மதில் @ விமர்சனம்

எஸ் எஸ் குரூப் சார்பில் சிங்கா சங்கரன் தயாரிக்க,

கே எஸ் ரவிகுமார், மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சுவாமிநாதன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் எஸ் எஸ் குரூப் கதைக்கு  திரைக்கதை எழுதி மித்ரன் ஜவஹர் இயக்க,

zee5 தளத்தில் வெளியாகும் படம் மதில். 

ஏறிக் குதிக்கலாமா? தாண்டிப் போகலாமா? பார்ப்போம் .

வாடகை வீட்டில் வாழ்ந்து மறைந்த தந்தையின் பிணத்தை வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தக் கூட வீட்டு உரிமையாளர் அனுமதிக்காத நிலையில், பிணமாகவும் அவமானப்படும் தந்தையைப் பார்க்கும் சிறுவன் லட்சுமிகாந்தனுக்கு, 

‘சொந்த வீட்டில் பிறக்காதது குற்றம் அல்ல;ஆனாலும்  சாவதற்குள் சொந்த வீடு கட்டி வாழாமல் சாவது பெருங்குற்றம் ‘ என்ற முடிவு பிறக்கிறது .

 திரைக்கதையில் சில நொடிகளில்  கல்யாணம், மனைவியின் மரணம், மகன், இந்திக்கார மருமகள், ஒரு பேரப்பிள்ளை, ஒரு மகள் என்று நாற்பத்தைந்து வருடங்களைக் கடந்து விடும் லட்சுமிகாந்தன் ( கே எஸ் ரவிகுமார்). ஆசைப்படி அட்டகாசமாக ஒரு வீடும் கட்டி விடுகிறார்.

அந்த கெத்தை அனுபவிக்க ஆரம்பிகும்போது,  ஒரு பிரச்னை . 

அமமுக கட்சி…. அட  ச்சே! .. மமமுக கட்சி சார்பில் லட்சுமிகாந்தன் வீட்டு மதில்  சுவர் ஆக்கிரமிக்கப்படுகிறது . அதில் தனக்கு விருப்பமில்லை என்பதை லட்சுமிகாந்தன் உணர்த்திய பின்னரும் கட்சி விளம்பரம் வரையப்படுகிறது  . 

கோபப்பட்ட லட்சுமி காந்தன் அதை அழிக்க, பதிலுக்கு அநியாயத்துக்கு அநியாயமாக கோபப்படும் மமமுக கட்சியின் வருங்கால எம் எல் ஏ (மைம் கோபி) , அந்த சுவரையே புல் டோசர் வைத்து இடித்துத் தள்ள, நியாயம் கேட்டுப் போன லட்சுமி காந்தனுக்கு என்ன ஆச்சு? அவரால் என்ன செய்ய முடிந்தது? என்பதே மதில். 

மதில் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் அடிப்படைக் கதை.

வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி ஒரு வீட்டைக் கட்டி உட்கார்ந்தால், என்னமோ தங்கள் அப்பன் வீட்டு சொத்து போல கட்சி விளம்பரங்களை வரைந்து கடுப்பேற்றும் கட்சிகளின் ஆணவப் போக்கை கழட்டி அடிக்கிறது கதை.

( மற்ற நிறுவன விளம்பரங்கள் என்றாலாவது முன் கூட்டியே அனுமதி கோரியோ அல்லது வாடகையாக ஒரு தொகை கொடுத்தோ வரைவார்கள். ஆனால் இந்த அரசியல்வியாதிகள் .. ?ஹும்!

தவிர வீட்டு சுவரை சுத்தமாக வைத்துக் கொள்வது உரிமையாளர் விருப்பம் என்றால் அது கடைப்பிடிக்கப்பட வேண்டும் அல்லவா) 

படத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் லட்சுமி காந்தன் கதாபாத்திரத்துக்கு மிக அழகாகப் பொருந்துகிறார் கே எஸ் ரவிகுமார் .

