மீகாமன் என்ற பழந்தமிழ் சொல்லுக்கு மாபெரும் பாய்மரக் கப்பலின் தலைவன் என்று பொருள் . இந்த படம் தலைவன் என்று பாராட்டி சொல்லும்படி இருக்கிறதா? பார்க்கலாம்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட அத்தனை இருட்டுக் குற்றங்களுக்கும் பேர் போன கோவா நகரில் நடக்கும் கதை . அங்கே அதில் அழுத்தமாக பிடியை இறுக்கி இருப்பவன் ஜோதி என்கிற மாபெரும் தாதா(அஷுதோஷ் ராணா) . அவனது நம்பிக்கையான ஆட்களுக்கே அவனது முகம் தெரியாது என்ற அளவுக்கு அவனது நெட் வொர்க். புத்திசாலித்தனமானது.
அவனை எப்படியாவது பிடிக்க அருள் என்ற போலீஸ் அதிகாரியை (ஆர்யா) ஜோதி கேங்கில் சேர்ந்து வேலை செய்யவே அடியாளாக அனுப்புகிறது காவல்துறை. . சிவா என்ற பெயருடன் பல வருடம் அந்தப் ‘அண்டர் கவர் ‘பணியில் இருக்கும் அருள் , அதற்காக தனது நண்பனான இன்னொரு போலீஸ் அதிகாரியையும் (ரமணா) வற்புறுத்தி ஈடு படவைக்கிறார். அதற்காக ரகசியமாக வீடு எடுத்து தங்கி இருக்கும் நிலையில் பக்கத்து வீட்டில் ஒரு கல்லூரிப் பெண்ணுடன் (ஹன்சிகா) அறிமுகம் ஏற்படுகிறது. .
இந்நிலையில் ஆயிரம் கிலோ கோகைய்ன் போதைப் பொருள் கோவாவுக்கு கடத்தப்பட்டு வருவது அருளுக்கு தெரிய வருகிறது. தனது நண்பனான போலீஸ் அதிகாரி மூலம் ஒரு திட்டம் வகுத்து , கடத்தலில் ஈடுபடும் ஒரு பதவி நீக்கப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு (ஆஷிஷ் வித்யார்த்தி )அந்த தகவலை அனுப்பி, அவன் மூலம் ஜோதிக்கு விஷயம் சொல்லி , அதை வாங்க ஜோதியை நேரடியாக களம் இறங்க வைத்து, அவனைப் பிடிக்க திட்டமிடுகிறான் அருள் .இதற்கு அருளின் உயர் அதிகாரிகள் இருவர் (அனுபமா குமார், ஓ ஏ கே தேவர்) சம்மதிக்கிறார்கள் .
ஆனால் எல்லாம் சரியாகப் போகும் நேரத்தில் இது சரியாக நடந்து விட்டால் அந்த இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் நல்ல பேர் கிடைத்து விடும் என்று பொறாமைப்படும் அவர்களை விட உயர் அதிகாரி ஒருவர் (சரவணன் சுப்பையா) அநியாயமாக இந்தத் திட்டத்தை சீர் குலைக்கிறார். அ
தன் வவிளைவாக தாதா கும்பலால் கண்டு பிடிக்கப்படும் ரமணா கொடூரமாக கொலை செய்யப்பட, அடுத்து அருளையும் போலீஸ் நெருங்க ….
மீகமனான அருளுக்கு என்ன ஆனது ? அவனைக் காதலித்த பெண்ணின் கதி என்ன? என்பதே இந்த படம் .
பார்த்துப் பழகிய கதைதான் . ஆனால் அதற்கு அட்டகாசமான திரைக்கதை அமைத்து அசத்தியதோடு படமாக்கிய விதத்திலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார், இயக்குனர் மகிழ் திருமேனி .
யூகிக்க முடியாத திருப்பங்கள் படம் பார்ப்பவர்களை சீட்டு நுனியில் யானை சங்கிலி போட்டு கட்டிப் போடுகிறது . சில விசயங்களை ஆரமபத்தில் போகிற போக்கில் சொல்லி விட்டு , அப்புறம் அதை திரைக்கதையில் அழுத்தமாக பயன்படுத்தும் வித்தையில் மகிழ் திருமேனி ரொம்பவே சமத்து .
கேரக்டரை உணர்ந்து அமிழ்ந்து எழுந்து அற்புதமாக நடித்து இருக்கிறார் ஆர்யா .
ஹன்சிகாவுக்கான பின்னணி பேசுபவரின் குரலை மாற்றி புதிதாக ஒருவரை போட்டு, அதன் மூலம் நாம் பார்ப்பது இதுவரை பார்த்த ஹன்சிகா அல்ல.. ஒரு புதிய ஹன்சிகா என்ற உணர்வை ஏற்படுத்திய வகையில் டைரக்டரின் புத்திசாலித்தனம் ஜொலிக்கிறது .
அவ்வளவு படாடோபமான கேரக்டரை எந்த விதமான அலட்டலும் இல்லாமல் சைலண்டாக படைத்த விதத்தில் இயக்குனரும் நடித்த விதத்தில் அசுதோஷ் ராணாவும் சபாஷ் போட வைக்கிறார்கள் . பொதுவாகவே பாத்திரங்களுக்கான நடிக நடிகையர் தேர்வு அற்புதம் !
