சாதி வெறி பிடித்த பெரிய மனிதருமானவருக்கு (ராதாரவி ) ஒரே மகள் (மதுபாலா) .
எனவே அந்தப் பெரிய மனிதர் தனது தம்பியின் (பேராசிரியர் ஞான சம்மந்தம்) மகனை (விமல்) தனது சமூக வாரிசாக வளர்க்கிறார் .
அந்த சமூக வாரிசுக்கு மாப்பிள்ளை முறையில் நண்பன் ஒருவன் (சூரி) . தவிர பெரியவரின் உறவுக்கார நபர்கள் இருவர் ( சுவாமிநாதன், காளி வெங்கட்). எல்லோரும் அந்தப் பெரியவரின் உறவினர்கள்
தாங்கள் ஜாதிப் பெண் வேறு ஜாதிக்காரனை காதலித்தால் அடித்து உதைத்தோ, நம்ப வைத்துக் கழுத்தறுத்தோ அந்த காதலைப் பிரிப்பதுதான் இவர்களது வேலை .
இந்த நிலையில் பெரியவரின் மகள், தேர்த் திருவிழாவில் எதிராக இருக்கும் ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை (விஷ்ணு) காதலிக்கிறாள். அவனது தங்கை (அஞ்சலி) ஒரு வக்கீல் .
இளம் ஜோடியின் காதல் தெரிய வர , பெரியப்பாவுக்கு தெரிந்தால் பிரச்னை என்று சமூக வாரிசே தன்னளவில் கண்டித்து வைக்கிறது.
அது மட்டுமின்றி , அந்த இளைஞனின் தங்கையான வக்கீல் மீது ஜாதி மாறி காதல் கொள்கிறது சமூக வாரிசு.
வேலைக்கு போகக் கூடாது என்று சொல்லும் அப்பாவை மீறி , பெரியவரின் மகள் சென்னைக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்ளப் போகிறாள் .
இதை வைத்து ‘அவள் காதலனோடு ஓடிவிட்டாள் என்று புரளி கிளம்ப , காதலனின் வீட்டுக்கு செல்லும் பெரியவர் , அந்த பையன் மற்றும் வக்கீலின் அப்பாவை (ஜெயப்பிரகாஷ்) அடித்து அவமானப்படுத்துகிறார் .
மகள் ஓடிப் போகவில்லை என்று தெரிந்த பிறகும் , செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்க பெரியவருக்கு மனம் இல்லை .
எனவே அந்த காதல் இளைஞன் மற்றும் வக்கீல் பெண்ணின் தாய்மாமன் (முனீஸ்காந்த் ) தன் தரப்பில் களம் இறங்குகிறான் , இதனால் சமூக வாரிசுக்கும் வக்கீலுக்குமான காதல் ஆட்டம் காண்கிறது
இந்த நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில், பெரியவர் தன் சமூக வாரிசான நாயகனை வேட்பாளராக்க, மறுபக்கம் அந்த ஜாதியினர் வக்கீல் நாயகியை நிறுத்த , அப்புறம் என்ன ஆனது என்பதே மாப்ள சிங்கம் .
கதை இவ்வளவு சீரியசாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். இதை தங்களால் முடிந்தவரை காமெடியாகச் சொல்கிறார்கள்.
தருண்பாலாஜியின் ஒளிப்பதிவு அழகியல் ஏரியாவில் சிறப்பாக வந்திருக்கிறது .கலை இயக்கமும் அப்படியே !
ஒவ்வொரு பாடலையும் லட்டு லட்டாக கொடுத்து இருப்பதோடு பின்னணி இசையிலும் அசத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன் . காமெடியும் இவரது இசையுமே படத்தைக் காப்பற்றும் மிக முக்கிய விஷயங்கள்.
‘எதுவுமே தோணல’ பாடல் வரிகளில் ரசிக்க வைக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி .
விமல் வழக்கம் போல . நத்திங் ஸ்பெஷல் புரோ.
அப்பா டக்கர் படத்தில உடம்பில் கறியேறிக் கடகடத்துக் கிடந்த அஞ்சலி , இந்தப் படத்தில் உடம்பைக் குறைத்து ‘சிக்’கென்று இருக்கிறார் . துடுக்கான நடிப்பு அந்த முகத்தில் அப்படியே ஜொலிக்கிறது .
தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு பற்றிய வசனத்தின் போது மட்டும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ரியாக்ஷன் கொடுத்து புன்னகைக்க வைக்கிறார் .
சூரி, சுவாமிநாதன், காளி வெங்கட் கூட்டணி அவ்வப்போது சிரிப்பு வெடிகளை வெடிப்பதில் வெற்றி பெறுகிறார்கள் .
அதே நேரம் ஒரு சோஷியல் மெசேஜ் படத்தில் நச்சென்று மனதில் தைக்கிற மாதிரி ஒரு வசனம் கூட இல்லாதது அநியாயம்
நாயகன் நண்பர்கள் மத்தியில் வெள்ளைக்கார நண்பன் ஒருவனை விட்டிருப்பது புதுமை . ஆனால் அவன் கேட்கும் கேள்விகள் எல்லாம் சவலைப் பிள்ளைகளாக இருக்கின்றன
ஆண்ட பரம்பரை என்ற வார்த்தைக்கு கிளைமாக்சில் தரும் எதிர்பாராத டுவிஸ்டில் அசத்தலாக ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார் இயக்குனர் ராஜேசேகர்
வழக்கமான கதை .முதல் பாதியில் மிக சாதரணமாக செல்லும் திரைக்கதை. இவைதான் படத்தின் மைனஸ்
எனினும் இடைவேளையில் கொஞ்சம் சூடு பிடித்து இரண்டாம் பகுதியில் காமெடி ஏரியாவில் புஷ்டியாகிறது
மாப்ள சிங்கம் .. கலகல சங்கம்