இந்திக்கார மருமகள், அதை வைத்து கொஞ்சம் மொழி அரசியல் விளையாட்டு,  தாயென உயர்ந்து நம்பிக்கை தரும் மகள் கதாபாத்திரம் என்று,   திரைக்கதையில் பல விஸ்தீரணங்கள் பாராட்டுக்குரியவை .

வீட்டுக்கு பக்கவாட்டில் உள்ள காலி மனை புழுதித்தரையாக இருப்பது, பின்னர் பண்படுத்தப்பட்ட மண் தரையாக தெரிவது, அடுத்து பச்சைப் பசும் தரையாக மாறுவது என்று கால ஓட்டத்தை புவியியல் சூழல் மூலம் நேர்த்தியாகக் காட்டி இருப்பது டைரக்ஷனின் அழகியல் மற்றும் நேர்த்தி.

லட்சுமி காந்தனின் நாடகக் குழு அதில் காத்தாடி ராம மூர்த்தி போன்ற சீனியர் நடிகர்கள் , லட்சுமி காந்தனை மதுமிதா கதாபாத்திரம் ஒரு தலையாய் , சரி…. காமெடியாய் காதலிப்பது, என்று ஒரு கதைப் பாதை. 

காத்தாடி ராமமூர்த்தியின் அழுத்தமான நடிப்பும் மாடுலேஷனும் அசத்துகிறது . 

எல்லா படத்திலும் நாடகத்தனமாக காமெடி செய்யும் மதுமிதா இந்தப் படத்திலும் அதையே செய்துள்ளார், ஆனால் மிகப் பொருத்தமாக!

பிரச்னைக் குரியவராக இருப்பாரோ என்ற ரீதியில் அறிமுகம் ஆகி , கடைசியில் நடிப்பு ஆர்வம் காரணமாக உதவும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் இயல்பான முக பாவனைகளோடு சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரீநாத். 

திமிர் பிடித்த அரசியல்வாதியாக மைம் கோபி சிறப்பு.

 பால முருகனின் ஒளிப்பதிவு இந்தப் படத்தை ஒரு படி மேலே கொண்டு போய் நிறுத்துகிறது . எல் வி முத்து- கணேஷின் பின்னணி இசை ஒகே ராகம். (எழுத்துப் பிழை அல்ல)

தியாகராஜனின் படத்தொகுப்பும் திருத்தம் . 

அரியவகை ஏழைகளே கோட்டா வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்ட பிறகு கோட்டாவை கிண்டல் செய்து வசனம் வைப்பது எல்லாம் நம்ம தலையில் நாமே போட்டுக் கொள்ளும் மண்.  அப்படியே பார்த்தாலும் கோட்டாவில் வந்த அந்த இன்ஸ்பெக்டர்  கலை ரசிகராகவும் ரொம்ப நல்லவராகவும் இருக்கிறாரே. படம்  பார்க்கும்போது இதை எல்லாம் எடிட்டர் சொல்ல வேண்டாமா?

பிரச்னை என்னவென்றால் சுவர் ஆக்கிரமிக்கப்படுவது என்பது எல்லா எளிய மனிதனுக்கும் நடக்கிற பிரச்னை. ஆனால் லட்சுமி காந்தன் என்னவோ,  எந்திரன் படத்தில் ரஜினி கையில் இருக்கும் 360 டிகிரி துப்பாக்கித் தொகுப்பை இப்போது வைத்திருப்பவர் மாதிரியே நடந்து கொள்கிறார் . 

(அரசியல்வாதி கட்டை விரலை வெட்டிய கதை தெரிந்த பிறகும் கூட அவர் அப்படியே நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ஒருவேளை ஏதோ பெரிய பதவியில் நியாயமான நடந்து ஒய்வு பெற்று இருப்பார் போல . 

அரசியல்வாதியை சும்மா கதற விட்டு,  அதன் மூலம் சுவர் ஆக்கிரமிப்பு அயோக்கியத்தனத்தை கண்டிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால் அதுவும் நடக்கவில்லை . )

அதாவது லட்சுமிகாந்தன் வேடத்தில் ரஜினி பட டைரக்டரே  தெரிகிறாரே ஒழிய , நாம் இயல்பான வாழ்க்கையில் பார்க்கும் லட்சுமி காந்தன்கள் தெரியவில்லை .

