இந்த மாயா ரசிகர்களைப் பார்த்து வாய்யா என்பாளா ? போய்யா என்பாளா? பார்க்கலாம் .
மாநகரை அடுத்து உள்ள மாயவனம் என்ற அடர்ந்த காட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு மனநோய் மருத்துவமனையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த தொடர்கதை அது.
முறையற்ற சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் நிறைய வன்முறைகள் வரம்பு மீறல்கள் அதிகம் . கர்ப்பமான நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்ட மாயா தாமஸ் என்ற பணக்காரப் பெண்ணுக்கும் சிகிச்சை என்ற பெயரில் பல கொடூரங்கள் நடந்தன . பிறந்த குழந்தை அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறது .
தவிர அங்கு போகிறவர்களுக்கும் மரணம் நிச்சயம் . அப்படிப் போன அந்த எழுத்தாளர் இறக்கிறார் . எழுத்தாளரோடு அங்கு போன — வசந்தின் நண்பனான– ஒரு ஆட்டோ டிரைவரும் இறக்கிறார் .
ஒரு நிலையில் மாயவன மர்மத்தைக் கண்டு பிடிக்க வசந்தும் அங்கு போகிறான் . இது ஒரு பக்கம்
அர்ஜுன் என்ற சினிமா நடிகனை திருமணம் செய்து மன வேற்றுமை காரணமாக அவனிடம் இருந்து பிரிந்து குழந்தையுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) விளம்பரப் படங்களில் நடித்து வந்த நிலையில் , அவளது தோழியான திரைப்பட உதவி இயக்குனர் சுவாதி (லக்ஷ்மி ப்ரியா) உதவியுடன் திரைப் படத்தில் நடிக்க முயல்கிறாள் .
அப்சராவுக்கு ஏராளமான பணப் பிரச்னை . அவளால் சமாளிக்க முடியவில்லை .
அப்சராவுக்கு தர வேண்டிய பணத்துக்கு –வங்கியில் பணம் இல்லாத- செக் கொடுத்து ஏமாற்றும் ஒரு விநியோகஸ்தர் படம் பார்க்க வருகிறார் . படத்தில் மாயாவனம் வருகிறது . அந்த விநியோகஸ்தர் திரையரங்கில் ஓர் அமானுஷ்ய சக்தியால் கொல்லப்படுகிறார் . காரணம் அவர் கையில் இருக்கும் நீல வைர மோதிரம் .
அடுத்து பணத்துக்காக அந்தப் படத்தை தனியாக பார்க்க வருகிறாள் அப்சரா .
அப்புறம் என்ன ஆச்சு என்பதே மாயா .
இதற்கு மேலும் திரைக்கதையில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு . ஆனால் அவை எல்லாம் திரைஅரங்கில் பார்ப்பதற்காக .
எடுத்த எடுப்பில் மிரட்டலான ஒலியை ஒலிக்க விட்டு அப்புறம் ஒளி விரியும் அந்த ஆரம்பமே அசத்தல் .
மாயா என்ற டைட்டில் வரும் விதமே செம மிரட்டல் .
ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காட்சிகளும் கேரக்டர்களும் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் அருமை . இரண்டு டிராக் கதையும் ஒன்று சேரும் இடத்தில் இருந்து பல அடடே ஆச்சர்யங்கள் . மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் . நின்று நிதானமாக அழுத்தமான ஷாட்கள் மானசீகமாக கைதட்டல் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பாரட்டுக்கள் இயக்குனர் அஷ்வின் சரவணனுக்கு .
படத்தின் மிகப்பெரிய பலம் சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு . வீட்டுக்குள் வந்து விட்ட அமானுஷ்யத்தை இருண்ட வீட்டில் ஒரு கையில் குழந்தையோடும் இன்னொரு கையில் விளக்கோடும் நயன்தாரா எதோ ஒன்றாக உணரும் காட்சியில், நம்மை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு போகிறது ஒளிப்பதிவு.
அதே போல ரோன் எதன் யோகன் கொடுத்திருக்கும் பின்னணி இசையும் மனசுக்குள் மர்மக் கம்பிகளை மீட்டிக் கொண்டே இருக்கிறது . ஒலி வடிவமைப்பும் அப்படியே
மிக அட்டகாசமாக நடித்து இருக்கிறார் நயன் . அதுவும் தனது வாழ்வில் நடந்த ஒரு விசயத்தையே சிச்சுவேஷனாக சொல்லி நடித்துக் காட்டச் சொல்லும்போது நயனின் நயனங்கள் என்னமாய் நடிக்கிறது . கிரேட் ஜாப் !
மிக பார்ஷான லுக்கில் அட்டகாசமாய் இருக்கிறார் ஆரி .
ஒரு நிலையில் மிஷ்கினின் பிசாசு படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
தேவையில்லாமல் சும்மனாச்சுக்கும் மிரட்டுவது , ஒரு நிலையில் டெம்ப்ளேட் போல பல கேரக்டர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள் நிகழ்வது, இவற்றை எல்லாம் குறைத்து இருக்கலாம் .
பிரம்மாதமான மேக்கிங். ஆனால் வழக்கமான பேய்ப் படங்களுக்கே உரிய கிளிஷே காட்சிகள் இந்தப் படத்திலும் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் .
எனினும் மாயா .. மிரட்டல்யா !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————
சத்யன் சூர்யன், ரோன் எதன் யோகன் , நயன்தாரா