விஜய ராகவேந்திரா தயாரிப்பில் மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, கவுரவ், லக்ஷ்மி தேவி, ஹரிணி உள்ளிட்ட பலர் நடிக்க, லக்ஷ்மன் குமார் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் … மசாலா படம் ! (என்னது? படத்து பேரை சொல்லணுமா? பேரே அதாங்க!)
“தலைப்புக்கு ஏற்ற மாதிரி படத்தில் எல்லா சுவையும் அளவோடு இருக்கும். குழந்தைகளோடு குடும்பத்தோடு சுவைக்கலாம் ” என்கிறார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா .
தகவல் தொழில்நுட்ப உலகத்தில் சவாரி செய்யும் இன்றைய இளைய சமுதாயத்தின் சிந்தனை , சினிமாவின் மாபெரும் சக்தி , சமூக வலை தளங்களைப் பயன்படுத்தி படங்களில் குற்றம் கண்டுபிடித்தே லைக் வாங்கும் பாஸ்ட் புட் அகில உலக விமர்சகர்கள்.. இவர்களை பற்றிய படமாம் இது
“என்ன சார் சொல்றீங்க ?” என்று கேட்டால் ” ஆமா சார்” என்கிறார் இயக்குனர் .
” உலகத்தில் எந்த விசயமாக இருந்தாலும் ஒரு மனிதனை உயர்த்தி வைத்தால்தான் அவன் அதை விரும்புவான் . ரசிப்பான். ஆனால் மேஜிக் கலையில் மட்டும் பாருங்கள்…. தன்னை ஏமாற்றி முட்டாள் ஆக்கினால்தான் விரும்புவான் . காரணம் அந்தக் கலையை அவன் அப்படி நேசிக்கிறான் .
அது சினிமாவுக்கும் பொருந்தும் . அதனால்தான் சினிமாவை அவன் அவ்வளவு நேசிக்கிறான். அதில் இருந்து நாட்டை ஆள தலைவர்களை தேர்ந்தெடுக்கிறான் . அந்தக் கலையை நியாயமாக விமர்சிப்பது தவறு இல்லை . ஆனால் குறை சொல்வதற்காகவே விமர்சிப்பதன் ரியாக்ஷனை இந்தப் படம் பதிவு செய்யும் ” என்றவரிடம் …
”படத்தில் என்ன கதை சொல்றீங்க ?” என்று கவனமாகவே கேட்க வேண்டி இருந்தது .
“ஒரு ரவுடி, ஒரு செண்டிமெண்ட் பார்ட்டி , ஒரு ரொமான்ஸ் பையன், ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட் பொண்ணு இவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை . நான்கு பெரும் ரசிகனின் பார்வை கோணத்தில் இணைக்கப்படுவார்கள் . ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் படத்தில் சந்திக்கவே மாட்டார்கள் ” என்றார் .
அதற்கேற்ப மஞ்சள் கிழங்கு மூட்டை மேல் ரொமான்ஸ் பையன் , கம்பு மூட்டை மேல் செண்டிமெண்ட் பார்ட்டி, மிளகா மூட்டை மேல் ரவுடியின் போட்டோ , கடுகு மூட்டை மேல் போட்டோ ஜர்னலிஸ்ட் போட்டோ என்று போட்டு ஒரு டிசைன் செய்து இருந்தார்கள்
ஏதோ வித்தியாசமாக முயற்சி பண்ணி இருக்காங்க போல .
வாழ்த்துகள் !