சுந்தரம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சுரேஷ் பாலாஜி , ஜார்ஜ் பயஸ், சித்தாரா பாலாஜி ஆகியோரின் நிர்வாக தயாரிப்பில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சார்லி, அஜய் கோஷ், நடிப்பில் செந்தா முருகேசனின் கதை வசனத்துக்கு எஸ் ஏ பாஸ்கரன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மெய் .
குறிப்பிட்ட ரத்தவகை உள்ள சிலரை திட்ட மிட்டு கடத்துகிறது யாரென்று சொல்லப் படாத ஒரு கும்பல் .அப்படி பெண்ணைப் பறி கொடுத்த ஓர் ஏழைத் தகப்பனை (சார்லி ) மிரட்டி அனுப்புகிறார் காவல் துறை துணை ஆய்வாளர் ( அஜய் கோஷி )

அமெரிக்காவில் மருத்துவம் படித்த நிலையில் அம்மாவை பறி கொடுத்த அதிர்ச்சியில் சிகிச்சை அளிப்பதற்கான சான்றிதழ் பெறாமலே சென்னை வரும் ஓர் இளைஞனுக்கு ( நிக்கி சுந்தரம்) மருந்து விற்பனைப் பிரதி நிதி பெண்ணின் ( ஐஸ்வர்யா) நட்பு கிடைக்கிறது .
மாமாவின் மருந்துக் கடையில் அமரும் அந்த இளைஞன் ஏழை மக்களுக்கு ஜஸ்ட் லைக் தட் நியாயமான வைத்தியம் செய்கிறான் .
மகளை இழந்த பெரியவருக்கு அந்தப் பெண் உதவுகிறாள் .
இன்னும் சில பேர் காணாமல் போகிறார்கள்.

ஒரு மருத்துவ சிகிச்சை ஓய்வுக்கு பிறகு பணிக்கு சேரும் காவல் துறை ஆய்வாளர் ஒருவர் (கிஷோர் ) , இந்த வழக்கில் நியாயமாக விசாரணை செய்கிறார் .
அமெரிக்க மருத்துவ இளைஞனோடு மருந்துகடையில் வேலை செய்யும் நண்பன் ஒருவன் கீழே விழுந்து அடி பட, அவனுக்கு நாயகன் சரியான சிகிச்சை கொடுக்க, மருத்துவ மனையில் தவறான மருந்து கொடுத்து அவனை சாகடிக்கும் சிலர், பழியை அமெரிக்க டாக்டர் மீது போடுகின்றனர் .
குற்றவாளிகளை கண்டுபிடிக்க விரும்பும் நிலையில் நாயகன் தலை மறைவாக , நியாயமான காவல் துறை ஆய்வாளர் மட்டும் உண்மைக் குற்றவாளிகளை பிடிக்க முயல , நடந்தது என்ன என்பதே இந்த மெய் .
படத்தில் ஆரம்பத்திலேயே மனம் கவர்வது ஒளிப்பதிவாளர் வி என் மோகன். எடுத்த எடுப்பிலேயே அசத்துகிறார் . படம் முழுக்க குறையில்லை .

அனில் ஜான்சனின் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது .
நிக்கி சுந்தரம் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் .
ஐஸ்வர்யா ஜஸ்ட் லைக் தட் பேசி விட்டுப் போகிறார் .
நிக்கி சுந்தரத்தை ஜார்ஜ் கட்டிப் பிடிக்கும் வேலையில் தங்கதுரை அடிக்கும் ‘கரண்ட் கம்பத்தில் ஏறும் பெருச்சாளி … ” கமென்ட் , கலகல .
சார்லி , அஜய் கோஷி மிகை நடிப்பு . காரணம் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளும் அப்படியே.
கிஷோர் சம்மந்தப்பட்ட திருப்பம் எதிர்பாராதது . ஆனால் அதனால் படத்தின் நோக்கத்துக்கு பலன் எதுவும் இல்லை.

படத் தொகுப்பு குறிப்பாக வசனத் தொகுப்பில் இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும் . எனினும் முதல் பெண் படத் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கும் பிரீத்தி மோகனுக்கு வாழ்த்துகளும் வரவேற்பும் .
வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
காட்சிகள் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கலாம் .
திரைக்கதை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.
மிகைப்படுத்துவதாலேயே எமொஷனை கொண்டு வந்து விட முடியாது . இதை அறிமுக இயக்குனர் பாஸ்கரன் அறிந்து கொள்ள வேண்டும்