ஏ டி எம் கொள்ளைகளை தவிர்ப்பது எப்படி என்று இந்தியா முழுக்க எல்லா வங்கிக்காரர்களுக்கும் வகுப்பெடுக்கவே ஸ்ரீதரை அனுப்பலாம் . உருப்படியாக நிறைய சொல்லி பல குற்றங்களைத் தடுத்து விடுவார் போலிருக்கிறது. அவ்வளவு அனுபவம் வந்து விட்டது ஓவியர் ஸ்ரீதருக்கு.
பின்னே ? சினிமா எடுக்க வேண்டும் என்றால் எல்லாரும் கதை எழுதுவார்கள் . இவர் படத்தின் கதைக்கு ஏற்ப ஒரு மெகா சர்வே மற்றும் ஆராய்ச்சியே செய்து இருக்கிறாரே !
ஓவியர் ஸ்ரீதர்?
கமல்ஹாசன், பாலச்சந்தர் , இளையராஜா ஆகியோரின் அன்புக்கு பாத்திரமான இந்த மனிதர், ஓவியம் புகைப்படம் உள்ளிட்ட கலை விசயங்களில் திறமை மிகுந்தவர் . தயாரிப்பில் இருக்கும் ஆந்திரா மெஸ் படத்தின் மூலம் நடிகராக ஆகி இருப்பவர் .
ஆனாலும் இருக்கிற உற்சாகத்துக்கு அணை போட முடியாத நிலையில், மய்யம் என்ற பெயரில் ஒரு படத்தை – கதை திரைக்கதை எழுதி – தயாரித்து இருக்கிறார் .
மய்யம் என்பது கமல்ஹாசன் நடத்தி இருக்கும் பத்திரிகை என்பது முன்பே தெரிந்தவர்களுக்கு , இப்போது ஸ்ரீதர் யார் என்பது புரியும் . கமல்ஹாசன் இந்தப் பெயருக்கு மகிழ்வோடு அனுமதி கொடுத்து இருக்கிறார் .
ஹார்வெஸ்ட் எண்டர்டெயின்னர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்சண்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மய்யம் என்ற பெயரே இந்தப் படத்துக்கு முதல் அட்ராக்ஷன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் .
ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு அப்படி என்ன கதை?
”உயிர்வாழப் பணம் தேவைதான்…
ஆனால் பல உயிர்கள் பறிபோவதே அதனால் தான்.
வேண்டும் போதெல்லாம் பணம் எடுக்க
வசதி செய்து கொடுத்த வங்கிகள்,
மனிதனின் பாதுகாப்பை பலப்படுத்தியதா?
பதிவு செய்யத் தெரிந்த கேமிராவுக்குப்
பாதுகாக்கத் தெரியுமா?
எனவே திரும்பப் பெறமுடியாத உயிர்களை மதிப்போம்!”
இந்த கருத்தை கதைகருவாக அமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் படமே “மய்யம்”
ஆம் மக்களே !
“ஏ டி எம் இருக்கும் ஒரு வங்கிக்குள் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை ஆறு மணிக்கு முடியும் 24 மணி நேர கதை . வங்கிக்குள் நடக்கும் கொள்ளை மற்றும் கொலையே களம் . மாட்டிக் கொள்ளும் பெண்ணாக நடிகை ஜெய் குஹேனி நடிச்சுருக்காங்க. ஏ டி எம் கொள்ளைகள் கொலைகள் ஏன் நடக்குது? எப்படி நடக்குது ? என்ன மற்றும் எந்தக் குறைபாடுகளால் நடக்குதுன்னு சொல்லி இருக்கோம்.

ஒரு கடப்பாறை 3 ஏடிஎம் கார்டு, ஒரு ஃபுல் பாட்டில், 1லெக் பீஸ், 3 வாட்டர் பாக்கெட், 4 ஆண்கள், 3 பெண்கள் இவர்களை சுற்றி பின்னப்பட்ட காதல் நகைச்சுவை, திகில் கதை இது ” என்கிறார் ஸ்ரீதர் .
இப்படியாக…நமக்குத் தேவைப்படும் பணத்தை நினைத்த நேரத்தில் எடுக்க உதவும் ATM மய்யத்தில், சில நேரங்களில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற அசம்பா விதங்கள் மனிதனுக்கு எவ்வாறு ஆபத்தாகிறது என்பதை படம் கூறுகிறது
படத்தில் இன்னொரு விஷேசம் …
இந்தப் படத்தின் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் முதற் கொண்டு நடிகர்கள் உட்பட, இந்தப் படத்தின் அதி முக்கியமான கலை நுட்ப மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள்.
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்.
இசை அமைக்கும் கே. ஆர் , நடிக்கும் ஹாஷிம் ஜெயின் , ஒளிப்பதிவு செய்யும் ஃபிர்னாஸ் ஹுசைன். உதவி இயக்குனர்கள் நந்த கிஷோர் மற்றும் நமீதா சப் கோட்டா, பாடகர் பரக் சாப்ரா உள்ளிட்டோர் சினிமா சம்மந்தப்பட்ட விஸ்காம் மற்றும் மீடியா படிப்பு படிப்பவர்கள்
இயக்குனரைத் தொடர்ந்து பாடலாசிரியர் பிரேம் சங்கர், நடனம் ஆடி இருக்கும் ஆர்த்தி பட்நாகர் இருவரும் பொறியியல் பட்டதாரிகள் . மேலும் இரண்டு நடனக்காரர்களான ராஜ் லட்சுமி, அவ்லின் இருவரும் வேறு படிப்புகளுக்கு சொந்தக்காரர்கள் .