துப்பாக்கிக் குண்டுகள் அதிகம் வெடிக்கும் படத்தில் வசனங்கள் பொதுவில் மவுனித்து விடும் என்பார்கள் . ஆனால் இந்தப் துப்பாக்கிக் குண்டுகளையும் மீறி அவ்வப்போது பீரங்கிகளாக வெடிக்கின்றன வசனங்கள் . உதாரணம் .. “மரணத்தை விட ஆபத்தான விஷயங்கள் உலகத்துல நிறையவே இருக்கு”
அதே மாதிரி இது போன்ற அழுத்தமான ஆக்ஷன் படங்களில் கவிதைத்தமான பதிவுகளுக்கு வேலை கம்மியாகவே இருக்கும் . ஆனால் பாடல்களை படமாக்கிய விதத்தில் அதையும் கடந்து, மயிலிறகில் தேன் ஊற்றி, ரசனை எனும் மேனி முழுக்க மகிழ்வோடு தடவுகிறார், மகிழ் திருமேனி .
இதற்கு மேல் கோணங்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லா கோணங்களிலும் இயக்குனர் ஷாட் வைத்திருக்க , அவருடன் கை கோர்த்துக் கொண்டு அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் குமார். இருள் ஒளிப் பயன்பாட்டில் வாய் பிளக்க வைக்கிறார் சதீஷ் குமார்.
இசையமைப்பாளர் எஸ் . எஸ், தமனின் பின்னணி இசை , போர் பிரேம்ஸ் உதயகுமாரின் ஒலி ஆளுமை இரண்டும் இரட்டைக் குழல் துப்பாகிகாக முழங்கி படத்தின் திரில்லுக்கும் சுவாரஸ்யத்துக்கும் பல சேர்க்கின்றன. உதயகுமாரின் ஒலி ஒத்திணைப்பு ரசிக்க வைக்கிறது.
மோகன மகேந்திரனின் கலை இயக்கம் நாம் பார்ப்பது சினிமா அல்ல .. நிஜ சம்பவங்கள் என்ற உணர்வுக்கு காரணம் ஆகிறது என்றால் என்.பி. ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு ”நான் மட்டும் சும்மாவா?’ என்று களம் இறங்கி விறுவிறுப்பு ஏற்றுகிறது.
‘காதல் என்பது விட்டுக் கொடுத்தல் .. சில சமயம் காதலையே விட்டுக் கொடுத்தல் ‘ என்பது பால குமாரனின் இரும்புக் குதிரைகள் (மெர்க்குரிப் பூக்கள்?) நாவலில் வரும் ஒரு வரி . படம் பார்க்கும்போது அந்த வரி ஞாபகம் வருகிறது .
ஆக்ஷ்ன படங்களில் இப்போதெல்லாம் கதாநாயகிகளுக்கு ஊறுகாய் அளவுக்கு கூட வேலை இருப்பது இல்லை . ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் மாறாக படத்தின் இறுதியில் கதாநாயகிக்கு அப்படி ஒரு முக்கியத்துவம் கொடுத்து, கனமான ஒரு காட்சி வைத்த விதத்தில் படம் பன்முகத் தன்மையிலும் எழிலாக விகசிக்கிறது . “அடுத்த வீட்டு ஆண்ட்டியோட பொண்ணு கல்யாணத்துக்கு எந்த நெக்லஸ் போட்டுட்டுப் போறது .. கோவிலுக்கு எந்த கலர் பட்டு சேலை கட்டிட்டுப் போறது … இது மாதிரி விசயங்களை விட பெரிய பிரச்னை எதுவும் உன் லைஃப்ல வரவே கூடாது ” என்ற வசனம் காதலின் சிகரம் .
சொல்ல வரும் விஷயத்தை முழுமையாக சிரத்தையாக சொல்லிக் கொண்டு போனாலே போதும் . வேறு எந்தக் கவலையும் வேண்டாம் . அப்படி சொல்லிக் கொண்டு போகும்போது காமெடி வர வேண்டிய இடத்தில் தானாக காமெடி வரும் . சென்டிமென்ட் வர வேண்டிய இடத்தில் தானாக செண்டிமெண்ட் வரும் . திரில் வர வேண்டிய இடத்தில் தானாக திரில வரும் . காதல் வர வேண்டிய இடத்தில் தானாக காதல் வரும் ..
ரசிகர்களுக்கும் படத்தின் மீது தேனாக காதல் வரும் என்பதையும்…
அமைதியாக அக்கறையாக முழுமையாக சிரத்தையாக சொல்கிறது இந்தப் படம்
மொத்தத்தில்
மீகாமன் … கடலரசன் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————–
மகிழ் திருமேனி, எஸ்.ஆர். சதீஷ் குமார், எஸ் எஸ் தமன், ஃபோர் ஃபிரேம்ஸ் உதய குமார், ஆர்யா, மோகன மகேந்திரன் , என்.பி. ஸ்ரீகாந்த்