மார்க் ஆண்டனி @ விமர்சனம்

மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிக்க, விஷால், எஸ் ஜே சூர்யா, செல்வா ராகவன், சுனில், ரீத்து வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் . 

விஞ்ஞானி ஒருவர் (செல்வராகவன்), இறந்த காலத்தில் இருந்த மனிதர்களுடன் பேசும்  அதிசய டெலிபோனைக் கண்டு பிடிக்கிறார் . அதை ஒரு கூட்டம் விலை பேச , அவர் மறுக்க, அவர் கொல்லப்படுகிறார். அந்த அதிசய டெலிபோன் ஒரு பழைய காருக்குள் சிக்கிக் கொள்கிறது. 

அந்நாளைய பிரபல தாதா  ஆண்டனிக்கு ( விஷால் 1)  நெருங்கிய நண்பன் ஒருவன் ( எஸ் ஜே சூர்யா 1) .  . ஒரு நிலையில் ஆண்டனி தன் மனைவியையே ( அபிநயா) கொன்றதாக நம்பும் ஆண்டனியின் மகன் சிறுவன் மார்க்,  அப்பாவை வெறுக்கிறான். இந்த நிலையில்  ஆண்டனியின் தொழில் எதிரி ஒருவன் ( சுனில்) ஆண்டனியைக் கொன்ற செய்தி வருகிறது , 

ஆண்டனியின் நண்பன் ( எஸ் ஜே சூர்யா 1) தாதாவாகிறான். அவனின் விசுவாசியாக ஒரு கார் மெக்கானிக் ஆக இருக்கிறான், ஆண்டனியின் மகன் மார்க் ( விஷால் 2) . இப்போதைய தாதாவின் மகனுக்கு (எஸ் ஜே சூர்யா 2)  விசுவாசமுள்ள நண்பனாகவும்  இருக்கிறான் மார்க்.  தான் காதலிக்கும் பெண்ணை  ( ரீத்து வர்மா) புதிய தாதாவின் மகன்  காதலிப்பது தெரிந்து காதலையே விட்டுக் கொடுக்க நினைக்கும்  அளவுக்கு மார்க் விசுவாசி . 

இந்த நிலையில் அந்த அதிசய டெலிபோன் மார்க் கையில் கிடைக்க    அதில் பேசுவதன் மூலம் அப்பா  நல்லவர் என்பதையும் அப்பா அம்மா இருவரையும் கொன்றது அப்பாவின் நண்பர்தான் ( எஸ் ஜே சூர்யா 1) என்பதையும் அறிகிறான் . 

 அதிசய போனில் பேசுவதன் மூலம் அப்பாவுக்கு போன் செய்து ,  நண்பன்  கொல்லப் போவதை சொல்ல , அப்பா தப்பிக்கிறார். அப்பாவின் துரோக நண்பன் சாகிறான் 

ஆக இப்போது உயிரோடு ஆண்டனி தாதாவாக வர, , மார்க் செல்வச் செழிப்புள்ள மகனாக இருக்க, துரோக நண்பனின் மகன் (எஸ் ஜே சூர்யா 2)  ஆண்டனியின் விசுவாச வேலைக்காரனாக மெக்கானிக் ஆக இருக்கிறான். ஆனால் மார்க்கின் காதலி மெக்கானிக்கைக் காதலிக்கிறாள். 

மார்க்கின் நண்பனுக்கு ( எஸ் ஜே சூர்யா 2) அதிசய போன் பற்றி தெரிய வர, அதில் பேசி மீண்டும் அப்பாவிடம் சொல்லி ஆண்டனியைக் கொல்ல வைத்து அப்பாவைக் காப்பாற்றி மீண்டும் அவரை தாதாவாக்கி , தான் தாதாவின் செல்வச் செழிப்புள்ள மகனாக ஆகி, மார்க்கையும் கொல்ல முயல… நடந்தது என்ன என்பதே அதில் உள்ள சுவாரஸ்யமே மார்க் ஆண்டனி . 

