
மனைவி இறந்த நிலையில் கைக் குழந்தையுடன் காரைக்குடியில் இருந்து மலேசியா சென்று ரோட்டோரக் கடை போட்டு முன்னேறி,
இப்போது ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற உயர்தர உணவு விடுதியின் உரிமையாளராக இருக்கும் பணக்கார அண்ணாமலைக்கு (பிரபு) ,
தன் ஒரே மகனான கார்த்திக் (காளிதாஸ் ஜெயராம்) அப்பாவான தனக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்பது போல ஒரு புரிதல் . நடக்கும் சில சம்பவங்களும் அப்படியே உள.
கார்த்திக்குக்கு கல்லூரியில் ஒரு காதலி (ஆசனா சவேரி) மலேசியாவின் பிரபல டான் ஒருவரின் (எம் எஸ் பாஸ்கர்) முக்கியக் கையான ‘கேங் மாலா’வுக்கு (பூஜா குமார்) அண்ணாமலை மீது ஒரு ஈர்ப்பு .
அப்பனுக்கும் மகனுக்கும் இடையே மன வருத்தம் மிகும் சூழலில் அவர்கள் சந்திக்கும் ஒரு சாமியார் ( கமல்ஹாசன்) அப்பாவின் மனசை மகனுக்கும் மகனின் மனசை அப்பாவுக்கும் மாற்றி விடுகிறார் .
அதாவது அப்பாவின் சாத்வீக குணம் நடை உடை பாவனை மகனுக்கும் , மகனின் உற்சாகம் துள்ளல் குணம் மற்றும் நடை உடை பாவனை மகனுக்கும் வந்து விடுகிறது .
அப்பாவைப் பற்றி மகனும் மகனைப் பற்றி அப்பாவும் புரிந்து கொள்கின்றனர் .
அப்பாவின் சாத்வீக குணத்தோடு கல்லூரியில் பழகும் மகன் , ”சரியோ தப்போ எதுவானாலும் சாரி சொல்லுங்க ” என்பதை வலியுறுத்தி,
கொண்டு வரும் ஒரு கான்செப்ட் மலேசியா முழுக்க பரவி எல்லோரும் நல்லவர்கள் ஆகிவிட , டானின் பிசினஸ் பாதிக்கப்படுகிறது .
ஆனால் ஏனோ ஒட்டு மொத்த மலேசியாவிலுமே டானும் அவரது ரெண்டு மூணு அடியாட்களும் மட்டும் நல்லவர்கள் ஆகாமல் ,
கார்த்திக்கை போட்டுத் தள்ள முடிவு செய்து, அந்த வேலையை கேங் மாலாவிடம் ஒப்படைக்க , மாலா மாளா காதலில் தயங்க, அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த மீன் குழம்பும் மண்பானையும் .
ஆரம்பத்தில் அப்பா அண்ணாமலையாக அன்பு ஒழுக பேசும்போதும் , பின்னர் மகனின் குணத்தோடு ‘யூத்’ காட்டும்போதும் பிரபு சிறப்பு .
காளிதாஸ்… குறை சொல்ல ஒன்றும் இல்லை . இன்னும் நடிப்பில் எந்த தனித்தன்மையும் ஸ்பெஷலும் இல்லை.
மலேரியா காய்ச்சல் மறுகுறு பாய்ந்து மாசக் கணக்கில் படுத்து எழுந்தவர் போல் இருக்கிறார் ஆசனா சவேரி. பல காட்சிகளில் அவரை பார்க்க முடியாமல்,
பக்கத்துல எந்த முகமாவது பார்க்கும்படி இருக்கான்னு அலைய வேண்டி இருக்கு , அவருக்கான உடை, கேமரா கோணங்கள் எல்லாமே சொதப்பல் .
(சரி , சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். கேமரா மேன் என்ன பண்ணுவார் ).
பூஜா குமாரை எல்லாம் இன்னும் இளமையாக பார்ப்பதற்கு படத்தில் வரும் அண்ணாமலையை விட பல மடங்கு பக்குவம் தேவைப் படும். ஒரிரு காட்சிகள் தவிர பல காட்சிகளில் படுத்தி எடுக்கிறார் ஊர்வசி .
இமானின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருப்பது ஓர் ஆறுதல் .
இரண்டாம் பகுதியில் எம் எஸ் பாஸ்கர் காமெடியில் சொதப்பினாலும் அவரது அடியாளாக வரும் ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷும்,
சக அடியாளாக வரும் தினேஷின் மகனும் கொஞ்சம் காமெடி பஞ்ச்களில் கலகலக்க வைக்கிறார்கள் .
அது போல இரண்டாம் பகுதியில் கமல் வரும் காட்சியிலும் வசனம் ரகளை .
ஆனால் இவை மட்டும் போதுமா ?
கதை என்ற வகையில் அடிப்படையில் நல்ல கான்செப்ட்தான் . ஆனால் திரைக்கதை அமைத்து படமாக்கிய விதத்தில்தான் ஏக சறுக்கல்.
முதல் பகுதியை ஏனோ தானோ என்று எடுத்து இருப்பதால் , இரண்டாம் பகுதியில் சில காட்சிகளில் நியாயமாக வர வேண்டிய எமோஷன் கூட வராமல் ஓடிப் போய் விடுகிறது.
முதல் பாதியில் பல்லைக் கடித்துக் கொண்டால் இரண்டாம் பகுதியில் கொஞ்சம் பல்லைக் காட்டலாம் .
மொத்தத்தில்
மீன் குழம்பும் மண் பானையும் …குழம்பு இருக்கு . மீன் எங்கே ?