அக்சஸ் பிலிம் ஃ பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, ஆதி நிக்கி கல்ராணி, ஆனந்த ராஜ் , முனீஸ் காந்த் நடிப்பில்,
ஏ ஆர் கே சரவண் எழுதி இயக்கி இருக்கும் படம் மரகத நாணயம் . கொடுக்கிற நாணயத்துக்கு தரமானதா இந்த மரகதம் ? பார்க்கலாம் கிபி 1050 இல் பல்லவர் காலத்தில் இரும்பொறை என்ற அரசன் தவம் இருந்து பெற்ற ஒரு மரகத நாணயத்தை தன வாளில் பதித்து அதன் சக்தியால் பல நாடுகளை வென்று பேரரசன் ஆனானாம் .
அந்த மரகத நாணயத்தை யாருக்கும் தராமல் தான் சாகும்போது கல்லறையிலேயே வைத்துக் கொண்டான். பின்னாளில் அதை எடுக்க முயலும் எல்லோரையும் அவனின் ஆவி கொள்கிறது .

அதுவும் முதலில் அதை எடுக்க முயன்ற ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு சொந்தமான ஒரு பழைய வேனை ஏற்றி இரும்பொறையின் ஆவி பலரையும் கொல்கிறது . அதுபோல 132 பேர் இறந்து போயிருந்தும் அதை எடுக்க பல கடத்தல் குழுக்கள் முயல்கின்றன. அப்படி ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இரு நண்பர்கள் ( ஆதி, டேனி).
நாயகன் ஒரு தலையாகக் காதலித்த ஒரு பெண் ( நிக்கி கல்ராணி) ஒரு மோசமானவனுக்கு வாழ்க்கைப் படுகிறாள்
மரகத நாணயம் எடுக்க ஒரு மந்திரவாதி (கோட்டா சீனிவாச ராவ்) சில யோசனைகள் சொல்கிறான்
உயிருள்ள மனிதன் அந்த நாணயத்தை தொட்டால் அரசன் ஆவி கொல்லும் என்பதால் செத்துப் போன மனிதர்களின் உடலில்,
ஆவிகளை செலுத்திட்டு அவர்களை உலவ விட்டு அவர்கள் மூலம் நாணயத்தை எடுக்கும் யோசனை அது .
அப்படி ஆவிகளுக்குப் பிணங்களை தேடிப் போகையில் கிடைக்கும் பிணங்களில் , கணவன் கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் அவனது காதலியின் பிணமும் ஒன்று .
இறந்து போன 132 பேரில் நாயகனின் நண்பனின் மாமா ஒருவர் , நாயகனின் செத்துப் போன முதலாளியின் (முனீஸ் காந்த் ) உடல் எடுத்து வருகிறார் .
அவர் ஒவ்வொரு பிணத்துக்கும் அவரது நண்பர்களின் ஆவியை சேர்க்க , காதலி பிணத்தில் ஓர் ஆண் (காளி வெங்கட்) ஆவி புகுந்து கொள்கிறது .
இவர்கள் மரகத நாணயத்தை எடுக்க முயல, பிரபல கடத்தல்காரன் ஒருவனும் (ஆனந்த்ராஜ்) முயல அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த மரகத நாணயம் .
கொஞ்சம் வித்தியாசமான கதை , கேஷுவலான திரைக்கதை , பேய் வேண்டும் ஆனால் வழக்கமான பேயாக இருக்ககே கூடாது . கேரக்டர்களில் சில தலை கீழ் தன்மைகள் ,
அப்புறம் அங்கங்கே காமடி தூவல் என்று திட்டமீட்டு வட்டம் போட்டு இருக்கிறார் இயக்குனர் . அதனால் , ரவுண்டு….. ரவுண்டாவே வந்துருக்கு!
என்னதான் ஆரம்பத்தில் பெயர்கள் சம்பவங்கள் கற்பனை என்று ஆரம்பத்தில் சொன்னாலும் கிபி 350 இல் துவங்கி 850 இல் முடிந்து போன பல்லவ சாம்ராஜ்யம் கி பி 1050 இல் இருந்ததாக
பல்லவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் முந்தைய சேர அரசன் இரும்பொறையை ஏதோ டீ க்கு தொட்டுக் கொள்ளும் பொறை மாதிரி பல்லவ மன்னனுக்கு அப்புறம் வந்த சிற்றரசனாக
எல்லாம் சொல்லாமல் ஒரு ஒழுங்கு இருந்திருக்கலாம்
மற்றபடி ஆங்காங்கே நகைசுசுவை உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்தப் படம் நன்றாக ஓடினால் அதற்கு வித்தியாசமான பின்னணியில் கேஷுவல் காமெடி என்ற விஷயம் மட்டுமே காரணமாக இருக்கும்
கதாநாயகி உட்பட எல்லோரும் பிணங்கள் என்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை .
கடைசியில் ஏதாவது வித்தை காட்டி கதாநாயகியை மட்டுமாவது இரும்பொறையின் ‘அருளால்’ மீட்டுக் கொடுத்து இருந்தால் ஒரு சுவாரஸ்யம் மிஞ்சி இருக்கும் .
இரும்பொறையையே பல்லவ அரசனுக்கு பின் என்று சொன்ன பிறகு இது மட்டும் கூடாதா என்ன ?
மிக முக்கியமான விஷயம் . படம் முழுக்க பேசப்படும் இரும்பொறையை கிளைமாக்ஸ் சமயத்திலாவது ஒரு காட்சியில் விஷுவலாக களம் இருக்க வேண்டாமா?
இது என்ன யதார்த்த சினிமாவா ? மேஜிக்கல் சினிமாவுக்கு அந்த மாதிரி அதிரடி விஷயம் அவசியம் அல்லவா ?
இதெல்லாம் ஒரு ஸ்கிரிப்டின் முழுமைக்கும் கமர்ஷியல் வெற்றிக்கும் வழிகள் .
கொஞ்சம் ட்ரிம்மிங் பண்ணி இருக்கலாம்
எனினும் பாதிக்கு பாதி பழுதில்லை . எனவே நாணயம்.. செல்லும் !