எம் ஜி ஆரின் குடியிருந்த கோயில் படத்தை டைம் மெஷினில் ஏற்றுங்கள் . அண்ணன் தம்பிகளான இரட்டை வேட எம்ஜி ஆரை,  அப்பா மகன் என்று இரட்டை வேடம் ஆக்குங்கள். நம்பியாருக்கு மகனாக  நம்பியாரை போட்டு அதையும் இரட்டை வேடம் ஆக்குங்கள். செத்துப் போன அப்பா எம்ஜிஆரை டைம் மெஷின் மூலம் உயிர்ப்பித்து கொண்டு வாருங்கள்  அப்பா எம்ஜி ஆரும் மகன் எம்ஜி ஆரும் அப்பா நம்பியாருடனும் மகன் நம்பியாருடனும் மோதட்டும். அம்புட்டுதேன். மார்க் ஆண்டனி ரெடி. 

ஆனால் இதை வைத்துக் கொண்டு அதிரடி சரவெடி கலகல லகலக ரகளை  மசாலா பொறி பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் . 

பல விதமான கெட்டப்புகளில் வண்ண வண்ண  உடைகளில் வருகிறார் விஷால். பல மாடுலேஷன்களில் பேசுகிறார் பேசுகிறார். வழக்கம் போல சண்டைக் காட்சிகளில் பின்னிப் பெடல் எடுக்கிறார் . 

போன பத்தியின் கடைசிவரை ,’சத்தம்  அதிகம் என்றாலும் விதவிதமான எக்ஸ்பிரசன்களோடு எல்லா காட்சிகளிலும் பின்னிப் பெடல் எடுக்கிறார் ” என்று போட்டால் அது எஸ் ஜே சூர்யாவுக்கு என்று அறிக .  

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு , ஆர் கே விஜய் முருகனின்   கலை இயக்கம் இரண்டும் சேர்ந்து ரெட்ராஸ்பெக்டிவ் எபக்டில் சும்மா ஜமாய்த்து இருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பும் அருமை. 

ஜி வி பிரகாஷ் குமாரின் இசை  குத்தாட்டம் கும்மாளம் போட வைக்கிறது . 

சில்க் ஸ்மிதா , நினைத்ததை முடிப்பவன் படம்,  இப்போது இல்லாமல் போய்விட்ட  டபுள்  டெக்கர் பஸ் என்று பல அசத்தல் ஐடியாக்கள்  . சூப்பர் . சூப்பர் 

எஸ் ஜே சூர்யா  காமெடியும் செய்கிறார் . 

டைம் டிராவல் படம் என்றால் ஒய்ஜி மகேந்திரனும் இருக்கணும் என்பதுதான்,  அனேகமாக தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செண்டிமெண்ட் போல . 

திரைக்கதையில் வேறு என்ன செய்திருக்க்கலாம்?

அதிசய போன் மூலம் அப்பாவைக் காப்பாற்றி துரோகியைக் கொன்று தாதாவின் மகனாக காதலியைப் பார்க்கப் போனால்…..அவள் வெறுக்கிறாள். காரணம் அவள்  காதலித்தது மெக்கானிக்கை. அல்லவா? 

இந்த நிலையில் திரைக்கதையின் ஹேண்டிலைத் திருப்பி….  காதலியைக்  காப்பாற்ற,  மீண்டும் நாயகனே பழைய நிலைமையை அதிசய டெலிபோன் மூலம் கொண்டு வந்தான்… அப்பா (ஆண்டனி) இறந்தது இறந்ததாகவே மாறியது ….. ஏனெனில் இப்போது மெக்கானிக் ஆக இருக்கும் (எஸ் ஜே சூர்யா 2) நல்லவன் இல்லை… 

எனவே  உண்மை தெரிந்த நாயகன் ( மார்க்) காதலியையும் காப்பாற்றி அப்பாவைக் கொன்ற துரோகியையும் ( எஸ் ஜே சூர்யா 1)  அவனது மகனையும் ( எஸ் ஜே சூர்யா 2) பழிவாங்கியதாக வைத்திருந்தால், இன்னும் தீவிரம், செண்டிமெண்ட் இவையும் சேர்ந்தே கிடைத்து இருக்கும் .

மிஸ்  பண்ணி விட்டார்கள்.  சும்மா தழும்பு மறையுது பார்  என்று மேஜிக் காட்டி விட்டு விட்டார்கள் 

எனினும் இப்போதும் மார்க் ஆண்டனி பக்கா ரகளையான மசாலா மாஸ் படமாகவே இருக்கிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *