திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சிவி குமார் தயாரித்து , முதன் முறையாக கதை எழுதி இயக்க , இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத,
சந்தீப் , லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், நடிப்பில் வந்திருக்கும் படம் மாயவன் . ரசனைக்குரியவனா ? பார்க்கலாம் .
ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதை பார்த்து அதிர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் (சந்தீப்) மன நல பாதிப்புக்கு ஆளாகிறார். அதற்கு சிகிச்சை எடுத்து முடித்து தகுதிச் சான்றிதழ் பெறுவதற்குள் வேலைக்கு வருகிறார் .
மன நல மருத்துவர் (லாவண்யா திரிபாதி) அதை எதிர்க்க , மோதல் .. பிறகு காதல் ஆகிறது .
இதற்கிடையில் முதல் பெண் கொலை செய்யப்பட்ட அதே பாணியில் அடுததடுத்துக் கொலைகள் நிகழ்கிறது .
கொலையாளி எல்லா கொலைகளையும் ஒரே மாதிரி செய்கிறான்
இன்னும் விசாரித்தால் கொலை செய்வது ஒரே ஆள் அல்ல ; வெவ்வேறு நபர்கள் என்பதும் ஆனால் எல்லா கொலை செய்யும் எல்லா நபர்களுமே,
ஒரு நிலையில் ஒரு குறிப்பிட்ட வகையான மன நிலை , இயல்பு , பழக்க வழக்கங்களுக்கு வந்து அதன் பின்னரே கொலை செய்கிறார்கள் என்பது தெரிகிறது
அந்த கொலைகார வரிசையில் ஒரு நிலையில் போலீஸ் அதிகாரிக்கு மிக முக்கியமான ஒரு நபரே மாட்டுகிறார் .
மேலும் பிரச்னையை நெருங்குகையில் போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் விஞ்ஞான விபரீத வில்லங்கங்கள் என்னென்ன… அதன் முடிவு என்ன என்பதே இந்தப் படம் .
ஒரு மனிதன் பிறந்தது முதல் நிகழும் நொடி வரைக்குமான நினைவுகள் மூளையின் நரம்புகளில் படிந்து கொண்டே போகின்றன. அந்த நினைவுகளை அப்படியே படி எடுத்து,
இன்னொரு மூளையில் செலுத்துவதன் மூலம் மனிதனின் ஆயுளை பல நூறாண்டுகளாக மாற்ற முடியும் என்ற ரீதியில் ஆய்வுகள் நடந்து வருகின்றன .
இதை அடிப்படையாக வைத்து கதை அமைத்திருக்கும் சி வி குமார் அப்படி நினைவுப் பிரதிகளை அடுத்தடுத்த நபர்களின் மூளைக்குள் அனுப்பி கொலை செய்ய வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கதை எழுதி இருக்கிறார் .
வித்தியாசமான கதைகளை தயாரித்த சிவி குமார் மிக வித்தியாசமான கதையைக் கொடுத்து சபாஷ் வாங்கிக் கொள்கிறார் . சிரமமான் இந்தக் கதையை தன் திரைக்கதை வசனத்தால் எளிமையான எல்லாருக்கும் புரிய வைக்கிறார் நலன் குமாரசாமி
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, கோபி ஆனந்தின் கலை இயக்கம், ஜிப்ரானின் அசத்தலான பின்னணி இசை , சுரேனின் ஒலிக் கலவை நான்கும் கதையை அந்நியமாக்கி விடாமல் நம்பகத்தன்மையை வளர்த்து படத்துக்கு தக்க பக்க பலமாய் நிற்கிறது .
சந்தீப் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் .
லாவண்யா திரி பாதி .. பாதி என்ன பாதி , முழுசாகவே அழகாக இருக்கிறார் . வித்தியசமான மன நல மருத்துவராக வரும் டேனியல் பாலாஜி விறுவிறுக்க வைக்கிறார் . முக்கிய வில்லனாக வரும் ஜாக்கி ஷெராப் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனின் பதட்டம் பார்த்து , சிரித்துக் குமிக்கும் காட்சியில் அசத்துகிறார் .
2037 இல் வரும் அந்த (போஸ்ட்?) கிளைமாக்ஸ் காட்சி அபாரம் .
மாயவன்.. மனம் கவர்ந்தவன் !