( அரசியல்வாதியை சந்தித்து ‘ அதிர்ச்சிக்கு’ ஆளாகும்போது மட்டும் லேசாக உள்ளேன் அய்யா). அதனால் நாம் பார்ப்பது சினிமா என்ற உணர்வு வந்து கொண்டே இருக்கிறது . 

அதே போல நாடகக் குழு லட்சுமி காந்தனுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் அடிக்கிற கூத்து வேறு அந்த உணர்வை அதிகரிக்கச் செய்கிறது .

அப்பாவுக்கே அப்படி ஓர் உத்வேகம் தரும்படி அந்த  மகள் கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு காட்சியில் மதுமிதா கதாபாத்திரம் லட்சுமி காந்தனைப் பார்த்து  ஜொள்ளு விட்டு வழிந்தபடி பேசும் போது, அதே மகள் கதாபாத்திரம் அங்கே ஏதோ , யாரும் அமர்ந்திருக்காத நாற்காலி மாதிரி கிடக்கிறது . 

என்ன சிக்கல் என்றால் நாம் என்டர்டைன்மென்ட் என்பதை காமெடி என்று புரிந்து வைத்திருக்கிறோம் . கதைக்கு ஏற்ற இயல்பான சிறப்பான காட்சிகளை அழுத்தமாக பரபரப்பாக விறுவிறுப்பாக சொல்வதே என்டர்டைன்மென்ட்தான். 

நாம் யதார்த்தத்தில் பார்க்கும் லட்சுமி காந்தன்களுக்கு ஏற்ற முழுமையான திரைக்கதை படத்தில் இல்லை. 

என்ன செய்து இருக்கலாம்?

தன்  வீட்டு மதில் சுவரில் அரசியல் விளம்பரம் இருப்பது கண்டு வெகுண்ட – படத்தில் சொல்லப்படுவது போல – ஏரியாவுக்குப் புதுசான லட்சுமி காந்தன்  அதை அழித்து விட்டார் . 

அப்புறம் ஆள் யார் என்று தெரிந்த பிறகு, அரசியல்வாசெய்தது நியாயம் இல்லை .. அது கண்டிக்கப்பட வேண்டியது என்ற என்ற கருத்தில் இருந்து அவர் மாறவில்லை. மாறாத அதே நேரம் மருமகளின் கோபம் உட்பட மற்ற உறவுகளால் மட்டுப் படுத்தப்படுகிறார் .

ஆனால்  அரசியல்வாதி சும்மா இருக்கவில்லை.  சுவர் விளம்பரத்தில் தன் முகம் அழிக்கப்பட்டதை பெரிய அவமானமாக நினைத்து இமேஜ் பிரச்னையாகப் பார்த்து , தொடர்ந்து தொந்தரவு செய்கிறான் . அங்கிருந்தே அவரை விரட்ட திட்டமிடுகிறான் (இது போன்ற விசயங்களில் நிஜத்தில் நடப்பதும் இதுதான்) என்ற போக்கில் திரைக்கதை போய்…… 

போட்டோவில் இருந்த மனைவியை இரண்டு சீன் உள்ளே கொண்டு வந்து – மனைவியின் உடல் நலக் கோளாறுக்கும் காரணமான உழைப்பால் கட்டப்பட்ட இந்த வீட்டை விட்டு லட்சுமிகாந்தன்  போக முடியாமல் தவிக்க, 

ஒரு நிலையில் விரக்தியின் உச்சிக்கே போகும்  லட்சுமி காந்தன், ”நீங்க தப்பு பண்ணிட்டு சரியா நடந்துகிட்ட என்னை கஷ்டப்படுத்துவீங்களா?” என்று  சீறி எழுந்தார் என்று  திரைக்கதை போயிருந்தால்,  எளிய மனிதர்களோடு இன்னும் படம் நெருங்கி இருக்கும். 

