மேயாத மான் @ விமர்சனம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க, 

வைபவ் , ப்ரியா பவானி ஷங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா , அருண் பிரசாத், அம்ருதா சீனிவாசன் நடிப்பில், 
 

ரத்னகுமார் இயக்கி இருக்கும் படம் மேயாத மான் . புல்வெளி ரசனையாக இருக்கா ? பார்க்கலாம் . 

மூன்று வருடமாக தான் காதலிக்கும் பெண்ணான மதுமிதாவிடம்( பிரியா பவானி ஷங்கர்) காதலை சொல்ல முடியாத  தயக்கம் கொண்டவன் முரளி.

 அதனாலேயே இதயம் முரளி என்ற பட்டப் பெயர் சுமந்தவன் . 
 
ஒரு அகா ஜுகா ஆர்க்கெஸ்ட்ரா வைத்து நடத்தும் அவனுக்கு வினோத் என்ற பால்யந்தொட்ட ஒரு நண்பன் (விவேக் பிரசன்னா) . சுடர்விழி என்ற ஒரு தங்கை (இந்துஜா) 
 
மதுவிடம் காதலை சொல்ல முடியாத நிலையில் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆனதாக தகவல் வர ,
 
தண்ணி அடித்து விட்டு செல்போன் டவர் மாடியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறான் முரளி 
 
பதறிப்போன உயிர் நண்பன் வினோத் , மதுமிதாவை சந்தித்து அவளுக்கு முரளியை பிடிக்கவே பிடிக்காத மாதிரி போனில்  பேசச் சொல்கிறான் .
 
அதை முரளியை கேட்க வைக்கிறான் .
 
மதுமிதா மீது கோபப் படும் முரளி தற்கொலை முடிவை விடுத்து இறங்கி வருகிறான் .
 
அடுத்து நண்பன் ஒருவனின் கல்யாணத்தில்  முரளியும் மதுவும் சந்திக்க , இருவருக்கும் முட்டிக் கொள்கிறது . 
 
இந்த நிலையில் முரளியின் தங்கை சுடர் விழி வினோத்தை காதலிக்கிறாள் . ஆனால்  சிறு வயது முதலே அவளை அறிந்த வினோத் அவளை தங்கையாகவே  பார்க்கிறான் . 
 
இதனால் வினோத்துக்கும் சுடர் விழிக்கும் முட்டிக் கொள்கிறது 
 
வினோத்தை மணமகனாக ஏற்க முரளிக்கும் சம்மதம்தான் . ஆனால்  வினோத் மனம் மாற மறுக்கிறது . 
 
இந்த நிலையில் மதுவுக்கும் முரளிக்கும் புரிதல் வருகிறது .
 
ஆனால் பிற்படுத்தப்பட்ட வட சென்னை பையனான முரளியை ஏற்க , பிராமண  சமூக மதுவின் அப்பா அம்மாவுக்கு விருப்பம் இல்லை . 
 
எனவே “கல்யாணத்துக்கு முன் கர்ப்பம் ஆகி விட்டால் எங்க அம்மா அப்பா ஒத்துக்குவாங்க ” என்கிறாள் மது . 
 
மதுவின் உறவுக்காரத் தோழி அதற்கான ஏற்பாட்டை செய்கிறாள் . ஆனால் ஒரு வித மன உறுத்தல் காரணமாக முரளியால் அவ்வளவு திருப்தியாக செயல்பட முடியவில்லை . 
 
மதுவுக்கும்  கர்ப்பம் ஆக போதுமானதாக தோன்றவில்லை. 
 
மறுநாளும் திட்டமிட , அன்று முரளியின் அம்மாவின் நினைவு நாள் என்பதால் அவனுக்கு மனம் ஒப்பவில்லை . 
 
அவள் கோபப்பட , இவன் திட்ட இருவருக்கும் மீண்டும் முட்டிக் கொள்கிறது  
 
மது அம்மா அப்பா பார்த்த பையனையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மண மேடை வரை போக, 
 
வினோத்தை சம்மதிக்க வைத்து அவனுக்கும் தங்கைக்கும் கல்யாணம் செய்து வைக்கும் முரளி , மீண்டும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து  செல் போன் டவர் ஏற, 
 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் . 
 
