அது ஒரு வெள்ளிக் கிழமை. புதிய படம் ஒன்று ரிலீஸ் ஆகிறது . இணைய தளங்களில் விமர்சனம் செய்யும் விமர்சகர்கள், படத்தின் முதல் காட்சியை பார்த்து — இடைவேளையிலேயே படம் மொக்கை என்று மெசேஜ் அனுப்பி ஸ்டேட்டஸ் போட்டு , சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து அடித்துத் துவைக்கின்றனர் .
அதிவேக எதிர் விமர்சனத்தால், டிக்கட் வாங்கப் போனவர்கள் கூட வாங்காமல் திரும்பி விடுகின்றனர் . படத்தின் வசூல் பாதிக்கிறது .
இப்படி எதிர் விமர்சனம் செய்வதில் வல்லவரான ஓர் இளைஞன் டூவீலர் போகும்போது வாகனம் ஒன்று அவனை அடித்து வீழ்த்தி விட்டு போகிறது . சம்மந்தப்பட்ட படத்தின் புரடியூசர்தான் (வெங்கட்) கொலை முயற்சியாக அந்த விபத்தை ஏற்படுத்தினார் என்று கருத்து பரவுகிறது . இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்று இரண்டு தரப்பையும் விவாதத்துக்கு அழைக்கிறது .
குப்பையான மசாலா படங்களை எடுத்து தமிழ் சினிமாவை அழிப்பதாக விமர்சகர்கள் அணி தயாரிப்பாளரைக் குற்றம் சாட்ட , ”மக்கள் விரும்பும் படம்தான் நல்ல படம்” என்று அவர் கூற விவாதம் வலுக்கிறது .
ஒரு நிலையில் கொந்தளிக்கும் புரடியூசர் “உங்களுக்கு எல்லாம் கலாய்க்கிறத தவிர வேற என்ன தெரியும் ? போட்ட காசு திரும்ப வர்ற மாதிரி ஒரு கமர்ஷியல் ஸ்கிரிப்ட் சொல்ல முடியுமா? சொன்னா நானே அதை படமா எடுத்து, உங்களுக்கு வாய்ப்புத் தர்றேன்.முடிஞ்சா பண்ணிக் காட்டுங்கடா ” என்று சவால் விடுகிறார் .
சவாலை ஏற்று அவர்கள் கதை எழுத ஆரம்பிக்க, அப்போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என்பது புரிகிறது .
இந்த நிலையில் தொலைக்காட்சி விவாதத்தில் மக்கள் கருத்து பகுதியில் தங்கள் தரப்புக்கு எதிராகவும் மசாலா படங்களுக்கு ஆதரவாகவும் கருத்து சொன்ன மணி என்ற (மிர்ச்சி சிவா) மார்க்கெட்டிங் ஏஜென்ட்டை விமர்சன அணியினர் பார்க்கிறார்கள்.
அவனுக்கு தெரியாமலே அவனை பின்பற்றி அவனது ரசனைகளை கவனித்து அதற்கேற்ப கதை எழுத முடிவு செய்கிறார்கள் .
அந்த முயற்சியின்போக்கில், தான் விரும்பும் பெண்ணை ஒரு சினிமா ஹீரோ போல இம்ப்ரெஸ் செய்ய முயலும் கிரிஷ் என்ற (கௌரவ்) ஓர் பணக்கார இளைஞனையும் கவனிக்கிறார்கள் .
அதே போக்கில், சினிமாவில் வருவது போல பட்டப் பகலில் ஒரு ஆளை சினிமா தியேட்டருக்குள் வைத்து வெட்டிக் கொல்லும் அமுதன் என்ற (பாபி சிம்ஹா ) ரவுடியையும் பார்க்கிறார்கள் .
மூவரையும் இணைத்து கதை செய்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி அறிவது ?
தியா என்ற பத்திரிகைப் புகைப்படக்காரரை (லக்ஷ்மி தேவி ) மூன்று பேரோடும் பழக விட்டு அவர்களின் மன உணர்வுகளை முழுக்க அறிந்து கொள்ள முடிவு செய்கிறார்கள் .
தியாவும் அப்படியே செய்கிறாள்
அவளுக்கு ஏற்படும் நிகழ்வுகள் என்னென்ன ? அவள் என்ன முடிவு எடுத்தாள்? படமெடுக்கும் விமர்சகர்கள் ஒரு நல்ல மசாலா கதையை எழுதி , சவால் விட்ட தயாரிப்பாளரிடம் படம் பெற்றார்களா ? படம் வந்ததா ? வெற்றி பெற்றதா ?
— என்பதே இந்த மசாலா படம் .
தமிழ் சினிமா வளர்ந்த கதை ஜஸ்ட் லைக் தட் ஒரு பறவைப் பார்வையில் சொல்கிறது டைட்டில் பாடல்.
இயக்குனர் லக்ஷ்மனின் ஒளிப்பதிவு, ஆரம்பம் முதல் கடைசிவரை மிக அருமை .
