ராஜபாளையம் மார்க்கெட்டில் இருக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளி மருது (விஷால்) . அவனது பாசக்கார அப்பத்தா மாரியம்மா (கொலப்புள்ளி லீலா ). நண்பன் கொக்கரக்கோ (சூரி)
மருதுக்கும் பாக்கிய லட்சுமி என்ற பெண்ணுக்கும் (ஸ்ரீதிவ்யா) எதிர்பாராத மோதல் வருகிறது . அதன் முடிவில் ‘அந்தப் பெண்ணை மருது லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார் அப்பத்தா .
அதனால் பாக்கிய லட்சுமியை காதலிக்க ஆரம்பிக்கிறான் மருது.
பாக்கியலட்சுமியின் அப்பா சங்கர பாண்டியன் (மாரிமுத்து) ஒரு வக்கீல் .
அவரது மனைவி சிலம்பம் மாரியம்மாவை (ஆதிரா பாண்டி லட்சுமி) கொலை செய்த காட்டுத்தனமான தாதாவும் அரசியல் ஆர்வம் உள்ளவனுமான ரோலக்ஸ் பாண்டியனுக்கு (ஆர்.கே. சுரேஷ் ) ,
தண்டனை வாங்கிக் கொடுக்க வக்கீல் முயல்கிறார் .
ரோலக்ஸ் பாண்டியன் எம் எம் ஏ பதவிக்காக பயில்வான் என்ற சீனியர் அரசியல்வாதியை (ராதாரவி) நம்பி இருக்கிறான் .
அதே நேரத்தில் ரோலக்ஸ் பாண்டியனின் அக்கா கணவனுக்கும் (அருள்தாஸ் ) பயில்வானுக்கும் பதவி பங்கீடு விசயத்தில் பகை .
சிலம்பம் மாரியம்மா கொல்லப்பட்ட வழக்குக்காக வக்கீலும் பாக்ய லட்சுமியும் கோர்ட்டுக்கு வர, அவர்களை ரோலக்ஸ் பாண்டியன் ஆட்கள் கொலை செய்ய முயல ,
அப்பாவும் மகளும் மருதுவிடம் தஞ்சம் அடைய ,
ரோலக்ஸ் பாண்டியனுக்கும் மருதுக்கும் மோதல் ஏற்பட்டு தீவிரமாக வலுக்கிறது .
அதன் விளைவு என்ன ஆனது என்பதே மருது .
பாட்டி பேரன் செண்டிமெண்டை வைத்து படத்தைக் கொண்டு போகிறார் இயக்குனர் முத்தையா .
நீண்ட வக்கணையான விஸ்தாரமான எக்குத்தப்பும் எகனை மோகனையும் வசனங்கள் படம் முழுக்க வருகின்றன . அவற்றில் பஞ்ச் வசனங்களும் இருக்கின்றன . பஞ்சு வசனங்களும் இருக்கின்றன .
மதுரையில் திமுககார்களால் வெட்டிக் கொல்லப்பட்ட கம்யூனிஸ்டு கவுன்சிலர் லீலாவதி விவகாரத்தை சிலம்பம் மாரியம்மாள் கதா பாத்திரத்துக்கு கொடுத்து இருக்கிறார்கள்
பாக்ய லட்சுமியை காதலிக்க வேண்டும் என்பதற்கு அப்பத்தா சொல்லும் காரணம், அம்மத்தாவை அப்பத்தா என்று மருது அழைப்பதற்கான காரணம் , மருதுவின் பெயர்க் காரணம்
–போன்ற சில காட்சிகள் பாராட்ட வைக்கின்றன .
நேட்டிவிட்டியை சூழல்களிலும் வசனத்திலும் கொண்டு வருகிறார் முத்தையா .
வேல்ராஜின் ஒளிப்பதிவு, ஃபிரேம்கள் , ஷாட்கள் படத்துக்கு ஆகப் பெரும்பலம் குறிப்பாக ஏரியல் ஷாட்கள், ஸ்லோ மோஷன் ஷாட்கள்,
படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன், ஜிகினா இல்லாத யதார்த்த ஒளிப்பதிவு ஆகியவை அருமை .
பொருத்தமான கெட்டப், உடல் மொழிகள் , புழுதியில் புரளல் என்று மருது கேரக்டருக்கு உழைத்துள்ளார் விஷால், சண்டைக் காட்சிகளில் ஒரு புள்ளி அதிகமாகவே பட்டையைக் கிளப்பி இருக்கிறார் .
நடிகர் சங்க வெற்றியின் ‘கெத்’தை அங்கங்கே வசனங்களில் காட்டிக் கொள்கிறார்
வில்லன் ரோலக்ஸ் பாண்டியாக வரும் ஆர்.கே. சுரேஷ் தோற்றம், ஷார்ப்பான பார்வை, அழுத்தமான குரல் , என்று அராஜக வில்லனாக மிரட்டுகிறார் .
கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை போட்டு இருக்கிறார் .
படம் முழுக்க பல நகைச்சுவைப் பட்டாசுகளை கொளுத்திப் போடும் சூரி , கிளைமாக்ஸ் காட்சியில் சோகமாகவும் நடிக்கிறார்
பாக்ய லட்சுமியாக வரும் ஸ்ரீதிவ்யாவின் தோற்றப் பொருத்தம் சிறப்பு என்றாலும், ராஜபாளையம் திருவிழாவில் தொலைந்து போன விசாகப்பட்டினத்துப் பாப்பா மாதிரியே தயங்கி தயங்கி நடிக்கிறார் எனி பிராப்ளம் திவி ?
அப்பத்தாவாக வரும் மலையாள ஆயா, கொல்லப்புள்ளி லீலா செய்யும் இம்சைதான் தாங்கல .
படம் முழுக்க வசனத்தை ஒழுங்காகப் பேசாமல் போதுமான உதட்டசைவு தராமல் டப்பிங் பேசியவரின் டங்குவாரை அறுத்து இருக்கிறார் .
பின்பாதியில் பர்பார்மன்ஸ் பரவாயில்லை என்றாலும் அவரது செயற்கையான நடிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை .
ஒரு நிலையில் டப்பிங் பேசியவரே மலையாள வாசனையில் பேச வேண்டிய துர்பாக்கிய நிலையை உருவாக்கி விடுகிறார் .
என்ன பங்காளிகளா …ராஜ பாளையம் மாரியம்மா கேரக்டரில் நடிக்க ஒரு தமிழ்நாட்டு அப்பத்தா கூடவா கிடைக்கல ? என்ன கொடுமை பங்குகளா ….
சிலம்பம் மாரியம்மாவாக வரும் கூத்துப்பட்டறை ஆதிரா பாண்டி லட்சுமியின் முகம் வித்தியாமாக இருக்கிறது . பர்ஃபக்டாக நடிப்பது ஒகே .
ஆனால் நடிப்பில் இன்னும் கொஞ்சம் இலகுத்தன்மை வேண்டும் ஆதிரா ஏலியன் மாதிரி பிஹேவ் பண்ணக் கூடாது
பயில்வான் கேரக்டரில் ராதாரவி ஜஸ்ட் லைக் தட் கம்பீரம் காட்டுகிறார் .
விஷாலின் அப்பத்தாவிடம் ராதாரவியைக் காட்டி ஒருவர் “இவர் கிட்ட கேட்டா, உன் பையனுக்கு ஏதாவது பதவி வாங்கித் தருவார் ” என்று சொல்ல
அதற்கு அந்த அப்பத்தா “என் பையனுக்கு பதவி வாங்கித் தர இவரு யாரு ?
அவன் நினைச்சான்னா எந்தப் பதவியையும் யாருகிட்ட இருந்தும் எப்படி எடுத்துக்கணுமோ அப்படி எடுத்துக்குவான் ” என்று நீட்டி முழக்கிப் பேசுகிறது .
ராதாரவி இருந்த நடிகர் சங்க செயலாளர் பதவியில் இப்போது விஷால் இருப்பதை நினைவில் கொண்டால் இந்த வசனத்தின் கல கல பிளஸ் லக லக எஃபெக்ட் புரியும் .
அனேகமாக ராதாரவி நடித்து விட்டுப் போன பிறகு அந்த வசனத்தை எடுத்து இருப்பார்கள் போல . ஹ ஹா ஹா!
ரகசியமாக ஜன்னி வரவைத்துக் கொலை செய்வது எப்படி என்று, ஒரு பகீர் பாட்டி வைத்தியம் சொல்கிறார்கள் , வயிறு கலங்குது .
நாடு இருக்கிற நிலையில் எந்த பயபுள்ளையாவது யாருக்காவது டிரை பண்ணாம இருக்கணும் சாமி !
இமான் இசையில் அக்கா பெத்த ஜட்கா வண்டி பாடல் மட்டும் கொஞ்சம் உற்சாகம் ஊட்டுகிறது பின்னணி இசை ஒகே ரகம்தான்
‘
பால் தயிரா ஆவதற்குள், பத்து முறை சேர்ந்திருப்போம் ” போன்ற வரிகளில் சபாஷ் போட வைக்கிறார் வைரமுத்து
அனல் அரசுவின் சண்டை அமைப்பு பொறி பறக்க வைக்கிறது .
மொத்தத்தில்
மருது …. மஞ்சள் , பச்சை மிளகாய் சேர்த்து மணக்க மணக்க தாளித்த, பழைய சோறு !