வெண்ணிலா புரடக்ஷன்ஸ் சார்பில் சுசீந்திரன் தயாரித்து கதை திரைக்கதை எழுதி ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க, , இயக்குனர் இமயம் பாரதிராஜா, புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷனா மற்றும் அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில் , பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கி இருக்கும் படம்.
அம்மா அப்பா இறந்த முன்பே இறந்து விட்ட நிலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் ஒரு கிராமத்து மாணவிக்கு ( ரக்ஷனா) அவளது தாத்தாதான் ( பாரதிராஜா) உலகம் . தாய்மாமன் சுசீந்திரன் மோசமானவன் .
பள்ளியில் படிக்கும் சக மாணவன் ( ஷ்யாம் செல்வன்) மீது படிப்பில் வரும் போட்டி பொறாமை, ஒரு நிலையில் காதலாகிறது . பள்ளி வாழ்க்கை முடிய, சாதிய பொருளாதார ஏற்றத் தாழ்வு காதலைப் பிரிக்குமோ என அவள் அஞ்ச , பையனின் வீட்டுக்கே போய்ப் பேசும் தாத்தா , கல்லூரி படிப்பு முடியும் வரை பார்க்கவோ பேசிக் கொள்ளவோ கூடாது என்று கட்டளை போட்டு, பேத்திக்கு ஒரு செல்போனும் வாங்கிக் கொடுக்கிறார்.
அவளும் தனக்கு கல்லூரியில் வரும் காதல்களை எல்லாம் நிராகரித்துக் காத்துக் கிடக்க, பையனின் அப்பாவுக்குக் கேன்சர் வந்து அவனது படிப்பு பாதியில் நிற்க, வேலைக்காக அவன் துபாய் போகும் நிலையில், காதலியை ஒரு முறை பார்த்து விட்டுப் போக முயல,
அவன் பெட்டி படுக்கையோடு நிற்பதைப் பார்த்து, பெண்ணை இழுத்துக் கொண்டு ஓட வந்து விட்டான் என்று தாய்மாமன் நினைக்க, குரோதம் வெடிக்க, அதற்கு துரோகமும் துணை போக , நடந்தது என்ன என்பதே படம்.
மாமன்னன் படத்தின் கிணற்றில் கல் எறிந்து கொல்லும் காட்சியும், லவ் டுடே படத்தில் சத்யராஜ் செல்போன் நிபந்தனை போடும் காட்சியும் , அண்மையில் ரஞ்சித்திய படங்களின் எண்ணிக்கையும் மனதில் கிடந்தது நெளிய ,
ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையை காரில் போகிறவன் வாங்குகிற கதையாக , ஜஸ்ட் லைக் தட் எழுதப்பட்ட கதை, அதற்கு வழக்கமான திரைக்கதை, ஒரு சில இடங்களில் மட்டுமே கவனிக்க வைக்கும் செல்லா செல்லத்தின் வசனம் ( மார்கழி திங்கள் என்பது இலக்கணப் பிழை . மார்கழித் திங்கள் என்பதே சரி. சொல்லக் கூடாதா வசன- கர்த்தாவே?) என்று எழுதப்பட்ட படம் .
அரை கிரவுண்ட் மனையில் அரண்மனை கட்ட முடியாது . அதைப் புரிந்து கொண்டு, கிடைத்த இடத்தில் கட்டிடம் எழுப்பி இயக்கி இருக்கிறார் மனோஜ் . பாராட்டுகள் .
ஆனால் அவரும் கோட்டை விட்ட இடம் ஒன்று உண்டு. ஒரு குறிப்பிட்ட காட்சியில் நாயகியின் தோழியாக் வரும் கதாபாத்திரத்துக்கும் நடிப்புக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல் விட்டு இருக்கிறார் . எனினும் அதற்கும் காரணம், அந்தத் தோழி கதபாத்திர வடிவமைப்பில் உள்ள குழப்பமும் சிக்கலும்தான்.
படத்தின் பெரும் பலம் நாயகி ரக்ஷனாவின் கதாபாத்திரப் பொருத்தமும் , தோற்றமும் நடிப்பும் ! அருமை . இன்னும் ரெண்டு வருடத்துக்கு லிப்ஸ்டிக் , ஆபாசக் கவர்ச்சி, குத்தாட்டம் என்று இறங்காமல் இருந்தால் , சினிமாவில் நல்ல பாதை அமையலாம்.
பாரதிராஜா முதிர்ந்து பழுத்த முதியவராக பொருத்தம் . நாயகன் ஆர்வமுடன் நடிக்கிறார் . வாழ்த்துகள்.
தானே எழுதிய வசனத்தையே மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல பேசி விட்டுப் போகிறார் சுசீந்திரன்..
படத்தில் நடிகர் அப்புக்குட்டி போலவே ஒருவர் வருகிறார் .
ஆளரவமற்ற அமைதியான கிராமம், அதை அப்படியே உணரச் செய்யும் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு, ஜஸ்ட் லைக் தட் நன்றாகவே போட்டிருக்கிற இளையராஜாவின் பாடல்கள் மட்டும் பின்னணி இசை … இவை பேராறுதல்கள்.
வன்முறைக்குப் பதில் என்பது வன்முறையோ தன்னை மாய்த்துக் கொள்ளுவதோ இல்லை. அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக ஆதரவாக மாறுதல்தான் .அதன்மூலம் வன்முறை செய்தோருக்கு தண்டனை தருவதுதான்.
அந்தப் புரிதலும் பொறுப்பும் இல்லாத கிளைமாக்ஸ்.. இல்லை இல்லை கிளைமின்ஸ் . !
இத்தனைக் குறைகள் இருந்தும் ஜெயிலர், லியோ என்ற ரத்தச் சகதிகளுக்கு மத்தியில்.. ரக்ஷனாவின் – ஓவியர் மாருதி பாணி – முகம் இன்னும் மனக்கண்ணில் உலா வருவதால்,
மதி கொஞ்சுகிறது…. இந்த மார்கழி(த்) திங்கள் .