ஜூன் பதினாறாம் தேதி வெளியான படங்களிலேயே நல்ல பெயர் பெற்ற படம்,
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்க,
அதுவும் இந்த வாரம் சிம்பு நடித்த படம் பெரும் தோல்வியைத் தழுவிய நிலையில் மரகத நாணயம் படத்துக்கு மவுசு கூடி , திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமானது
இதை ஒட்டியும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கவும் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு
”உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன கதை. ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் ஆதி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்ற நான் யோசித்தேன்.
அவர் கதை மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஒரு ஆண் குரலில் பேசும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார் நிக்கி கல்ராணி.
நல்ல கதையை தேர்ந்தெடுத்து , சரியான பட்ஜெட் போட்டு, பொருத்தமான நடிகர்களை செலவு பார்க்காமல் பயன்படுத்தி படத்தை உருவாக்கினோம் .
அதனால் ரசிகர்கள் மீடியாக்களின் ஆதரவு கிடைத்தது . படமும் வென்றது . அடுத்து இரண்டு படங்களை தயாரித்துக் கொண்டு இருக்கிறேன் .
அக்சஸ் பிலிம் பேக்டரி படம் என்றால் வித்தியாசமான — ரசிக்கத்தகுந்த — நம்பி பார்க்கிற படங்களாகத்தான் இருக்கும் என்ற பெயரே எங்கள் நோக்கம் . அதை சாதிப்போம் ” என்றார் தயாரிப்பாளர் டில்லிபாபு.
” என் அப்பா இறந்த மூன்றாவது நாளில் இந்த கதையை கேட்டேன். இறந்தவர்கள் ஆவியாக வந்து நம்மோடு பேசுவார்கள் என்று சரவண் கதை சொன்னார்.
செண்டிமெண்டாக எனக்கு நெருக்கமான படம் இந்த மரகத நாணயம். இந்த வெற்றி விழாவிலும் என் அப்பா இங்கே அமர்ந்து என்னை பார்த்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன்” என்றார் நடிகர் டேனியல்.
ஆனந்த்ராஜ் தன் பேச்சில் “நாற்பது வருடங்கள் நடித்துவிட்டேன்.. நாட்டாமையின் தெலுங்கு பதிப்பில் ஆதியின் அப்பா படத்தில் நடித்தேன்… இன்று ஆதியுடன் நடிக்கிறேன்.
இன்னும் இருபது வருடங்கள் நடிக்க ஆசை.பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தாலும் இன்னும் ஒரு சொட்டு ஆல்கஹால் கூட என் நாக்கில் பட்டது கிடையாது என்பது மட்டுமல்ல,
சிகரெட் கூட குடிப்பதில்லை.ஏனென்றால் ஆரோக்கியம் முக்கியம் ” என்றார் ஆனந்த்ராஜ்.
” இந்த மாதிரி கலகலப்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இதுவரை நான் கலந்துகொண்டது இல்லை… சூட்டிங்கில் இன்னும் அதிக கலகலப்பு இருக்கும்…
அது தான் படத்திலும் பிரதிபலித்து அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள் ..” என்றார் நிக்கி கல்ராணி.
ஆதி தனது பேச்சில் “நான் இல்லாமல் இருந்தாலும் இதே வெற்றியை படம் பெற்றிருக்கும்.. ஆனால், முனீஷ்காந்த், டேனியல் போன்ற கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்காமல் போயிருந்தால்,
இந்தப் படம் வெற்றிபெற்றிருக்காது… அவர்களிடன் திரையைப் பகிர்ந்துகொள்வது என்று முடிவுசெய்து விட்டுத்தான் சூட்டிங்குக்கேப் போனேன்..” என்றார் .
“தயாரிப்பாளர் டில்லி பாபு மிகவும் பிஸியான தொழிலதிபர். அவ்வளவு பிஸியிலும் நிறைய பேரிடம் கதை கேட்டு, அவற்றை ஆராய்ந்து, கதையை நம்பி என்ன வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் முதன் முதலில் கதை சொன்னது ஆதியிடம். கதை மீது நம்பிக்கை வைத்து இன்று வரை என்னோடு பயணித்து வருபவர்.
ஒரு ஹீரோவாக இருந்தாலும் எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்க , நாயகன் ஆதி கொடுத்த ஒத்துழைப்பே படத்தின் வெற்றிக்கு காரணம் .
ஆனால் எல்லோரையும் தாண்டி நிக்கி கல்ராணி பேர் வாங்கி விட்டார் . படம் பார்த்த எல்லாரும் பாராட்டுவது நிக்கியைதான்
படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு திபு நினன் தாமஸின் இசை தான். படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது அவரின் இசை தான். சின்ன பட்ஜெட்டிலும் சிறப்பாக உழைத்த படக்குழுவால்தான்,
இந்த வெற்றி சாத்தியமானது. ஹாலிவுட் படங்களுக்கு சிஜி செய்யும் ஃபேண்டம் நிறுவனம் இந்த படத்திற்கு சிஜி செய்தது பெரிய பலம்” என்றார் இயக்குனர் சரவண்.