அதாவது  ருசியாறும் அளவுக்கு இல்லாவிட்டாலும் பசியாறும் அளவுக்காவது மான்   நிஜமாகவே மேய்ந்ததா இல்லையா என்பதில் இருக்கிறது சமாச்சாரம் . 
 
 கார்த்திக் சுப்புராஜ் திரையரங்கில் வெளியிட்ட ஐந்து குறும்பட தொகுப்பில் மேற்படி இயக்குனர் ரத்னகுமாரே இயக்கி இடம் பெற்ற, 
 
மது என்ற குறும்படத்தின் முழு நீளப் படவடிவமே இந்த மேயாத மான் . 
 
எந்த எதிர்பார்ப்பையும் தராமல் ரசிகனை ஓர் அலட்சிய மனோபாவத்தில் வைத்து இயல்பாக துவங்கும் படம் அடுத்தடுத்து ஆச்சர்யங்களை அள்ளித்  தருகிறது . 
 
மனதில் மறைத்துப் பேசத் தெரியாத எளிய நடுத்தர  பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் பிரதிநிதிகளாக  முரளி , வினோத் கதாபாத்திரங்கள் அசத்துகின்றன என்றால் , 
 
முரளி தங்கை சுடர் விழியின் கதா பாத்திரம் அதில் சிகரம் . 
 
சுடர் விழி கதாபாத்திரத்துக்கான கேரக்டர் வடிவமைப்பு அபாரம் . அந்தக் கதாபாத்திரத்தின் நேர்மை காதலிக்கத் தோன்றுகிறது  .
 
சரியாக சொல்ல வேண்டும் என்றால் முள்ளும் மலரும் , கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு இவ்வளவு அழுத்தமான தங்கை கதாபாத்திரம் இதுதான் . 
 
இடையில் வந்த பல தமிழ் சினிமா  தங்கைகள் எல்லாம் சோடா புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு, ஹீரோ அண்ணனை கிண்டல் செய்து ,
 
அவன் செல்லமாக தலையில் கொட்டும்போது எல்லாம் ” அம்மா பாரும்மா இந்த அண்ணனை … ” என்று சிணுங்கிக் கொண்டு ,
 
லவ் லெட்டர் கொடுத்துக் கொண்டு அல்லது கர்ப்பவதியாகி செத்துக் கொண்டு …. இப்படிதான் இருந்தார்கள் 
 
அந்தக் கொடுமையை இந்த படத்தில் உடைத்து இருக்கிறார்கள் . 
 
நண்பனின் தங்கையை தங்கையாக நினைப்பதே நட்புக்கு உண்மையாக இருப்பது என்ற பண்புக்கு இலக்கணமாகவே வினோத் இருக்க ,
 
அவன் மீது காதல் வந்த நிலையில் அவன் தங்கை மாதிரி என்று சொல்லும்போது  சுடர்விழி கூனிக் குறுகி உடைந்து நொறுங்கி ….. அபாரமான கேரக்டர் அது . 
 
“தங்கச்சி தங்கச்சின்னு சொல்லிக்கிட்டு  சும்மா தொட்டுத் தொட்டுப் பேசற வேலை எல்லாம் வச்சுக்காத ”’என்று சுடர் விழி வெடித்து சொல்லும்போது, 
 
அந்த வார்தைகளை இயக்குனர் பயன்படுத்தி இருக்கும் விதம் , காரணம் , நோக்கம் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது . 
 
அவளை கண்டித்து அண்ணன் முரளி சொல்லும் காரணமும் வாழ்வியல் . 
 
சிறு வயது முதல் அறிந்த — அண்ணனின் நண்பனை காதலிப்பதை அண்ணனிடம் தலை நிமிர்ந்து சொல்லும் சுடர்விழியின் கம்பீரமும் நேர்மையும்  அருமை . 
 