ஒரு மசாலாப் பட ரசிகனாக டிவிக்குப் பேட்டி கொடுக்கும் அந்த முதல் காட்சியிலேயே நகைச்சுவை காம்போ தருகிறார் மிர்ச்சி சிவா . படம் முழுக்கவே அவரது காட்சிகள் நகைச்சுவை தானம் செய்கின்றன .
ரவுடியாக அசத்துகிறார் பாபி சிம்ஹா . கடைசி சண்டையில் அவர் காட்டும் உடல் மொழிகள் சூப்பர் . படத்தில் அவரது கடைசி ஷாட் அவரையும் இயக்குனர் லக்ஷ்மனையும் பாராட்ட வைக்கிறது .
தியா விசயத்தில் மணி எடுக்கும் வித்தியாசமானது . அமுதனுக்கு ஏற்படும் முடிவு கனமானது . கௌராவின் முடிவு இயல்பானது .
ஆனால் இவற்றை நோக்கி நகரும் திரைக்கதையின் போக்கு வறட்சியாக இருக்கிறது . அதே போல மேற்சொன்ன முடிவுகள் படம் பார்ப்பவரை பாதிக்கும் அளவுக்கான அவசியமோ அழுத்தமோ , தியாவுக்கும் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையே கட்டமைக்கப்படவில்லை .
காம்பவுண்டு சுவர் மட்டும் பெருசாக இருக்க, கட்டிடமே இல்லாமல் காலி மைதானமாக இருக்கும் நடிகர் சங்க இடம் போல இருக்கிறது…. படத்தின் திரைக்கதை .
டல்லான யதார்த்தப் பதிவுகள் ஒரு சினிமாவுக்கான மசாலா படமாக எப்படி மாறுகிறது என்பதை, விளக்கமாக சுவராஸ்யமாக ஒரு தனி செக்மென்ட் ஆகவே காட்டி பட்டையைக் கிளப்பி இருக்க வேண்டாமா ? என்ன ஓர் அட்டகாசமான ஏரியா அது !
ஆனால் என்னமோ, கூட்டம் நிறைந்த கடையில் கொத்து பரோட்டா போட்ட மாதிரி, இப்படியா பரபரவென அவசரமாக சொல்லிவிட்டுப் போவது ?
திரைக்கதையின் ஆகப் பெரிய பலவீனமே இதுதான் .
கதை பிடிக்கும் விமர்சகர்கள் தியாவை மூன்று நபர்களிடமும் பழகவைத்து திரைக்கதை அமைக்கும் முயற்சிகள், ஒரு நிலையில் ஒரு டல்லான கதையாக அவர்களுக்கே தோன்ற ….
அதை அவர்கள் தயாரிப்பாளரிடம் சொல்லி தாங்கள் தோற்றுப் போனதாக புலம்புவது, ஆன்ட்டி கிளைமாக்ஸாக அல்லாமல்….. இடைவேளையாக இருந்திருக்க வேண்டும் அங்கிள்ஸ் !
அந்த கதையையே வெங்கட் கதாபாத்திரம் எப்படி ஒரு சுவையான கமர்ஷியல் படமாக மாற்றுகிறது என்பது படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும் . அப்படி கமர்ஷியலாக அமைக்கப்படும் காட்சிகள் இதே சிவா , சிம்ஹா ஆகியோர் நடிக்க, ஒரு பட்டையை உரிக்கும் படமாக திரையில் காட்சிகளாக விரிய வேண்டும் . அது அட்டகாசமாக அமைந்து ஒரு வெற்றிப் படமாக மாறியது என்று படம் முடிந்து இருந்தால் ….
இன்னும் சுவையான வெற்றிகரமான மசாலா படமாக இந்த மசாலா படம் வந்திருக்கும் .
தவிர மசாலாப் படம் நல்லதா ஆர்ட் படம் நல்லதா என்று விவாதிக்கும் இந்தப் படத்தில்…..
புரட்சித் தலைவரை துவக்கத்திலும் கடைசியிலும் சிலாகிக்கும் இந்தப் படத்தில் …..
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சினிமா என்பது கலைப் பதிவாக மட்டுமோ அல்லது போழுதுபோக்குப் பதிவாக மட்டுமோ இருந்தால் வேலைக்கு ஆகாது .
அது சமுதாயத்துக்கு நல்ல விசயங்களை சொல்லும் பதிவாக இருப்பது அவசியம் …. அதோடு முடிந்தவரை கண்ணியமான மசாலாவை சரியான பதம் பக்குவத்தில் இணைத்ததால்தான், எம் ஜி ஆர் வாழும் வரலாறாக இன்றும் இருக்கிறார் என்பதை நெத்தியடியாக சொல்லி இருந்தால் ….
ஒரே நேரத்தில் மக்களும் இணையதள நக்கீரர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் படமாக இது இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .
எனினும் படத்தின் இறுதியில் சினிமா பற்றி வெங்கட் பேசும் வசனங்கள் சூப்பரோ சூப்பர் . புரட்சித் தலைவரின் பாடல் மற்றும் வசனக் காட்சிகளைக் காட்டி படத்தை முடிப்பதும் அருமை .