அட , அவ்வளவு ஏன் ? ஆடை வடிவமைப்பு செய்திருப்பது, பத்தாம் வகுப்பு மாணவியான வருணா ஸ்ரீதர் .(ஓவியர் ஸ்ரீதரின் மகள் )
”ஏன் ஸ்ரீதர் ஏன் ?”என்று ஸ்ரீதரை ‘மய்ய’மாகக் கேட்டால் … “இன்னிக்கு கல்லூரி பசங்கதான் படம் ஓடும்போதே அதை ரீலுக்கு ரீல் விமர்சனம் பண்றாங்க .
அதனால இன்னிக்கு அவங்களுக்கு புடிக்கிற ஸ்டைல்ல அவங்க ரசனைப்படி எடுக்கிற படம்தான் ஓடும் படம் . அதான் அவங்க டேஸ்டுக்கே எடுக்க வைத்திருக்கேன் . சும்மா சொல்லக் கூடாது . பசங்க கலக்கி இருக்காங்க.
இப்படியாக , இன்னிக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒரு பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கும் அதே நேரம் காமெடிக்கும் திரில்லுக்கும் பஞ்சம் இல்ல .படத்தில் மொத்தம் ஏழு டுவிஸ்டுகள். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் .” என்கிறார் ஸ்ரீதர் .
படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் இயக்கிய ”ஓட… ஓட” என்ற குறும்படத்தை பார்த்து பிடித்துப் போய்தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்தாராம் ஸ்ரீதர் .
”படத்துல வேற ஸ்பெஷல்?” என்று டைரக்டரிடம் கேட்ட போது ” ஒரு மூன்றரை நிமிட பாட்டில் தாம்பரம் துவங்கி காசி மேடு வரை உள்ள நம்ம சென்னையின் பல்வேறு காட்சிகளை படம் பிடிச்சு காட்டறோம் . சென்னையின் அடையாளமா அந்தப் பாட்டு அமையும்” என்கிறார் ஆதித்யா பாஸ்கரன் .
படத்தின் விளம்பரத்துக்காக Againsr ATM Murder என்ற கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்ட பிரத்யேக ஓவியத்தில் கமல்ஹாசனும் கவுதமியும் கையெழுத்துப் போட்டுள்ளனர்.
இதில் மற்ற பல பிரமுகர்களிடமும் கையெழுத்து வாங்கப்பட உள்ளது .
இது தவிர இது மாணவர்கள் உருவாக்கிய படம் என்பதால் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் ஐந்து மாணவர்களை வரவைத்து அவர்களுக்கு படத்தை ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு ஷோவாக போட்டுக்காட்ட இருக்கிறார் ஸ்ரீதர்,
“ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் எல்லாம் ஏ டிம் எம் வைத்து விடுகின்றனர். அதற்கு பாதுகாப்பும் இல்லை . சரியான பாதுகாவலர்களும் இல்லை . பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை .
பொதுவாக ஏ டி எம் மிஷினை உடைக்க முடியாது . அதனால பணம் எடுப்பவர்களை மிரட்டி பணம் பிடுங்குவதுதான் அதிகம் நடக்கிறது.
ஒவ்வொரு ஏ டி எம் மிஷின் பக்கமும் போய் காவல் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் போடணும்னு ரூல்ஸ் இருக்கு . ஆனா தினசரி போறது இல்ல. பாவம் அவங்களுக்கும் பல வேலை . அதனால என்னிக்காவது போற அன்னிக்கு மொத்தமா கையெழுத்து போட்டுட்டு வர்றாங்க. அதனால குற்றவாளிகளுக்கு பயமே இல்லாம போகுது .
வெளிநாடுகளில் ஒரு ஏ டி எம் மெஷினில் தவறாக ஏதாவது நடக்கும்போதே உடனே போலீசுக்கு தெரிந்து விடும். உடனே வந்து விடுவார்கள். ஆபத்து நடக்காது . ஆனால் நம் நாட்டில் ஏதாவது ஆபத்து நடந்தால் அப்புறம்தான் ஏ டி எம் கேமராப் பதிவை போட்டுப் பார்த்து குற்றவாளியை தேடுவார்கள் .
ஏ டி எம்மில் பின் நம்பரை தலைகீழாக மாற்றிப் போட்டால் பணம் பாதியில் நின்று விடும் என்பது எல்லாம் நம்ம ஊரில் இன்னும் சாத்தியம் இல்லை .
வெளிநாடுகளில் ஏ டி எம் மில் கார்டை சொருகிய உடனேயே வேறு யாருடைய கார்டையாவது வைத்து நீங்க ஏமாற்ற நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் . செய்யாதீர்கள் ‘ என்று அறிவிப்பி வரும் . மீறி செய்தால்தான் அது குற்றம் ஆகும் . அங்கே ஏ டி எம் குற்றம் என்பது கொலைவரையெல்லாம்போவதே இல்லை “என்று …..
ஏ டி எம் மெஷினைப் பற்றி ஸ்ரீதர் சொல்ல சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது . படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாகிறது
மய்யம் திரைப்படம் 16 அக்டோபர் அன்று திரைக்கு வருகிறது.