(இல்லை இல்லை சுவர் விளம்பர ஆக்கிரமிப்பு தவறு என்ற ஒற்றை லைன்தான் படக் குழுவின் நோக்கம் என்றால் அதை சமாளிக்க லட்சுமி காந்தன் எடுக்கும் முயற்சிகள் நிஜ வாழ்வில் சாத்தியம் இல்லை.

குறிப்பாக நாடகக் குழு மின்சார அலுவலக அதிகாரியை மிரட்டுவது! அரசியல்வாதிக்கும் அவன் ஆசை நாயகிக்கும் வரும் பகைமை எல்லாம்  தங்க நிகழ்தகவாகவே -golden probability- இருக்கிறது 

ஒரு உண்மைப் பிரச்னையை கதையாக எடுத்தால் காட்சிகளும் யதார்த்த சாத்தியங்களோடுதான் இருக்க வேண்டும்.  அதில் சினிமாத்தன காட்சிகள் சேர்த்து படம் பார்ப்பவனை குழப்பக் கூடாது )

அதே போல படத்தின் ஆரம்பத்தில், ஒரு விளம்பரக் கம்பெனி லட்சுமி காந்தனிடம் வந்து காசு கொடுத்து விட்டு  வீட்டு சுவரில் விளம்பரம் வரைந்து கொள்வதாகக் கேட்டபோதே அதை மறுத்து அதனால் மருமகளின் எரிச்சலுக்கும் ஆளாவனர் லட்சுமி காந்தன் என்று அவரது குணாதிசயத்தையும் வலுப்படுத்தி இருக்கலாம். 

இப்படி… படத்தில்  சில மேம்பாடுகளை தவற விடாமல் இருந்திருக்கலாம் . 

இவை எல்லாம் கட்டாயமா என்றால் , ஆம் .

ஏனெனில் பங்களாக்களும் எஸ்டேட்டுகளும் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்படும் காலத்தில் சுவர் விளம்பரத்துக்கான போராட்டம் என்பதே ஒரு எலைட் பிரச்னைதான். 

ஹால்களே இல்லாத அபார்ட்மெண்டுகள் , பதினெட்டு அடிச் சாலைகளில் வீட்டு மனைகள் , எலிப் பொந்துகளும் ஏளனம் செய்யும் ஃபிளாட்டுகள் என்று வீடுகள் எல்லாம் குருவிக் கூடு சைசுக்கு குறுகிக் கொண்டு இருக்கும் நிலையில் , அடப் போங்க பாஸ்.. மதிலாவது , சுவராவது!

ஆக, மேலே சொன்ன விசயங்களை வைத்துதான் இந்தக் கதையை வெகு ஜன மக்களிடம் மிகவும் நெருக்கமாகக் கொண்டு போக முடியும். 

என்றாலும் , 

கருத்தியல் ரீதியாக மதில் சுவர் உள்ள வீடுகளின் சுவர்களை , வீட்டு உரிமையாளர் விருப்பம் இன்றி  விளம்பர ஆக்கிரமிப்பு செய்வது மன்னிக்க முடியாத குற்றம்.  

அந்த இடத்தில்தான் இந்தப் படம் கரென்ட் ஷாக் மூலம் துடித்தெழும் இதயம் போல  துடிக்க ஆரம்பிக்கிறது. 

அந்த உணர்வை படம் பார்ப்போருக்குக் கடத்துவதிலும்   ஜொலிக்கிறது .

படம் நிறைவடையும் போது,  என்  வாக்கு என் உரிமை, என் தங்கம் என் உரிமை வரிசையில் இந்தப்  படத்தில் வரும் ”என் சுவர் என் உரிமை” என்ற வாசகத்தை  நம்மை அறியாமலே நாம் வாய் முணுமுணுக்கும். அதுதான் இந்தப் படத்தின் அசத்தல்  வெற்றி .

மதில்…. கோட்டைச் சுவர் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *