தனது அசத்தலான ஓவியத் திறமையால் கமல்ஹாசன், பாலச்சந்தர் , இளையராஜா உட்பட பல சினிமா பிரபலங்களின் அன்புக்கு பாத்திரமானவர் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர்.தயாரிப்பில் இருக்கும் ஆந்திரா மெஸ் படத்தின் மூலம் நடிகராக ஆகி இருப்பவர் .
அதே நேரம் மய்யம் என்ற பெயரில் ஒரு படத்தை – கதை திரைக்கதை எழுதி – தயாரித்து இருக்கிறார் . .
இந்தப் படத்தின் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் முதற் கொண்டு நடிகர்கள் உட்பட, இந்தப் படத்தின் அதி முக்கியமான கலை நுட்ப மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள்
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்.
இசை அமைக்கும் கே. ஆர் , நடிக்கும் ஹாஷிம் ஜெயின் , ஒளிப்பதிவு செய்யும் ஃபிர்னாஸ் ஹுசைன். உதவி இயக்குனர்கள் நந்த கிஷோர் மற்றும் நமீதா சப் கோட்டா, பாடகர் பரக் சாப்ரா உள்ளிட்டோர் சினிமா சம்மந்தப்பட்ட விஸ்காம் மற்றும் மீடியா படிப்பு படிப்பவர்கள்
இயக்குனரைத் தொடர்ந்து பாடலாசிரியர் பிரேம் சங்கர், நடனம் ஆடி இருக்கும் ஆர்த்தி பட்நாகர் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் . மேலும் இரண்டு நடனக்காரர்களான ராஜ் லட்சுமி, அவ்லின் இருவரும் வேறு படிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் .
ஆடை வடிவமைப்பு செய்திருப்பது, பத்தாம் வகுப்பு மாணவியான வருணா ஸ்ரீதர் . இவர் ஏ.பி ஸ்ரீதரின் மகள்.
இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் இயக்கிய ”ஓட… ஓட” என்ற குறும்படத்தை பார்த்து பிடித்துப் போய்தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தாராம் ஸ்ரீதர் .
படத்தின் கதை ?
“ஏ டி எம் இருக்கும் ஒரு வங்கிக்குள் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை ஆறு மணிக்கு முடியும் 24 மணி நேர கதை . வங்கிக்குள் நடக்கும் கொள்ளை மற்றும் கொலையே களம் . மாட்டிக் கொள்ளும் பெண்ணாக நடிகை ஜெய் குஹேனி நடிச்சுருக்காங்க. ஏ டி எம் கொள்ளைகள் கொலைகள் ஏன் நடக்குது? எப்படி நடக்குது ? என்ன மற்றும் எந்தக் குறைபாடுகளால் நடக்குதுன்னு சொல்லி இருக்கோம்.”என்கிறார்இயக்குனர்
“சென்னையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ‘மய்யம்’ திரைப்படம். ஒரு கடப்பாறை 3 ஏடிஎம் கார்டு, ஒரு ஃபுல் பாட்டில், 1லெக் பீஸ், 3 வாட்டர் பாக்கெட், 4 ஆண்கள், 3 பெண்கள் இவர்களை சுற்றி பின்னப்பட்ட காதல் நகைச்சுவை, திகில் கதை இது ” என்று கூறும் ஸ்ரீதர் தொடர்ந்து
“இன்னிக்கு கல்லூரி பசங்கதான் படம் ஓடும்போதே அதை ரீலுக்கு ரீல் விமர்சனம் பண்றாங்க.அதனால இன்னிக்கு புடிக்கிற ஸ்டைல்ல அவங்க ரசனைப்படி எடுக்கிற படம்தான் ஓடும் படம் . அதான் அவங்க டேஸ்டுக்கே எடுக்க வைத்திருக்கேன் .
சும்மா சொல்லக் கூடாது . பசங்க கலக்கி இருக்காங்க. இப்படியாக , இன்னிக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒரு பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கும் அதே நேரம் காமெடிக்கும் திரில்லுக்கும் பஞ்சம் இல்ல ” என்கிறார் ஸ்ரீதர் .
”படத்துல வேற ஸ்பெஷல்?” என்று டைரக்டரிடம் கேட்ட போது ” ஒரு மூன்றரை நிமிட பாட்டில் தாம்பரம் துவங்கி காசி மேடு வரை உள்ள நம்ம சென்னையின் பல்வேறு காட்சிகளை படம் பிடிச்சு காட்டறோம் . சென்னையின் அடையாளமா அந்தப் பாட்டு அமையும்” என்கிறார் ஆதித்யா பாஸ்கரன் .
மய்யம் என்பது கமல்ஹாசன் நடத்தி இருக்கும் பத்திரிகை என்பது முன்பே தெரிந்த விசயம்தான் . ஏ.பி. ஸ்ரீதருக்காக கமல்ஹாசனிடம் பேசி இந்தப் பெயரைப் பெற்றுத் தந்தவர் பத்திரிகைத் தொடர்பாளர் நிகில் முருகன். கமல் இந்தப் பெயருக்கு மகிழ்வோடு அனுமதி கொடுத்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல படத்தின் பாடல் வெளியீடு கமல்ஹாசனின் எல்டாம்ஸ் சாலை இல்லத்தில் நடந்தது . கமல் வெளியிட கௌதமி பெற்றுக் கொண்டார் .
விழாவில் பேசிய கமல்,
“இந்த இடத்துக்கு ஓர் சினிமா பாரம்பரியம் உண்டு . இங்கேதான் கமல்ஹாசன் என்ற ஓர் இளைஞனும் ஆர்.சி. சக்தி என்ற ஓர் இளைஞனும் சேர்ந்து ஒரு படம் ஆரம்பித்தார்கள் . அந்த படத்தின் ஸ்டில்லை கொண்டு போய் பாலச்சந்தரிடம் காட்டிதான் கமல்ஹாசன் அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றான் .
மாடியில் நின்று ரஜினி சிகரெட் பிடிக்கும் ஒரு ஸ்டில் அந்தக் காலத்தில் ரொம்ப பிரபலம் . அது இங்கேதான் எடுக்கப்பட்டது . இன்று அந்த இடத்தில் இருந்து இன்னொரு தலைமுறை முற்றிலும் இளைஞர்களோடு வருவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார்.
அடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்திபன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசும்போது,
” ஏ.பி ஸ்ரீதரின் அடுத்த படம் மாபெரும் வெற்றி பெறும். அதற்கு உரமாக இருக்கிற படமாக – வெற்றிகரமாக – இந்தப் படம் விளங்கும்
இன்னொரு முக்கிய விஷயம் . நான் சென்னைக்கு வெளியே ஒரு கிராமத்தில்தான் இப்போது இருக்கிறேன் . அங்குள்ள பசுமையான சூழ்நிலை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. மேலும் நிறைய செடி, கொடி, மரங்களை நட முடிவு செய்தேன்.
கிராமத்து மக்கள் கழிவுகளை மட்க வைத்து உரமாக பயன்படுத்துவதை பார்த்தேன் . நிறைய உரம் தேவைப்படும் நிலையில் கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயன்படுத்த முடியுமா என்று விசாரித்தேன். பயன்படுத்தலாம் என்று ஓர் அனுபவசாலி விவசாயி கூறினார்
கூவத்தில் உள்ள கழிவுகளை உரமாக பயன்படுத்தும் திட்டத்தை முதலில் செயல்படுத்த நான் திட்டமிட்டுள்ளேன்.
நான் மட்டும் இல்லாமல், இயற்கை உரம் தேவைப்படுகிற மற்றவர்களும் இந்தமுறையை பின்பற்ற வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
இத்திட்டத்தை நாம் செய்தால் கூவமும் சுத்தமாகும் . இயற்கை உரத்தின் பயன்பாடும் அதிகரிக்கும் . ஆரோக்கிய உணவு , பெருகும் மரங்களால் மழைவளம் ஆகியவை அதிகம் ஆகும். அதிகவாய்ப்புள்ளது.
என்னுடைய இந்த திட்டத்தை சென்னை நகர மேயரிடம் விளக்குவதற்காக அவரை தொடர்பு கொண்டேன். அவர் சி.எம். டி மீட்டிங்கில் பிசியாக இருப்பதாக சொன்னார்கள். அதற்கு முன் ஊடகங்கள் மூலம் மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காவே இங்கே இது பற்றி பேசுகிறேன்.” என்றார். (நாடே நடைமுறைப்படுத்த வேண்டிய நல்ல திட்டம் இது !)
ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது ” படத்தில் மொத்தம் ஏழு டுவிஸ்டுகள். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் . படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தி பேசிக் கொடுக்கும்படி பார்த்திபன் சாரிடம் கேட்டேன் .
அவர் வந்து நாங்கள் எழுதிக் கொடுத்தது மட்டும் அல்லாமல் அவரும் பல விசயங்களை சேர்த்து சிறப்பாக பேசிக் கொடுத்தார் . படத்தில் ஏ டி எம் கொள்ளைகளுக்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்றும் கூறினார் . கிளைமாக்ஸிலும் அவர் அது குறித்து பேசி இருக்கிறார் ” என்றார் .
மையத்தில் வெற்றி மய்யம் கொள்ளட்டும் !