சுடர்விழி வீட்டுக்கு வரும் மதுமிதா , வீட்டில் முன்னோரின் போட்டோவை வைக்கும் கலாச்சாரத்தை கற்றுக் கொண்டு போய், 
 
தன்  வீட்டில்  செயல்படுத்தும் காட்சி இயக்குனரின் நேரிய சீரிய சமூக நீதி சிந்தனையை உண்மை வரலாற்றை புரிய வைக்கிறது . 
 
அழுத்தமான மகிழ்வான கை குலுக்கல்கள் , கைதட்டல்கள் , பாராட்டுகள் இயக்குனர் ரத்னகுமார் . 
 
தமிழ் சினிமாவுக்கு நீங்கள் நிறைய தேவைப்படுகிறீர்கள் . சிவப்புக் கம்பள வரவேற்பு . 
 
     இயக்குனர் ரத்ன குமார்

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மத மாற்ற ஆர்வத்தை நகைச்சுவையாக சாடி இருப்பதும்வெடிச் சிரிப்பு . 

 
சின்னச் சின்ன கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் கூட இயக்குனர் காட்டி இருக்கும்  செய்நேர்த்தி அபாரம் .
 
உதாரணம் முரளியின் ஆர்க்கெஸ்ட்ராவில் இருப்பவர்களின் தோற்றம்  மற்றும் நடை உடை பாவனைகள் !
 
பிரதீப் குமார் , சந்தோஷ் நாராயணன் இருவரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது . 
 
சொன்ன வேலையை மட்டும் செய்திருக்கிறது ஒளிப்பதிவு . 
 
வைபவ் மிக இயல்பாக நடித்துள்ளார் . அவருக்கு கிடைத்துள்ள முதல் முழுமையான படம் இது . அதை உணர்ந்த அக்கறை அவர் நடிப்பில் தெரிகிறது . 
 
பிரியா பவானி ஷங்கர் அழகு .. நடிப்பும் !
 
வினோத்தாக வந்திருக்கும் விவேக் பிரசன்னா மிக இயல்பாக நடித்து கவர்கிறார் . 
 
சுடர் விழியாக நடித்துள்ள இந்துஜா அசத்துகிறார் . கேரக்டரை எதிர்கொள்ளும் விதத்தில் அந்தப் பெண்ணின் மனப்பாங்கு ( ஆட்டிடியூட்) அபாரம்.
 
இவரது நடிப்பை சிலாகிக்க இவரது கதாபாத்திர வடிவமைப்பும் ஒரு முக்கியக் காரணம் . 
 
இரண்டாவது பகுதி எக்ஸ்ட்ரா நீளமாக உணரப்படுகிறது . 
 
இரண்டாம் முறையாக முரளி செல் போன் டவர் ஏறும் காட்சியிலேயே மிச்சமுள்ள எல்லா முக்கிய விசயங்களையும்  சொல்லி, 
 
முடிந்த முடிவாகவோ அல்லது இப்போது படம் முடிவது போல முடிவில்லா முடிவாகவோ முடித்து இருக்கலாம் . 
 
ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு லீட் எடுப்பது நல்ல திரைக்கதை உத்திதான் . எனினும் அதற்கு ஒரு அளவு இருக்கணும்.
 
இப்படியே போனால் அப்புறம் வினோத்தும் சுடர் விழியும் கூட செல் போன் டவரில் ஏறலாமே ?
 
இப்படி ஒரு விஷயம் மட்டுமே இடிக்கிறது என்பதே , படம் எவ்வளவு சுவாரஸ்யமான படம் என்பதை உணர்த்துகிறது .
 
இப்படி ஒரு படத்தை தயாரித்த இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜுக்கு  பாராட்டுகள் . வாழ்த்துகள் ! 
 
பரபரப்பாக அட்டகாசமான மெர்சல் பார்த்த நிலையில் அடுத்து  ஓர்  அருமையான படம் தேடுவோர் அவசியம் போகலாம் இந்தப் படத்துக்கு . 
 
மேயாத மான் .. ரசிச்சு ருசிச்சு மேயலாம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *