தமிழில் வசனம் இல்லாத படங்கள் வந்துள்ளன . ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்கள் வந்துள்ளன . ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய படங்கள் வந்துள்ளன .
ஆனால் ஒரே மனிதன் — நபர்– நடிக்கும் படம் எதுவும் தயாராகி, இதுவரை வெளிவந்துள்ளதா?
அப்படி ஒரு வித்தியாச முயற்சி மற்றொருவன் படம் . மொத்தப் படத்திலும் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்து, உருவாகியிருக்கிறது இந்தப் படம் கதைப்படி ஒரே ஒரு பாத்திரம்தான் திரையில் தெரியும்.
அந்த பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார்.
மரியா பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனரும் நடிகருமான வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ இயக்கியுள்ளார். இவர் கே எம் செபஸ்டினின் நண்பர் .
வேல்முருகன் ‘நேசம்புதுசு’ என்கிற படத்தை இயக்கியவர். பழம் பெரும் இயக்குனர் ஏ.ஜகந்நாதன், மற்றும் என்.கே. விஸ்வநாதன், டி.பி கஜேந்திரன், சுந்தர்.சி, சீமான் போன்ற இயக்குநர்களிடம்,
உதவி இயக்குநர், கதை விவாதம் என்று பணியாற்றியவர்.
சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் நடிகராகி 80 படங்களில் நடித்திருப்பவர். ‘எவன்டி உன்ன பெத்தான்’ என்கிற பெயரில் ஒரு படமும் இயக்கி முடித்திருக்கிறார்.
அவருக்கு நடிகர் ஜே.கே. ரித்திஷ் மூலம் திருப்பூர் மோகன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர் மூலம் செபஸ்டின், இயக்குநர் மஜோ அறிமுகமாகியிருக்கிறார்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த வேல்முருகனை, இயக்குநர் மஜோ சொன்ன கதை உலுக்கி உசுப்பிவிடவே , படத்தை நண்பர்களுடன் சேர்ந்து தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்தார் வேல் முருகன்
உற்சாகமாக களத்தில் இறங்கி படத்தை முடித்து இருக்கிறார்கள்..
இது பற்றிக் கூறும் வேல்முருகன் ” கதைதான் என்னைத் தயாரிப்பாளராக்கி இருக்கிறது. அதற்காக எந்த அபாயத்திலும் இறங்கலாம் என்கிற துணிச்சலையும் தந்தது.
மலையாளத்தில் 500 படங்களில் பணியாற்றிய பென்னிஜான் இசையமைத்துள்ளார். படத்தில் இரண்டே பாடல்கள்தான். கல்பாக்கம் சுகுமார் எழுதியுள்ளார்.
நான் வசனம் எழுதி இருக்கிறேன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது ‘மற்றொருவன்’. ஒரு முழு நீள ஹாரர் படமான இது,
மே மாதம் வெளியாகிறது.”என்கிறார் வேல்முருகன்
படத்தின் கதை பற்றி இயக்குநர் மஜோ மேத்யூ கூறும் போது” ஒரு எஸ்டேட் பகுதியில் நிகழும் கதை இது
ஒரே ஒரு நாயகன் பாத்திரம் தவிர உயிருள்ள இரண்டு பாத்திரங்களாக ஒரு நாயும் யானையும் மட்டும்தான் . மற்ற யாரும் இந்தப் படத்தில் இல்லை .
இருந்தாலும் இந்த 1 மணி 50 நிமிடக் கதை பரபரப்பும் விறுவிறுப்புமாக கமர்ஷியல் பார்முலாவில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், மூணார் என பயணித்து,
45 நாட்களில் படத்தை முடித்து இருக்கிறோம். ஏவி எம் ஸ்டுடியோவில் ஒரு செட் போட்டும் படமாக்கினோம்
இது உளவியல் சார்ந்த கதை. ஆனாலும் எல்லாருக்கும் புரிகிற மாதிரியான முழுமையான கமர்ஷியல் படம்தான் இது. நாயகன் ஒவ்வொரு விஷயத்தையும் கனவு காண்பான்.
கனவில் காண்பது எல்லாம் நேரில் நிஜத்தில் ஒவ்வொன்றாக நடக்கிறது. ஒரு பெரிய கனவு காண்கிறான். அது நிஜமாகிறதா என்பதே க்ளைமாக்ஸ் .
தவிர நாயகனுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரி இருக்கிறான்(!). படம் முழுக்க நிழலாக வரும் அந்த நிழல் பாத்திரம் யார்?அந்த’ மற்றொருவன்’ யார் என்பது சஸ்பென்ஸ்.
அந்த நிழல் எதிரியா? பேயா?கற்பனையா? மனப்பிரமையா ?என்பதை ஊகிக்கவே முடியாது. “என்கிறவர்,.
தொடர்ந்து பேசும்போது ” ரியாஸ்கான் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் பாத்திரம் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது என்பேன். எதிர் பார்த்தபடி நடித்து அசத்தியும் இருக்கிறார் ‘என்கிறார்.
பட அனுபவம் பற்றி நாயகன் ரியாஸ்கான் பேசும்போது ” நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று நடித்து ஜப்பான் மொழி வரை 300 படங்கள் நடித்திருக்கிறேன்.
இவற்றில் எந்தப் படத்திலும் வராத வித்தியாச வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. பத்து படத்தில் நடித்த அனுபவம் இந்த ஒரே படத்தில் கிடைத்தது. படப்பிடிப்பில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியவில்லை.
சவாலும் நடிப்பு வாய்ப்பும் நிறைந்த பாத்திரம் இது . என்மேல் நம்பிக்கை வைத்து வழங்கப்பட்டதை என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்திருக்கிறேன்.
படத்தில் கமர்ஷியல் பாடல் , சண்டைக் காட்சி எல்லாம் உண்டு .
படத்தில் நிழலோடு நான் சண்டை போடும் ஒரு காட்சி வருகிறது . நிழலாக நடிக்க ஒருவர் வருவார் . அவர் உடல் அசைவுகளுக்கு ஏற்ப நிழல் அசைய ,
அந்த நிழலின் அசைவுகளுக்கு ஏற்ப நான் அசைந்து சண்டை போட வேண்டும் . அந்தக் காட்சியை முடிக்க பெரும் உழைப்பும் நுணுக்கமும் திறமையும் தேவைப்பட்டது .
ஸ்டன்ட் மாஸ்டர் மாஃபியா சசி அந்தக் காட்சியை மிக சிறப்பாக எடுத்தார் . ஒளிப்பதிவாளர் நிகில் சிறப்பாக படம் பிடித்தார் .
அந்தக் காட்சி மட்டுமல்லாமல் மொத்தப் படத்தையும் சிறப்பாக இயக்கி உள்ளார் மஜோ மேத்யூ . தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதுமைகள் கொண்ட படமாகவும் ‘மற்றொருவன்’ படம் உருவாகியுள்ளது.
ஒரு மாறுபட்ட திரை அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்! ” என்கிறார்